ஓய்வுநாள் பற்றிய ஒழுங்கு முறைகள்

1மோசே இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் ஒன்றுதிரட்டி அவர்களை நோக்கி, “நீங்கள் கடைப்பிடிக்கும்படி ஆண்டவர் கட்டளையாகத் தந்துள்ள வார்த்தைகள் இவைகளே:
2ஆறு நாள்கள் நீங்கள் வேலை செய்யலாம். ஏழாம் நாளோ, ஆண்டவருக்காக நீங்கள் ஓய்ந்திருக்க வேண்டிய புனிதமான ‘சாபாத்து’; அன்று வேலை செய்பவன் எவனும் கொல்லப்பட வேண்டும்.
3ஓய்வு நாளில் உங்கள் உறைவிடங்கள் எதிலும் நெருப்பு மூட்டக் கூடாது” என்றார்.

கூடாரத்திற்கான காணிக்கைகள்
(விப 25:1-9)

4மீண்டும் மோசே இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் பின்வருமாறு கூறினார்: “நீங்கள் கடைப்பிடிக்கும்படி ஆண்டவர் கட்டளையாகத் தந்துள்ள வார்த்தைகள் இவைகளே;
5ஆண்டவருக்காக உங்களிடமிருந்து காணிக்கை எடுத்துக் கொள்ளுங்கள். தாராளமனமுடையோர் அனைவரும் ஆண்டவருக்காகக் கொண்டு வரவேண்டிய காணிக்கைகளாவன; பொன், வெள்ளி, வெண்கலம்,
6நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிறநூல், மெல்லிய நார்ப்பட்டு, வெள்ளாட்டு உரோமம்,
7செந்நிறப் பதனிட்ட ஆட்டுக்கிடாய்த் தோல்கள், வெள்ளாட்டுத் தோல்கள், சித்திம்மரம்,
8விளக்குக்கான எண்ணெய், திருப்பொழிவு எண்ணெய்க்கும் தூபத்துக்கும் தேவையான நறுமணவகைகள்,
9ஏப்போதுக்கும், மார்புப் பட்டைக்கும் தேவையான பன்னிற மணிக்கற்கள், பதித்து வைக்கும் கற்கள்.

கூடாரத்திற்கான பொருள்கள்
(விப 39:32-43)

10மேலும், உங்களுள் திறன்படைத்தோர் அனைவரும் ஆண்டவர் கட்டளையிட்ட அனைத்தையும் செய்ய முன்வரட்டும். அவையாவன;
11திருஉறைவிடம், அதன் கூடாரம், மேல் விரிப்பு, கொக்கிகள், சட்டங்கள், குறுக்குச் சட்டங்கள், தூண்கள், பாதப்பொருத்துக்கள்,
12பேழை, அதன் தண்டுகள், இரக்கத்தின் இருக்கை, அதை மறைக்கும் தொங்குதிரை,
13மேசை, அதன் தண்டுகள், அனைத்துத் துணைக்கலன்கள், திருமுன்னிலை அப்பம்,
14ஒளிவிளக்குத் தண்டு, அதன் துணைக்கலன்கள், அகல்கள், விளக்குக்கான எண்ணெய்,
15தூபப் பீடம், அதன் தண்டுகள், திருப்பொழிவு எண்ணெய், நறுமணத்தூபம், கூடார வாயிலிலுள்ள தொங்குதிரை,
16எரிபலிபீடம், அதன் வெண்கல வலைப்பின்னல், தண்டுகள், துணைக் கலன்கள், தண்ணீர்த் தொட்டி, அதன் ஆதாரம்,
17முற்றத்தின் திரைகள், அங்குள்ள தூண்கள், பாதப்பொருத்துகள், முற்றத்தின் வாயிலுக்கான தொங்குதிரை,
18திரு உறைவிடத்திற்கான முளைகள், முற்றத்திற்கான முளைகள், அவற்றின் கயிறுகள்,
19திருத்தலப் பணிவிடைக்காக அழகுறப்பின்னப்பட்ட உடைகள், குரு ஆரோனுக்கான திரு உடைகள், குருத்துவப் பணிக்காக அவன் புதல்வருக்குரிய உடைகள் ஆகியவைகளே.

