தலைமகன் சாவு முன்னறிவிப்பு

1மேலும் ஆண்டவர் மோசேயை நோக்கி, “பார்வோன் மேலும் எகிப்தின் மேலும் இன்னும் ஒரு கொள்ளை நோய் வரச்செய்வேன். அவன் உங்களை முற்றிலும் போகவிடுவதோடு இங்கிருந்து உங்களைத் துரத்தி விரட்டிவிடுவான்.
2எனவே மக்கள் கேட்கும்படி அறிவியுங்கள். ஒவ்வொருவனும் தனக்கு அடுத்திருப்பவனிடமிருந்தும் ஒவ்வொருத்தியும் தனக்கு அடுத்திருப்பவளிடமிருந்தும் வெள்ளி அணிகலன்களையும் தங்க அணிகலன்களையும் கேட்டு வாங்கிக் கொள்ளட்டும்” என்றார்.
3எகிப்தியருக்கு இம்மக்கள்மேல் நல்லெண்ணம் உண்டாகச் செய்தார் ஆண்டவர். மேலும் மோசே எகிப்து நாட்டில் பார்வோனின் அலுவலர் முன்பும் குடிமக்களின் முன்பும் மிகப் பெரியவராகத் திகழ்ந்தார்.
4மோசே பின்வருமாறு அறிவித்தார்: “ஆண்டவர் கூறுவது இதுவே: நள்ளிரவு வேளையில் நானே எகிப்தின் நடுவே புறப்பட்டுச் செல்வேன்.
5அப்போது எகிப்து நாட்டில், அரியணையில் வீற்றிருக்கும் பார்வோனின் தலைமகன் முதல் மாவரைக்கும் கற்களுக்குப்பின் அமர்ந்திருக்கும் அடிமைப் பெண்ணின் தலைமகன் வரை உள்ள முதற்பேறு அனைத்தும் விலங்குகளின் ஆண்பால் தலையீற்று அனைத்தும் இறந்துவிடுவர்.
6இதுவரை இருந்திராததும் இனி இருக்கப்போகாததுமான பெரும் புலம்பல் எகிப்து நாடெங்கும் கேட்கும்.
7இஸ்ரயேல் மக்கள் அனைவரையும் பொறுத்தமட்டில், அங்குள்ள மனிதர்முதல் விலங்குவரை, எவருக்குமே எதிராக எந்த நாயும் குரைக்காது. இதனால் ஆண்டவர் எகிப்தியரையும் இஸ்ரயேலரையும் வேறுபடுத்திச் செயலாற்றுகிறார் என நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.
8அப்போது உன் பணியாளர்களாகிய இவர்கள் எல்லோரும் எனக்குப் பணிந்து என்முன் தலைவணங்கி நின்று, ‛உம்மைப் பின்பற்றும் மக்கள் அனைவரோடும் நீர் வெளியேறிவிடும்’ என்று கூறுவர். அதன்பின் நான் வெளியேறிச் செல்வேன்.” இதன்பின் பொங்கிய சினத்தோடு மோசே பார்வோனை விட்டகன்றார்.
9அப்போது ஆண்டவர் மோசேயை நோக்கி, “பார்வோன் உனக்குச் செவி சாய்க்கமாட்டான். எகிப்து நாட்டில் என் அருஞ்செயல்கள் பெருகிட இது ஏதுவாகும்” என்றுரைத்தார்.
10மோசேயும் ஆரோனும் இவ்வருஞ்செயல்கள் அனைத்தையும் பார்வோன்முன் செய்தனர். ஆண்டவர் பார்வோனின் மனம் இறுகிவிடச் செய்ததால், அவன் இஸ்ரயேல் மக்களைத் தன் நாட்டிலிருந்து போகவிடவில்லை!