பாஸ்கா-கடந்து செல்லல்
1எகிப்து நாட்டில் ஆண்டவர் மோசேக்கும் ஆரோனுக்கும் பின்வருமாறு கூறினார்:
2உங்களுக்கு மாதங்களில் தலையாயது இம்மாதமே! ஆண்டில் உங்களுக்கு முதல் மாதமும் இதுவே!
3இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் நீங்கள் அறிவியுங்கள்; அவர்கள் இம்மாதம் பத்தாம்நாள், குடும்பத்துக்கு ஓர் ஆடு, வீட்டிற்கு ஓர் ஆடு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்.
4ஓர் ஆட்டினை உண்ண ஒரு வீட்டில் போதிய ஆள்கள் இல்லையெனில், உண்போரின் எண்ணிக்கைக்கும் உண்ணும் அளவுக்கும் ஏற்ப அண்டை வீட்டாரைச் சேர்த்துக்கொள்ளட்டும்.
5ஆடு குறைபாடற்றதாக, கிடாயாக, ஒரு வயது குட்டியாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுப்பது வெள்ளாடாகவோ செம்மறியாடாகவோ இருக்கலாம்.
6இம்மாதம் பதினான்காம் நாள்வரை அதை வைத்துப் பேணுங்கள். அந்நாள் மாலை மங்கும் வேளையில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் அனைத்துச் சபையும் அதை வெட்ட வேண்டும்.
7இரத்தத்தில் சிறிதளவு எடுத்து, உண்ணும் வீடுகளின் இரு கதவு நிலைகளிலும், மேல் சட்டத்திலும் பூச வேண்டும்.
8இறைச்சியை அந்த இரவிலேயே உண்ணவேண்டும். நெருப்பில் அதனை வாட்டி, புளிப்பற்ற அப்பத்தோடும் கசப்புக் கீரையோடும் உண்ண வேண்டும்.
9அதைப் பச்சையாகவோ நீரில் வேகவைத்தோ உண்ணாமல், தலைகால்கள், உட்பாகங்கள் முழுவதுமாக நெருப்பில் வாட்டி, அதனை உண்ணுங்கள்.
10அதில் எதையுமே விடியற்காலைவரை மீதி வைக்கவேண்டாம். காலைவரை எஞ்சியிருப்பதை நெருப்பால் சுட்டெரியுங்கள்.
11நீங்கள் அதனை உண்ணும் முறையாவது: இடையில் கச்சை கட்டி, கால்களில் காலணி அணிந்து, கையில் கோல் பிடித்து விரைவாக உண்ணுங்கள். இது ‘ஆண்டவரின் பாஸ்கா’.
12ஏனெனில், நான் இன்றிரவிலேயே எகிப்து நாடெங்கும் கடந்து சென்று, எகிப்து நாட்டில் மனிதர் தொடங்கி விலங்குவரை அனைத்து ஆண்பால் தலைப்பிறப்பையும் சாகடிப்பேன். எகிப்தின் தெய்வங்கள் அனைத்தின்மேலும் நான் தீர்ப்பிடுவேன். நானே ஆண்டவர்!
13இரத்தம் நீங்கள் இருக்கும் வீடுகளில் உங்களுக்கு அடையாளமாக இருக்கும். நான் இரத்தத்தைக் கண்டு உங்களைக் கடந்து செல்வேன். எகிப்து நாட்டில் நான் அவர்களைச் சாகடிக்கும்போது, கொல்லும் கொள்ளை நோய் எதுவும் உங்கள்மேல் வராது.
புளிப்பற்ற அப்ப விழா
14இந்நாள் உங்களுக்கு ஒரு நினைவு நாளாக விளங்கும். இதனை ஆண்டவரின் விழாவாக நீங்கள் தலைமுறை தோறும் கொண்டாடுங்கள். இந்த விழா உங்களுக்கு நிலையான நியமமாக இருப்பதாக!
