ஞானத்தினால் வரும் நன்மைகள்

1பிள்ளைகளே! தந்தையின் போதனைக்குச் செவிசாயுங்கள்; மெய்யுணர்வை அடையும்படி அதில் கவனம் செலுத்துங்கள்.
2நான் உங்களுக்கு நற்போதனை அளிக்கின்றேன்; நான் கற்பிப்பதைப் புறக்கணியாதீர்கள்;
3நான் என் தந்தையின் அருமை மைந்தனாய், தாய்க்குச் செல்லப் பிள்ளையாய் வளர்ந்து வந்தேன்.
4அப்பொழுது என் தந்தை எனக்குக் கற்பித்தது இதுவே: “நான் சொல்வதை உன் நினைவில் வை; என் கட்டளைகளை மறவாதே; நீ வாழ்வடைவாய்.
5ஞானத்தையும் மெய்யுணர்வையும் தேடிப் பெறு; நான் சொல்வதை மறந்துவிடாதே; அதற்கு மாறாக நடவாதே.
6ஞானத்தைப் புறக்கணியாதே; அது உன்னைப் பாதுகாக்கும்; அதை அடைவதில் நாட்டங்கொள்; அது உன்னைக் காவல் செய்யும்.
7ஞானத்தைத் தேடிப் பெறுவதே ஞானமுள்ள செயல்; உன் சொத்து எல்லாம் கொடுத்தாயினும் மெய்யுணர்வைத் தேடிப் பெறு.
8அதை உயர்வாய்க் கொள்; அது உன்னை உயர்த்தும்; அதை நீ தழுவிக்கொள்; அது உன்னை மாண்புறச் செய்யும்.
9அது உன் தலையில் மலர் முடியைச் சூட்டும்; மணிமுடி ஒன்றை உனக்கு அளிக்கும்.”
10பிள்ளாய்! கவனி; நான் சொல்வதை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன் ஆயுட்காலம் நீடிக்கும்.
11ஞானத்தின் வழிகளை உனக்குக் கற்பித்திருக்கின்றேன்; நேரிய பாதைகளில் உன்னை நடத்தி வந்தேன்.
12நீ நடக்கும்போது உன் கால் சறுக்காது ; நீ ஓடினாலும் இடறி விழமாட்டாய்.
13பெற்ற நற்பயிற்சியில் உறுதியாக நிலைத்துநில்; அதை விட்டுவிடாதே; அதைக் கவனமாய்க் காத்துக்கொள்; அதுவே உனக்கு உயிர்.
14பொல்லார் செல்லும் பாதையில் செல்லாதே; தீயோர் நடக்கும் வழியில் நடவாதே.
15அதன் அருகில் செல்லாதே; அதில் கால்வைக்காதே; அதை விட்டு விலகி உன் வழியே செல்.
16தீமை செய்தாலன்றி அவர்களுக்குத் தூக்கம் வராது; யாரையாவது கீழே வீழ்த்தினாலன்றி அவர்களுக்கு உறக்கம் வராது.
17தீவினையே அவர்கள் உண்ணும் உணவு; கொடுஞ் செயலே அவர்கள் பருகும் பானம்.
18நேர்மையாளரின் பாதை வைகறை ஒளி போன்றது; அது மேன்மேலும் பெருகி நண்பகலாகின்றது.
19பொல்லாரின் பாதையோ காரிருள் போன்றது; தாங்கள் எதில் இடறி விழுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது.
20பிள்ளாய்! என் வார்த்தைகளுக்குச் செவிகொடு; நான் சொல்வதைக் கவனி.
21உன் கவனத்தினின்று அவை விலகாதிருக்கட்டும்; உன் உள்ளத்தில் அவற்றைப் பதித்துவை.
22அவற்றைத் தேடிப் பெறுவோருக்கு அவை உயிரளிக்கும்; அவர்களுக்கு உடல் நலமும் தரும்.
23விழிப்பாயிருந்து உன் இதயத்தைக் காவல் செய்; ஏனெனில், அதனின்று பிறப்பவை உன் வாழ்க்கையின் போக்கை உறுதிசெய்யும்.
24நாணயமற்ற பேச்சு உன் வாயில் வரக்கூடாது; வஞ்சகச் சொல் உன் வாயில் எழக்கூடாது.
25உன் கண்கள் நேரே பார்க்கட்டும்; எதிரே இருப்பதில் உன் பார்வையைச் செலுத்து.
26நேர்மையான பாதையில் நட; அப்பொழுது, உன் போக்கு இடரற்றதாயிருக்கும்.
27வலப்புறமோ இடப்புறமோ திரும்பாதே; தீமையின் பக்கமே காலெடுத்து வைக்காதே.

4:26 எபி 12:13.