பொற்கன்று
(எண் 9:6-29)

1மோசே மலையினின்று இறங்கிவரத் தாமதித்ததைக் கண்ட மக்கள் ஆரோனைச் சுற்றிக் கூட்டம் கூடி அவரை நோக்கி, “எகிப்து நாட்டினின்று எங்களை நடத்தி வந்த அந்த ஆள் மோசேக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை. நீர் முன்வந்து எங்களை வழிநடத்தும் தெய்வங்களை எங்களுக்கு உருவாக்கிக்கொடும்” என்றனர்.
2ஆரோன் அவர்களை நோக்கி, “உங்கள் மனைவியர், புதல்வர் புதல்வியரின் பொற்காதணிகளைக் கழற்றி, அவற்றை என்னிடம் கொண்டு வாருங்கள்” என்றார்.
3அவ்வாறே, மக்கள் எல்லோரும் தங்கள் பொற் காதணிகளைக் கழற்றி, அவற்றை ஆரோனிடம் கொண்டு வர,
4அவரும் அவர்கள் கையிலிருந்து அவற்றைப் பெற்றுக் கொண்டு, உருக்கி, வார்ப்பு அச்சில் வடிவம் கொடுத்து, ஒரு வார்ப்புக் கன்றுக்குட்டியைச் செய்தார். அப்போது அவர்கள், “இஸ்ரயேலே! உன்னை எகிப்து நாட்டினின்று நடத்தி வந்த உன் தெய்வங்கள் இவையே” என்றனர்.
5இதனைக் கண்ட ஆரோன் அதற்கு எதிரே ஒரு பலிபீடம் கட்டி, “நாளைய தினம் ஆண்டவரின் விழா” என்று அறிவித்தார்.
6மறுநாள் அதிகாலையில் அவர்கள் எழுந்து எரிபலிகள் செலுத்தினர். நல்லுறவுப் பலிகளையும் கொண்டு வந்தனர். பின்னர், மக்கள் அமர்ந்து உண்டு குடித்தனர்; எழுந்து மகிழ்ந்து ஆடினர்.
7அப்போது ஆண்டவர் மோசேயை நோக்கி, “இங்கிருந்து இறங்கிப்போ. நீ எகிப்திலிருந்து நடத்திவந்த உன் மக்கள் தங்களுக்குக் கேடு வருவித்துக்கொண்டனர்.
8நான் கட்டளையிட்ட நெறியிலிருந்து இதற்குள்ளாகவே விலகி அவர்கள் தங்களுக்கென ஒரு கன்றுக் குட்டியை வார்த்துக் கொண்டார்கள். அதற்கு வழிபாடு செய்து, பலியிட்டு, ‘இஸ்ரயேலே, எகிப்து நாட்டினின்று உன்னை நடத்தி வந்த தெய்வங்கள் இவையே’ என்று கூறிக் கொள்கிறார்கள்” என்றார்.
9மேலும், ஆண்டவர் மோசேயிடம், “இம் மக்களை எனக்குத் தெரியும்; வணங்காக்கழுத்துள்ள மக்கள் அவர்கள்.
10இப்போது என்னை விட்டுவிடு. அவர்கள்மேல் என் கோபக்கனல் மூண்டிருப்பதால் நான் அவர்களை அழித்தொழிக்கப் போகிறேன். உன்னையோ பேரினமாக்குவேன்” என்றார்.
11அப்போது மோசே தம் கடவுளாகிய ஆண்டவர்முன் மன்றாடி, “ஆண்டவரே, மிகுந்த ஆற்றலோடும் வலிமைமிகு கரத்தோடும் நீர்தாமே எகிப்து நாட்டிலிருந்து கொண்டுவந்த உம் மக்களுக்கு எதிராக உம் கோபம் மூள்வது ஏன்?