15ஏழு நாள்களுக்குப் புளிப்பற்ற அப்பங்களையே உண்ணுங்கள்! முதல் நாளிலேயே புளித்த மாவை உங்கள் வீடுகளிலிருந்து அகற்றி விடுங்கள். ஏனெனில் முதல் நாள் தொடங்கி ஏழாம் நாள்வரை புளித்த அப்பத்தை உண்பவன் இஸ்ரயேலிலிருந்து விலக்கி வைக்கப்படுவான்.
16முதல் நாளிலும், ஏழாம் நாளிலும் நீங்கள் புனித அவை கூடுவதற்கு அழையுங்கள். இந்நாள்களில் எவ்வேலையும் செய்ய வேண்டாம்; ஒவ்வொருவரும் உண்ணத் தேவையானதை மட்டும் நீங்கள் தயார் செய்யலாம்.
17புளிப்பற்ற அப்ப விழாவை நீங்கள் கொண்டாடிவர வேண்டும். ஏனெனில், இந்த நாளில்தான் உங்கள் படைத்திரளை நான் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறச் செய்தேன். நீங்கள் இந்நாளைத் தலைமுறைதோறும் கொண்டாடி, நிலையான நியமமாகக் கொள்ளுங்கள்.
18முதல் மாதத்தின் பதினான்காம் நாள் மாலை தொடங்கி அம்மாதத்தின் இருபத்தொன்றாம் நாள் மாலைவரை புளிப்பற்ற அப்பம் உண்ணுங்கள்.
19ஏழு நாள்களாக உங்கள் வீடுகளில் புளித்த மாவு காணப்படவே கூடாது. ஏனெனில், புளித்த அப்பத்தை உண்பவன், அந்நியனானாலும் நாட்டின் குடிமகனானாலும், இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பிலிருந்து விலக்கி வைக்கப்படுவான்.
20நீங்கள் புளித்த அப்பம் உண்ணாமல் உங்கள் உறைவிடங்களில் எல்லாவற்றிலும் புளிப்பற்ற அப்பத்தையே உண்ணுங்கள்.
முதல் பாஸ்கா
21மோசே இஸ்ரயேலின் பெரியோர்கள் அனைவரையும் அழைத்து அவர்களிடம் கூறியது: “நீங்கள் போய் உங்கள் குடும்பங்களுக்குத் தேவையானபடி ஓர் ஆட்டுக்குட்டியைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு பாஸ்கா ஆட்டினை அடியுங்கள்.
22ஈசோப்புக் கொத்தை எடுத்து கிண்ணத்திலுள்ள இரத்தத்தில் அதைத் தோய்த்து, கதவின் மேல்சட்டத்திலும் இரு நிலைக்கால்களிலும் கிண்ணத்திலுள்ள இரத்தத்தைப் பூசுங்கள். காலைவரையிலும் தன் வீட்டின் கதவைத் தாண்டி உங்களில் எவனும் வெளியே போகக் கூடாது.
23ஆண்டவர் எகிப்தைத் தாக்குமாறு கடந்து செல்கையில், கதவின் மேல்சட்டத்திலும் இரு நிலைக்கால்களிலும் இரத்தத்தைக்கண்டு அக்கதவைக் கடந்து செல்வார். ‘அழிப்பவன்’ உங்கள் வீடுகளில் புகுந்து தாக்குமாறு அவர் அனுமதிக்கமாட்டார்.
24இவ்வார்த்தையை நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நிலையான நியமமாகக் கடைப்பிடியுங்கள்.
25ஆண்டவர் வாக்களித்தபடியே அவர் உங்களுக்குத் தரவிருக்கும் நாட்டிற்குள் நீங்கள் வந்து சேர்ந்தபின், இவ்வழிபாட்டை நீங்கள் நிறைவேற்றி வாருங்கள்.
