வாழ்க்கையைப் பற்றிய எண்ணங்கள்

1விலையுயர்ந்த நறுமணத் தைலத்தை

விட நற்புகழே மேல்.

பிறந்த நாளைவிட

இறக்கும் நாளே சிறந்தது.

2விருந்து நடக்கும் வீட்டிற்குச்

செல்வதைவிடத்

துக்க வீட்டிற்குச் செல்வதே நல்லது.

ஏனெனில், அனைவருக்கும்

இதுவே முடிவு என்பதை உயிருடன்

இருப்போர் அங்கே உணர்ந்துகொள்வர்.

3சிரிப்பைவிடத் துயரமே நல்லது.

துயரத்தால் முகத்தில்

வருத்தம் தோன்றலாம்; ஆனால்,

அது உள்ளத்தைப் பண்படுத்தும்.

4ஞானமுள்ளவரின் உள்ளத்தில்

துக்க வீட்டின் நினைவே இருக்கும்;

மூடரின் உள்ளத்திலோ

சிற்றின்ப வீட்டின் நினைவே இருக்கும்.

5மூடர் புகழ்ந்துரைப்பதைக் கேட்பதினும்

ஞானி இடித்துரைப்பதைக்

கேட்பதே நன்று.

6மூடரின் சிரிப்பு, பானையின்கீழ்

எரியும் முட்செடி படபடவென்று

வெடிப்பதைப் போன்றது;

அதனால் பயன் ஒன்றுமில்லை.

7இடுக்கண் ஞானியையும்

பைத்தியக்காரனாக்கும்.

கைக்கூலி உள்ளத்தைக் கறைப்படுத்தும்.

8ஒன்றின் தொடக்கமல்ல,

அதன் முடிவே கவனிக்கத் தக்கது;

உள்ளத்தில் பெருமைகொள்வதைவிடப்

பொறுமையோடு இருப்பதே மேல்.

9உள்ளத்தில் வன்மத்திற்கு

இடங் கொடாதே;

மூடரின் நெஞ்சமே

வன்மத்திற்கு உறைவிடம்.

10“இக்காலத்தைவிட முற்காலம்

நற்காலமாயிருந்ததேன்?”

என்று கேட்காதே; இது

அறிவுடையோர் கேட்கும் கேள்வியல்ல.

11மரபுரிமைச் சொத்தோடு

ஞானம் சேர்ந்திருத்தல் வேண்டும்;

இதுவே உலகில் வாழும்

மக்களுக்கு நல்லது.

12பணம் நிழல் தருவதுபோல

ஞானமும் நிழல் தரும்;

ஞானம் உள்ளவருக்கு

அதனால் வாழ்வு கிடைக்கும்;

அறிவினால் கிடைக்கும் பயன் இதுவே.

13கடவுளின் செயலைச் சிந்தித்துப்பார்.

அவர் கோணலாக்கினதை

நேராக்க யாரால் இயலும்?

14வாழ்க்கை இன்பமாய் இருக்கும்போது மகிழ்ச்சியோடிரு; துன்பம் வரும்போது நீ நினைவில் கொள்ள வேண்டியது: ‘அடுத்து என்ன நடக்கும் என்பதை நீ தெரிந்துகொள்ளா வண்ணம் கடவுள், இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறி வரவிடுகிறார்’.
15என் பயனற்ற வாழ்க்கையில் நான் எல்லாவற்றையும் பார்த்து விட்டேன். நேர்மையானவர் நேர்மையுள்ளவராய் இருந்தும் மாண்டழிகிறார். தீயவரோ தீமை செய்கிறவராய் இருந்தும் நெடுங்காலம் வாழ்கிறார்.
16நேர்மையாய் நடப்பதிலும் ஞானத்தைப் பெறுவதிலும் வெறி கொண்டவராய் இராதீர். அந்த வெறியால் உம்மையே அழித்துக் கொள்வானேன்?
17தீமை செய்வதிலும் மூடராயிருப்பதிலும் வெறி கொண்டவராய் இராதீர். காலம் வருமுன் நீவிர் ஏன் சாகவேண்டும்?
18ஒன்றைப் பற்றிக்கொண்டிருக்கும்போது, அதற்கு மாறானதைக் கைவிட்டுவிடாதீர். நீவிர் கடவுளுக்கு அஞ்சி நடப்பீரானால் அனைத்திலும் வெற்றி பெறுவீர்.
19ஒரு நகருக்குப் பத்து ஆட்சியாளர் தரும் வலிமையைவிட, ஞானமுள்ளவருக்கு ஞானம் மிகுதியான வலிமை தரும்.
20குற்றமே செய்யாமல் நல்லதையே செய்யும் நேர்மையானவர் உலகில் இல்லை.
21பிறர் கூறுவதையெல்லாம் காதுகொடுத்துக் கேட்காதீர். அவ்வாறு செய்தால் உம் வேலைக்காரர் உம்மை இகழ்ந்ததையும் நீவிர் கேட்க நேரிடும்.
22நீவிர் எத்தனைமுறை பிறரை இகழ்ந்தீர் என்பது உமக்கே நன்றாய்த் தெரியும்.
23இவற்றையெல்லாம் என் ஞானத்தால் சீர்தூக்கிப் பார்த்தேன். நான் ஞானியாகிவிடுவேன் என்று நினைத்தேன்.
24ஆனால், என்னால் இயலாமற் போயிற்று. ஞானம் நெடுந் தொலையில் உள்ளது; மிக மிக ஆழமானது. அதை யாரால் கண்டுபிடிக்க முடியும்?
25நான் ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். ஞானத்தையும் காரண காரியத்தையும் பற்றிய விவரத்தை ஆராய்ந்து காண்பதில் சிந்தனையைச் செலுத்தினேன். கொடியவராயிருத்தல் மூடத்தனம் என்பதையும் மதிகேடரைப்போலச் செயல்புரிதல் அறிவுகெட்ட நடத்தை என்பதையும் தெரிந்துகொண்டேன்.
26சாவைவிடக் கசப்பானதொன்றைக் கண்டேன். அதுதான் பெண். அவள் உனக்குக் காட்டும் அன்பு ஒரு கண்ணியைப் போல அல்லது ஒரு வலையைப் போல உன்னைச் சிக்க வைக்கும்; உன்னைச் சுற்றிப் பிடிக்கும். அவளின் கைகள் சங்கிலியைப்போல உன்னை இறுக்கும். கடவுளுக்கு உகந்தவனே அவளிடமிருந்து தப்புவான். பாவியோ அவளின் கையில் அகப்படுவான்.
27“ஆம், நான் ஒன்றன்பின் ஒன்றாய் ஆராய்ந்து இதைக் கண்டுபிடித்தேன்” என்கிறார் சபை உரையாளர். வேறு ஆராய்ச்சிகளும் செய்தேன்; அவற்றால் மிகுந்த பயன் அடையவில்லை.
28ஆனால் ஒன்று தெரிந்தது. மனிதன் எனத் தக்கவன் ஆயிரத்தில் ஒருவனே என்று கண்டேன். பெண் எனத் தக்கவள் யாரையுமே நான் கண்டதில்லை.
29நான் தெரிந்துகொண்டதெல்லாம் இதுவே. கடவுள் மனிதரை நேர்மையுள்ளவராகவே படைத்தார். ஆனால் வாழ்க்கைச் சிக்கல்கள் அனைத்தும் மனிதர் தேடிக்கொண்டவையே.

7:1 நீமொ 22:1. 7:9 யாக் 1:19.