12“மலைகளில் அவர்களைச் சாகடிப்பதற்கும் மண்ணிலிருந்து அவர்களை அழித்தொழிப்பதற்குமாக வஞ்சகமாய் ஆண்டவர் அவர்களைக் கூட்டிச் சென்றார்” என்று எகிப்தியர் சொல்ல இடம் தருவானேன்? உமது கடுஞ்சினத்தை விட்டுவிட்டு உம் மக்களுக்குத் தீங்கிழைக்கும் எண்ணத்தை மாற்றிக் கொள்ளும்.
13உம் அடியாராகிய ஆபிரகாமையும், ஈசாக்கையும், இஸ்ரயேலையும் நினைந்தருளும். நான் உன் வழிமரபினரை விண்மீன்கள் போல் பெருகச் செய்வேன். நான் வாக்களித்த இந்நாடு முழுவதையும் உன் வழிமரபினருக்கு அளிப்பேன்; அவர்கள் அதை எனறென்றும் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர் என்று நீராகவே அவர்களுக்கு ஆணையிட்டு அறிவித்துள்ளீரே” என்று வேண்டிக்கொண்டார்.
14அவ்வாறே, ஆண்டவரும் தம் எண்ணத்தை மாற்றிக் கொண்டு தம் மக்களுக்குச் செய்யப்போவதாக அறிவித்த தீங்கைச் செய்யாது விட்டுவிட்டார்.
15மோசே திரும்பி மலையிலிருந்து இறங்கி வந்தார். முன்பின் இருபுறமும் எழுதப்பட்ட உடன்படிக்கைப் பலகைகள் இரண்டும் அவர் கையில் இருந்தன.
16அப்பலகைகள் கடவுளால் செய்யப்பட்டவை. பலகைகள் மேல் பொறிக்கப்பட்டிருந்த எழுத்தும் கடவுள் எழுதியதே.
17அந்நேரத்தில் மக்கள் எழுப்பிய கூச்சலைக் கேட்ட யோசுவா மோசேயை நோக்கி, “இது பாளையத்திலிருந்து எழும் போர்முழக்கம்” என்றார்.
18அதற்கு மோசே, “இது வெற்றி முழக்கமோ தோல்விக் குரலோ அன்று. பாட்டொலிதான் எனக்குக் கேட்கிறது” என்றார்.
19பாளையத்தை அவர் நெருங்கிவந்தபோது கன்றுக் குட்டியையும் நடனங்களையும் கண்டார். மோசேக்குச் சினம் மூண்டது. அவர் தம் கையிலிருந்த பலகைகளை மலையடிவாரத்தில் வீசியெறிந்து உடைத்துப் போட்டார்.
20அவர்கள் செய்து வைத்திருந்த கன்றுக்குட்டியை எடுத்து நெருப்பில் சுட்டெரித்து மிருதுவான பொடியாகு மட்டும் அதை இடித்துத் தண்ணீரில் தூவி, இஸ்ரயேல் மக்களைக் குடிக்கச் செய்தார்.
21பின்னர் மோசே ஆரோனை நோக்கி, “இம்மக்கள் உமக்கு என்ன செய்தார்கள்? இவர்கள்மேல் பெரும் பாவம் வந்துசேரச் செய்து விட்டீரே!” என்று கேட்டார்.
22அதற்கு ஆரோன், “என் தலைவராகிய நீர் சினம் கொள்ள வேண்டாம். இம்மக்கள் பொல்லாதவர்கள் என்பது உமக்குத் தெரியுமே!
23அவர்கள் என்னை நோக்கி, ‘எங்களுக்கு வழிகாட்டும் தெய்வங்களைச் செய்துகொடும். எங்களை எகிப்து நாட்டினின்று நடத்தி வந்த அந்த ஆள் மோசேக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை’ என்றனர்.
24நானும் அவர்களிடம் ‘பொன் அணிந்திருப்பவர்கள் கழற்றித் தாருங்கள்’ என்றேன். அவர்களும் என்னிடம் தந்தனர். நான் அதனை நெருப்பில்போட, இந்தக் கன்றுக்குட்டி வெளிப்பட்டது” என்றார்.