26உங்கள் பிள்ளைகள் உங்களைப் பார்த்து, ‘இவ்வழிபாட்டின் கருத்து என்ன?’ என்று கேட்கும்போது,
27நீங்கள், ‘இது ஆண்டவரின் பாஸ்காப் பலி; அவர் எகிப்தியரைச் சாகடித்தபோது எகிப்திலுள்ள இஸ்ரயேல் மக்களின் வீடுகளைக் கடந்து சென்றார்; இவ்வாறு நம் வீடுகளுக்கு அவர் மீட்பளித்தார்’ என்று கூறுங்கள்.” மக்களும் தலைவணங்கித் தொழுதனர்.
28இஸ்ரயேல் மக்கள் போய், மோசேக்கும் ஆரோனுக்கும் ஆண்டவர் கட்டளையிட்டபடி செய்தனர்.
தலைமகன் சாவு
29நள்ளிரவில் அரசனாக இருந்த பார்வோனின் தலைமகன் தொடங்கி சிறையில் கிடந்த கைதியின் தலைமகன்வரை எகிப்து நாட்டின் எல்லா ஆண்பால் தலைப்பிறப்பையும் மற்றும் விலங்குகளின் அனைத்து ஆண்பால் தலையீற்றுகளையும் ஆண்டவர் சாகடித்தார்.
30பார்வோனும், அவனுடைய அனைத்து பணியாளர்களும், எகிப்தியர் அனைவரும் விழித்தெழுந்தனர். எகிப்தில் பெரும் அழுகுரல் கேட்டது. ஏனெனில், சாவு இல்லாத வீடு எதுவுமே இல்லை!
31பார்வோன் மோசேயையும் ஆரோனையும் இரவிலேயே கூப்பிட்டு அவர்களிடம், “நீங்களும் இஸ்ரயேல் மக்களும் எழுந்து என் மக்களிடமிருந்து வெளியேறிச் செல்லுங்கள். போங்கள், நீங்கள் சொன்னபடியே ஆண்டவருக்கு வழிபாடு செய்யுங்கள்.
32நீங்கள் கேட்டபடியே உங்கள் ஆட்டுமந்தையையும் உங்கள் மாட்டு மந்தையையும் கூட்டிக்கொண்டு செல்லுங்கள். போய்விடுங்கள்; எனக்கும் ஆசி கூறுங்கள்” என்றான்.
33நாட்டிலிருந்து விரைவில் போய்விடுமாறு எகிப்தியர் இஸ்ரயேல் மக்களை அவசரப்படுத்தினர்; “நாங்கள் எல்லோருமே சாகிறோம்” என்றனர்.
34மக்கள், பிசைந்த மாவு புளிக்கும் முன்னரே அதை எடுத்து, மாவு பிசையும் பாத்திரங்களில் வைத்து, தங்கள் போர்வைகளில் கட்டித் தோள்கள் மேல் எடுத்துச் சென்றனர்.
35இஸ்ரயேல் மக்கள் மோசேயின் வார்த்தையின்படி செயல்பட்டனர். அவர்கள் எகிப்தியரிடமிருந்து பொன், வெள்ளி அணிகலன்களையும் போர்வைகளையும் கேட்டு வாங்கினர்.
36ஆண்டவர் எகிப்தியரின் பார்வையில் இம்மக்களுக்குத் தயவு கிடைக்கச் செய்தமையால் அவர்களும் இவர்கள் கேட்டதைக் கொடுத்தனர். இவ்வாறு எகிப்தியரை இவர்கள் கொள்ளையிட்டனர்.
விடுதலைப் பயணத் தொடக்கம்
37இஸ்ரயேல் மக்கள் இராம்சேசிலிருந்து சுக்கோத்துக்கு இடம் பெயர்ந்து சென்றனர். இவர்களில் குழந்தைகள் தவிர நடந்து செல்லக்கூடிய ஆடவர் மட்டும் ஏறத்தாழ ஆறு லட்சம் பேர் ஆவர்.
38மேலும், அவர்களோடு பல இனப் பெருந்திரளும், ஆட்டுமந்தை மாட்டுமந்தை என்று பெருந்தொகையான கால்நடைகளும் புறப்பட்டுச் சென்றன.