மக்கள் காணிக்கை கொணர்தல்

20பின்னர், இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதும் மோசே முன்னிருந்து அகன்றது.
21உள்ளார்வம் உடையோர், உள்ளுணர்வால் உந்தப்பெற்றோர் அனைவரும் முன்வந்து சந்திப்புக் கூடார வேலைக்காகவும், அதிலுள்ள அனைத்துத் திருப்பணிகளுக்காகவும் திருவுடைகளுக்காகவும் ஆண்டவருக்குக் காணிக்கை கொடுத்தனர்.
22ஆண்களும் பெண்களுமாகத் தாராள மனமுடையோர் அனைவரும் காப்புகள், காதணிகள், மோதிரங்கள், அணிகலன்கள் ஆகிய பொன்கலன்கள் அனைத்தையும் கொண்டு வந்தனர். யாவரும் அப்பொன்னை ஆரத்திப்பலியாக ஆண்டவருக்கு உயர்த்தினர்.
23அவர்கள் தம்மிடம் காணப்பட்ட நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிறநூல், மெல்லிய நார்ப்பட்டு, வெள்ளாட்டு உரோமம், செந்நிறமாகப் பதனிடப்பட்ட ஆட்டுக் கிடாய்த் தோல்கள், வெள்ளாட்டுத் தோல்கள் ஆகியவற்றையும் கொண்டு வந்தனர்.
24வெள்ளியையும் வெண்கலத்தையும் காணிக்கையாகக் கொண்டு வர முடிந்தவர் அனைவரும் அவற்றை ஆண்டவருக்குக் காணிக்கையாகக் கொண்டு வந்தனர். ஏதாவது வேலைக்குப் பயன்படக் கூடிய சித்திம்மரம் யாரிடமாவது காணப்பட்டால், அதையும் அவர்கள் கொண்டு வந்தனர்.
25திறன் மிக்க பெண்களெல்லாம் தங்கள் கைகளாலேயே நூல் நூற்று, நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிறநூல், மெல்லிய நார்ப்பட்டு ஆகியவற்றை நெய்து கொண்டு வந்தனர்.
26உள்ளார்வமும் திறனும் உடைய பெண்கள் அனைவரும் வெள்ளாட்டு உரோமத்தால் நெய்தார்கள்.
27ஏப்போதுக்கும் மார்புப் பட்டைக்கும் வேண்டிய பன்னிற மணிக்கற்களையும், பதிக்கும் கற்களையும்,
28திருப்பொழிவு எண்ணெய்க்கும் நறுமணத் தூபத்துக்கும் தேவையான பரிமள வகைகளையும், விளக்குக்கு எண்ணெயையும் தலைவர்கள் கொண்டு வந்தார்கள்.
29ஆண்டவர் மோசே வழியாகச் செயல்படுத்த வேண்டுமென்று கட்டளையிட்டிருந்த அனைத்துப் பணிகளுக்கும் தேவையானவற்றைக் கொண்டுவருமாறு, ஆண் பெண் அனைவரும் உள்ளார்வத்தால் தூண்டப்பட்டனர். இவ்வாறு, இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்குத் தன்னார்வக் காணிக்கை கொண்டு வந்தனர்.

கூடாரக் கலைஞர்கள்
(விப 31:1-11)

30மோசே இஸ்ரயேல் மக்களை நோக்கி, “ஆண்டவர் தாமே கூர் என்பவரின் மகனான ஊரியின் புதல்வன் பெட்சலேலைப் பெயர் சொல்லி அழைத்திருப்பதைப் பாருங்கள்.
31ஞானம், அறிவுக்கூர்மை, அனுபவம், தொழில் திறமை அனைத்தும் உண்டாகுமாறு அவரை இறை ஆவியால் நிரப்பியுள்ளார்.
32திட்டமிடும் நுட்பத்தால் பொன் வெள்ளி வெண்கல வேலை செய்யவும்,
33பதிக்க வேண்டிய கற்களுக்குப் பட்டை தீட்டவும், மரத்தைச் செதுக்கவும், மற்றெல்லாவித நுண்ணிய வேலைகள் செய்யவும் அருளியுள்ளார்.
34கற்பிக்கும் திறமையையும் அவர் உள்ளத்தில் வைத்துள்ளார். அதே திறமையைத் தாண்குலத்தைச் சார்ந்த அகிசமாக்கின் மகன் ஒகொலியாபுக்கும் அருளியுள்ளார்.
35உலோக வேலை; கலை வேலை அனைத்தையும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலிலும், மெல்லிய நார்ப்பட்டிலும் செய்யும் பூந்தையல் வேலையையும், பின்னல் வேலையையும், அனைத்துத் தொழிலையும் திட்டமிடும் நுட்ப வேலையையும் செய்வதற்குரிய உயர் திறனால் அவர்களை நிரப்பியுள்ளார்” என்றார்.

35:2 விப 20:8-11; 23:12; 31:15; 34:21; லேவி 23:3; இச 5:12-14.