ஆண்டவரே அனைவரின் நீதிபதி

1அநீதிக்குப் பழிவாங்கும்

இறைவா! ஆண்டவரே!

அநீதிக்குப் பழிவாங்கும் இறைவா,

ஒளிர்ந்திடும்!

2உலகின் நீதிபதியே, எழுந்தருளும்;

செருக்குற்றோர்க்கு உரிய

தண்டனையை அளியும்.

3எத்துணைக் காலம், ஆண்டவரே!

எத்துணைக் காலம்

பொல்லார் அக்களிப்பர்?

4அவர்கள் இறுமாப்புடன் பேசுகின்றனர்;

தீமைசெய்வோர் அனைவரும்

வீம்பு பேசுகின்றனர்.

5ஆண்டவரே! அவர்கள்

உம் மக்களை நசுக்குகின்றனர்;

உமது உரிமைச் சொத்தான அவர்களை

ஒடுக்குகின்றனர்.

6கைம்பெண்டிரையும் அன்னியரையும்

அவர்கள் வெட்டி வீழ்த்துகின்றனர்;

திக்கற்றவரை அவர்கள்

கொலை செய்கின்றனர்.

7‘ஆண்டவர் இதைக்

கண்டு கொள்வதில்லை;

யாக்கோபின் கடவுள்

கவனிப்பதில்லை’ என்கின்றனர்.

8மக்களிடையே அறிவிலிகளாய்

இருப்போரே, உணருங்கள்;

மதிகேடரே, எப்பொழுது நீங்கள்

அறிவு பெறுவீர்கள்?

9செவியைப் பொருத்தியவர்

கேளாதிருப்பாரோ?

கண்ணை உருவாக்கியவர்

காணாதிருப்பாரோ?

10மக்களினங்களைக் கண்டிப்பவர்,

மானிடருக்கு அறிவூட்டுபவர்

தண்டியாமல் இருப்பாரோ?

11மானிடரின் எண்ணங்கள் வீணானவை;

இதனை ஆண்டவர் அறிவார்.

12ஆண்டவரே! நீர் கண்டித்து

உம் திருச்சட்டத்தைப் பயிற்றுவிக்கும்

மனிதர் பேறுபெற்றோர்;

13அவர்களின் துன்ப நாள்களில்

அவர்களுக்கு அமைதி அளிப்பீர்.

பொல்லார்க்குக் குழி வெட்டப்படும்.

14ஆண்டவர் தம் மக்களைத் தள்ளிவிடார்;

தம் உரிமைச் சொத்தாம்

அவர்களைக் கைவிடார்.

15தீர்ப்பு வழங்கும் முறையில்

மீண்டும் நீதி நிலவும்;

நேரிய மனத்தினர் அதன்வழி நடப்பர்.

16என் சார்பில் பொல்லார்க்கு

எதிராக எழுபவர் எவர்?

என் சார்பில் தீமை செய்வோர்க்கு

எதிராக நிற்பவர் எவர்?

17ஆண்டவர் எனக்குத்

துணை நிற்காதிருந்தால்,

என் உயிர் விரைவில்

மௌன உலகிற்குச் சென்றிருக்கும்!

18‘என் அடி சறுக்குகின்றது’ என்று

நான் சொன்னபோது,

ஆண்டவரே! உமது பேரன்பு

என்னைத் தாங்கிற்று.

19என் மனத்தில் கவலைகள் பெருகும்போது,

என் உள்ளத்தை உமது ஆறுதல்

மகிழ்விக்கின்றது.

20சட்டத்திற்குப் புறம்பாகத்

தீமை செய்யும் ஊழல்மிகு ஆட்சியாளர்

உம்மோடு ஒன்றாக

இணைந்திருக்க முடியுமோ?

21நேர்மையாளரின் உயிருக்கு உலை வைக்க

அவர்கள் இணைகின்றனர்;

மாசற்றோர்க்குக்

கொலைத்தீர்ப்பு அளிக்கின்றனர்.

22ஆண்டவரோ எனக்கு அரண் ஆனார்;

என் கடவுள் எனக்குப்

புகலிடம் தரும் பாறை ஆகிவிட்டார்.

23அவர்கள் இழைத்த தீங்கை

அவர்கள் மீதே திரும்பிவிழச் செய்வார்;

அவர்கள் செய்த தீமையின் பொருட்டு

அவர்களை அழிப்பார்;

நம் கடவுளாம் ஆண்டவர்

அவர்களை அழித்தே தீர்வார்.


94:1 1 கொரி 3:20.