39எகிப்திலிருந்து கொண்டுவந்த பிசைந்த மாவைக்கொண்டு அவர்கள் சுட்டது புளிப்பற்ற அப்பங்கள். ஏனெனில், மாவு இன்னும் புளிக்காமலிருந்தது. அவர்கள் எகிப்திலிருந்து துரத்தப்பட்டதாலும், சற்றும் தாமதம் செய்ய இயலாமற்போனதாலும் தங்களுக்கென வழியுணவு தயாரித்து வைத்திருக்கவில்லை!
40எகிப்தில் குடியிருந்த இஸ்ரயேல் மக்கள் அங்கு வாழ்ந்த காலம் நானூற்று முப்பது ஆண்டுகள்!
41நானூற்று முப்பதாம் ஆண்டு முடிவுபெற்ற அதே நாளில் ஆண்டவரின் படைத்திரள் எல்லாம் எகிப்து நாட்டினின்று வெளியேறியது.
42எகிப்து நாட்டினின்று அவர்களை வெளியேறச் செய்தபோது ஆண்டவர் விழித்திருந்த இரவு இதுவே! தலைமுறைதோறும் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் ஆண்டவருக்கென்று திருவிழிப்பு கொண்டாடவேண்டிய இரவும் இதுவே.
பாஸ்கா விதிமுறைகள்
43ஆண்டவர் மோசேயையும் ஆரோனையும் நோக்கிப் பின்வருமாறு கூறினார்: “பாஸ்காவின் ஒழுங்குமுறை இதுவே: அந்நிய மக்கள் எவரும் இதை உண்ணலாகாது.
44ஆனால், வெள்ளிக் காசுக்கு வாங்கின அடிமை எவனுக்கும் நீங்கள் விருத்தசேதனம் செய்தபின் அவன் இதை உண்ணலாம்.
45குடியேறியவரும் கூலியாள்களும் இதை உண்ண வேண்டாம்.
46ஒரே வீட்டிற்குள் இது உண்ணப்படவேண்டும். இறைச்சி எதுவும் வீட்டிலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்படலாகாது. எந்த எலும்பையும் நீங்கள் முறிக்கக் கூடாது.
47இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதுமே இதைக் கொண்டாட வேண்டும்!
48அந்நியன் ஒருவன் உன்னோடு தங்கியிருக்க, அவன் ஆண்டவருக்குப் பாஸ்கா கொண்டாட விரும்பினால், அவன்வீட்டு ஆண்கள் அனைவருக்கும் விருத்தசேதனம் செய்தல் வேண்டும். அதன்பின் அவன் கொண்டாட முன்வரலாம். அவன் நாட்டுக் குடிமகன்போல் ஆவான். ஆனால், விருத்தசேதனம் செய்து கொள்ளாதவன் எவனும் இதை உண்ணாதிருப்பானாக.
49நாட்டுக் குடிமக்களுக்கும் உங்களோடு தங்கியிருக்கும் அந்நியருக்கும் சட்டம் ஒன்றே.”
50மோசேக்கும் ஆரோனுக்கும் ஆண்டவர் இட்ட ஆணைப்படி இஸ்ரயேல் மக்கள் அனைவரும் செயல்பட்டனர்.
51அதே நாளில், ஆண்டவர் இஸ்ரயேல் மக்களை அவரவர் அணிவகுப்புகளின்படி எகிப்து நாட்டினின்று வெளியேறச் செய்தார்.
12:1-3 லேவி 23:5; எண் 9:1-5; 28:16; இச 16:1-2. 12:14-20 விப 23:15; 34:18; லேவி 23:68; எண் 28:17-25; 28:16; இச 16:3-8. 12:23 எபி 11:28. 12:29 விப 4:22-32. 12:35-36 விப 3:21-22. 12:40 தொநூ 15:30; கலா 3:17. 12:46 எண் 9:12; யோவா 19:36.