ஆண்டவருக்கு உகந்த வாழ்க்கை
1பிள்ளாய்! என் அறிவுரையை மறவாதே; என் கட்டளைகளை உன் இதயத்தில் இருத்திக்கொள்:
2அவை உனக்கு நீண்ட ஆயுளையும் பல்லாண்டு வாழ்வையும் நிலையான நலன்களையும் அளிக்கும்.
3அன்பும் வாய்மையும் உன்னிடம் குன்றாதிருப்பதாக! அவற்றைக் கழுத்தில் அணிகலனாய்ப் பூண்டுகொள்.
4அப்பொழுது, நீ கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவனாவாய்; அவர்களது நல்லெண்ணத்தையும் பெறுவாய்.
5முழு மனத்தோடு ஆண்டவரை நம்பு; உன் சொந்த அறிவாற்றலைச் சார்ந்து நில்லாதே.
6நீ எதைச் செய்தாலும் ஆண்டவரை மனத்தில் வைத்துச் செய்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செம்மையாக்குவார்.
7உன்னை நீ ஒரு ஞானி என்று எண்ணிக்கொள்ளாதே; ஆண்டவருக்கு அஞ்சித் தீமையை அறவே விலக்கு.
8அப்பொழுது உன் உடல், நலம் பெறும்; உன் எலும்புகள் உரம் பெறும்.
9உன் செல்வத்தைக்கொண்டு அவரைப் போற்று; உன் விளைச்சல்கள் எல்லாவற்றின் முதற்பலனையும் ஆண்டவருக்குக் காணிக்கையாக்கு.
10அப்பொழுது உன் களஞ்சியங்கள் நிறைந்திருக்கும்; குடங்களில் திராட்சை இரசம் வழிந்தோடும்.
11பிள்ளாய்! ஆண்டவர் உன்னைக் கண்டித்துத் திருத்துவதை வேண்டாமென்று தள்ளி விடாதே; அவர் கண்டிக்கும்போது அதைத் தொல்லையாக நினையாதே.
12தந்தை தன் அருமை மகனை கண்டிப்பதுபோல், ஆண்டவர் தாம் யாரிடம் அன்புகொண்டிருக்கின்றாரோ அவர்களைக் கண்டிக்கின்றார்.
ஞானத்தின் மேன்மை
13ஞானத்தைத் தேடி அடைந்தோர் நற்பேறு பெற்றோர்; மெய்யறிவை அடைந்தோர் நற்பேறு பெற்றோர்;
14வெள்ளியைவிட ஞானமே மிகுநலன் தருவது; பொன்னைவிட ஞானத்தால் வரும் செல்வம் மேலானது.
15ஞானம் பவளத்தைவிட விலைமதிப்புள்ளது; உன் அரும்பொருள் எதுவும் அதற்கு நிகராகாது.
16அதன் வலக்கை நீடித்த ஆயுளை அருள்கின்றது; அதன் இடக்கை செல்வமும் மேன்மையும் கிடைக்கச் செய்கின்றது.
17அதன் வழிகள் இன்பம் தரும் வழிகள்; அதன் பாதைகள் யாவும் நலம் தருபவை.
18தன்னை அடைந்தோர்க்கு அது வாழ்வெனும் கனிதரும் மரமாகும்; அதனைப் பற்றிக்கொள்வோர் நற்பேறு பெற்றோர்.
19ஆண்டவர் ஞானத்தால் பூவுலகிற்கு அடித்தளமிட்டார்; விவேகத்தால் வானங்களை நிலைபெறச் செய்தார்.
20அவரது அறிவாற்றலால் நிலத்தின் அடியிலிருந்து நீர் பொங்கி எழுகின்றது; வானங்கள் மழையைப் பொழிகின்றன.
21பிள்ளாய்! விவேகத்தையும் முன்மதியையும் பற்றிக்கொள்; இவற்றை எப்போதும் உன் கண்முன் நிறுத்தி வை.
22இவை உனக்கு உயிராகவும், உன் கழுத்துக்கு அணிகலனாகவும் இருக்கும்.
23நீ அச்சமின்றி உன் வழியில் நடப்பாய்; உன் கால் ஒருபோதும் இடறாது.
24நீ படுக்கப்போகும் போது உன் மனத்தில் அச்சமிராது; உன் படுக்கையில் நீ அயர்ந்து தூங்குவாய்.
25பொல்லார் திகிலடைவதையும் அவர்களுக்கு அழிவு வருவதையும் காணும்போது நீ அஞ்சாதே.
26ஆண்டவர் உனக்குப் பக்கத்துணையாய் இருப்பார்; உன் கால் கண்ணியில் சிக்காதபடி உன்னைக் காப்பார்.
27உன்னால் நன்மை செய்யக் கூடுமாயின், தேவைப்படுபவர்க்கு அந்த நன்மையைச் செய்ய மறுக்காதே.
28அடுத்திருப்பார் உன்னிடம் கேட்கும் பொருளை நீ வைத்துக் கொண்டே, ‘போய் வா, நாளைக்குத் தருகிறேன்’ என்று சொல்லாதே.
29அடுத்திருப்பார்க்கு தீங்கிழைக்கத் திட்டம் தீட்டாதே; அவர்கள் உன் அருகில் உன்னை நம்பி வாழ்கின்றவர்கள் அல்லவா?
30ஒருவர் உனக்கு ஒரு தீங்கும் செய்யாதிருக்கும்போது, அவரை வீண் வாதத்திற்கு இழுக்காதே.
31வன்முறையாளரைக் கண்டு பொறாமை கொள்ளாதே; அவர்களுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதே.
32ஏனெனில், நேர்மையற்றோரை ஆண்டவர் அருவருக்கின்றார்; நேர்மையாளரோடு அவர் உறவுகொள்கின்றார்.
33பொல்லாரது வீட்டின்மேல் ஆண்டவரது சாபம் விழும்; அவருக்கு அஞ்சி நடப்போரின் உறைவிடங்களில் அவரது ஆசி தங்கும்.
34செருக்குற்றோரை அவர் இகழ்ச்சியுடன் நோக்குவார்; தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்;
35ஞானமுள்ளவர்கள் தங்களுக்குரிய நன்மதிப்பைப் பெறுவார்கள்; அறிவிலிகளோ இகழப்படுவார்கள்.
3:4 லூக் 2:52. 3:7 உரோ 12:16. 3:11 யோபு 5:17; எபி 12:5-6. 3:12 திவெ 3:19. 3:34 யாக் 4:6; 1 பேது 5:5.