நான்காம் பகுதி

மனிதரின் நிலையாமை
(கடவுளின் அடியார் மோசேயின் மன்றாட்டு)

1என் தலைவரே! தலைமுறைதோறும்

நீரே எங்கள் புகலிடமாய் உள்ளீர்.

2மலைகள் தோன்றுமுன்பே,

நிலத்தையும் உலகையும்

நீர் உருவாக்குமுன்பே,

ஊழி ஊழிக்காலமாய் உள்ள

இறைவன் நீரே!

3மனிதரைப் புழுதிக்குத்

திரும்பிடச் செய்கின்றீர்;

‘மானிடரே! மீண்டும்

புழுதியாகுங்கள்’ என்கின்றீர்.

4ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள்,

உம் பார்வையில்

கடந்துபோன நேற்றைய நாள் போலவும்

இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன.

5வெள்ளமென மானிடரை

வாரிக்கொண்டு செல்கின்றீர்;

அவர்கள் வைகறையில் முளைத்தெழும்

புல்லுக்கு ஒப்பாவர்;

6அது காலையில் தளிர்த்துப்

பூத்துக் குலுங்கும்;

மாலையில் வாடிக் காய்ந்து போகும்.

7உமது சினத்தால் நாங்கள்

அழிந்து போகின்றோம்;

உமது சீற்றத்தால் நாங்கள்

திகைப்படைகின்றோம்.

8எம் குற்றங்களை

உம் கண்முன் நிறுத்தினீர்;

மறைவான எம் பாவங்களை

உம் திருமுக ஒளிமுன் வைத்தீர்.

9எங்கள் அனைத்து வாழ்நாள்களும்

உமது சினத்தால்

முடிவுக்கு வந்துவிட்டன;

எங்கள் ஆண்டுகள்

பெருமூச்செனக் கழிந்துவிட்டன.

10எங்கள் வாழ்நாள் எழுபது ஆண்டுகளே;

வலிமை மிகுந்தோர்க்கு எண்பது;

அவற்றில் பெருமைக்கு உரியன

துன்பமும் துயரமுமே!

அவை விரைவில் கடந்துவிடுகின்றன.

நாங்களும் பறந்துவிடுகின்றோம்.

11உமது சினத்தின் வலிமையை

உணர்பவர் எவர்?

உமது கடுஞ்சீற்றத்துக்கு

அஞ்சுபவர் எவர்?

12எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க

எங்களுக்குக் கற்பியும்;

அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப்

பெற்றிடுவோம்.

13ஆண்டவரே, திரும்பி வாரும்;

எத்துணைக் காலம் இந்நிலை?

உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும்.

14காலைதோறும் உமது பேரன்பால்

எங்களுக்கு நிறைவளியும்;

அப்பொழுது வாழ்நாளெல்லாம்

நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.

15எங்களை நீர் ஒடுக்கிய நாள்களுக்கும்

நாங்கள் தீங்குற்ற

ஆண்டுகளுக்கும் ஈடாக,

எம்மை மகிழச் செய்யும்.

16உம் அடியார்மீது உம் செயலும்

அவர்தம் மைந்தர்மீது

உமது மாட்சியும் விளங்கச் செய்யும்.

17எம் கடவுளாம் தலைவரின் இன்னருள்

எம்மீது தங்குவதாக!

நாங்கள் செய்பவற்றில்

எங்களுக்கு வெற்றி தாரும்!

ஆம், நாங்கள் செய்பவற்றில்

வெற்றியருளும்!