கடவுளின் அரசாட்சி

1ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்;

அவர் மாட்சியை ஆடையாய்

அணிந்துள்ளார்;

ஆண்டவர் வல்லமையைக்

கச்சையாகக் கொண்டுள்ளார்;
பூவுலகை அவர் நிலைப்படுத்தினார்;

அது அசைவுறாது.

2உமது அரியணை தொடக்கத்திலிருந்தே

நிலைபெற்றள்ளது;

நீர் தொன்றுதொட்டே நிலைத்துள்ளீர்.

3ஆண்டவரே! ஆறுகள் குதித்தெழுந்தன;

ஆறுகள் இரைச்சலிட்டன;

ஆறுகள் ஆரவாரம் செய்தன.

4பெருவெள்ளத்தின் இரைச்சலையும்

கடலின் ஆற்றல்மிகு பேரலைகளையும்விட

ஆண்டவர் வலிமை மிக்கவர்;

அவரே உன்னதத்தில் உயர்ந்தவர்.

5உம்முடைய ஒழுங்குமுறைகள்

மிகவும் உறுதியானவை;

ஆண்டவரே! என்றென்றும் தூய்மையே

உமது இல்லத்தை அழகு செய்யும்.