நம்மைப் பாதுகாக்கும் இறைவன்

1உன்னதரின் பாதுகாப்பில்

வாழ்பவர், எல்லாம் வல்லவரின்

நிழலில் தங்கியிருப்பவர்.

2ஆண்டவரை நோக்கி,

“நீரே என் புகலிடம்; என் அரண்;

நான் நம்பியிருக்கும் இறைவன்”

என்று உரைப்பார்.

3ஏனெனில், ஆண்டவர் உம்மை

வேடரின் கண்ணியினின்றும்

கொன்றழிக்கும்

கொள்ளை நோயினின்றும் தப்புவிப்பார்.

4அவர் தம் சிறகுகளால்

உம்மை அரவணைப்பார்;

அவர்தம் இறக்கைகளின்கீழ்

நீர் புகலிடம் காண்பீர்;

அவரது உண்மையே

கேடயமும் கவசமும் ஆகும்.

5இரவின் திகிலுக்கும்

பகலில் பாய்ந்துவரும் அம்புக்கும்

நீர் அஞ்சமாட்டீர்.

6இருளில் உலவும் கொள்ளை நோய்க்கும்

நண்பகலில் தாக்கும் கொடிய வாதைக்கும்

நீர் அஞ்சமாட்டீர்.

7உம் பக்கம் ஆயிரம் பேர் வீழ்ந்தாலும்,

உம் வலப்புறம்

பதினாயிரம் பேர் தாக்கினாலும்,

எதுவும் உம்மை அணுகாது.

8பொல்லார்க்குக் கிடைக்கும் தண்டனையை

நீரே பார்ப்பீர்;

உம் கண்ணாலேயே நீர் காண்பீர்.

9ஆண்டவரை உம் புகலிடமாய்க் கொண்டீர்;

உன்னதரை உம்
உறைவிடமாக்கிக் கொண்டீர்.

10ஆகவே, தீங்கு உமக்கு நேரிடாது;

வாதை உம் கூடாரத்தை நெருங்காது.

11நீர் செல்லும் இடமெல்லாம்

உம்மைக் காக்கும்படி,

தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார்.

12உம் கால் கல்லின்மேல் மோதாதபடி,

அவர்கள் தங்கள் கைகளில்

உம்மைத் தாங்கிக்கொள்வர்.

13சிங்கத்தின்மீதும் பாம்பின்மீதும்

நீர் நடந்து செல்வீர்;

இளஞ்சிங்கத்தின்மீதும்

விரியன்பாம்பின்மீதும்

நீர் மிதித்துச் செல்வீர்.

14‘அவர்கள் என்மீது அன்புகூர்ந்ததால்,

அவர்களை விடுவிப்பேன்;

அவர்கள் என் பெயரை அறிந்துள்ளதால்,

அவர்களைப் பாதுகாப்பேன்;

15அவர்கள் என்னை நோக்கி மன்றாடும்போது,

அவர்களுக்குப் பதிலளிப்பேன்;

அவர்களது துன்பத்தில்

அவர்களோடு இருப்பேன்;

அவர்களைத் தப்புவித்து

அவர்களைப் பெருமைப்படுத்துவேன்;

16நீடிய ஆயுளால் அவர்களுக்கு

நிறைவளிப்பேன்;

என் மீட்பை அவர்களுக்கு

வெளிப்படுத்துவேன்.’


91:11 மத் 4:6; லூக் 4:10. 91:12 மத் 4:6; லூக் 4:11. 91:13 லூக் 10:19.