25ஆரோன் மக்களைக் கட்டுப்பாடின்றி விட்டுவிட்டதால், தங்கள் எதிரிகள் ஏளனம் செய்யும் அளவுக்கு அவர்கள் மனம்போனபோக்கில் நடப்பதை மோசே கண்டார்.
26பாளையத்தின் நுழைவாயிலில் மோசே நின்று கொண்டு, “ஆண்டவரது பக்கம் உறுதியாய் இருப்போர் என்னிடம் வாருங்கள்” என்றார். லேவியர் அனைவரும் அவரிடம் வந்துகூடினர்.
27அவர் அவர்களை நோக்கி; “இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர் கூறுவது இதுவே; ஒவ்வொருவனும் தன் வாளை இடையில் செருகிக்கொண்டு, பாளையத்திற்குள் சுற்றிவந்து, வாயில்வாயிலாகக் கடந்து சென்று தன் சகோதரனையும், தன் நண்பனையும், தனக்கு அடுத்திருப்பனையும் வெட்டி வீழ்த்த வேண்டும்” என்றார்.
28மோசேயின் வாக்குக் கிணங்க லேவியர் செயல்பட்டதால், அந்நாளில் மக்களுள் ஏறத்தாழ மூவாயிரம் பேர் மடிந்தனர்.
29மோசே, ‘புதல்வன், சகோதரன் என்று பாராது நீங்கள் செயல்பட்டு, அவருக்காக* இன்று உங்களை அர்ப்பணம் செய்து கொண்டீர்கள்.* இதை முன்னிட்டு ஆண்டவர் உங்கள் மேல் ஆசி பொழிந்துள்ளார்” என்றார்.
30மறுநாள் மோசே மக்களை நோக்கி, “நீங்கள் பெரும்பாவம் செய்துவிட்டீர்கள்; இப்போது நான் மலைமேலேறி ஆண்டவரிடம் செல்லப்போகிறேன். அங்கே ஒரு வேளை உங்கள் பாவத்திற்காக நான் கழுவாய் செய்யஇயலும்” என்றார்.
31அவ்வாறே மோசே ஆண்டவரிடம் திரும்பிவந்து, “ஐயோ, இம்மக்கள் தங்களுக்காகப் பொன்னால் தெய்வங்களை உருவாக்கிப் பெரும்பாவம் செய்துவிட்டார்கள்.
32இப்போதும், நீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளும். இல்லையேல், நீர் எழுதிய உம் நூலிலிருந்து என் பெயரை நீக்கிவிடும்” என்றார்.
33ஆண்டவரோ மோசேயிடம், “எவன் எனக்கு எதிராகப் பாவம் செய்தானோ, அவனையே என் நூலிலிருந்து நீக்கிவிடுவேன்.
34நீ இப்போதே புறப்பட்டுப் போ. உன்னிடம் நான் கூறியுள்ளபடி மக்களை நடத்திச் செல். இதோ என் தூதர் உன் முன்னே செல்வார். ஆயினும் நான் தண்டனைத்தீர்ப்பு வழங்கும் நாளில் அவர்கள் பாவத்தை அவர்கள் மேலேயே சுமத்துவேன்” என்றார்.
35ஆரோன் செய்த கன்றுக்குட்டி மக்களால் உருவாக்கப்பட்டதால் ஆண்டவர் அவர்கள்மேல் கொள்ளைநோயை அனுப்பினார்.

32:1 திப 7:40. 32:4 1 அர 12:28; திப 7:41. 32:6 1 கொரி 10:7. 32:11-14 எண் 14:13-19. 32:13 தொநூ 22:16-17; 17:18. 32:32 திபா 69:28; திவெ 3:5.
32:29 *…* ‘இன்று உங்களை அர்ப்பணம் செய்து கொள்ளுங்கள்’ என்பது எபிரேய பாடம்.