1உமக்கு நன்றி
செலுத்துகின்றோம்;
கடவுளே, உமக்கு
நன்றி செலுத்துகின்றோம்;
உமது பெயரைப் போற்றுகின்றோம்;
உம் வியத்தகு செயல்களை
எடுத்துரைக்கின்றோம்.
2நான் தகுந்த வேளையைத்
தேர்ந்துகோண்டு,
நீதியோடு தீர்ப்பு வழங்குவேன்.
3உலகமும் அதில் வாழ்வோர் அனைவரும்
நிலைகுலைந்து போகலாம்;
ஆனால், நான் அதன் தூண்களை
உறுதியாக நிற்கச் செய்வேன். (சேலா)
4வீண் பெருமை கொள்வோரிடம்,
‛வீண் பெருமை கொள்ள வேண்டாம்’
எனவும் பொல்லாரிடம்,
‛உங்கள் வலிமையைக் காட்ட வேண்டாம்;
5உங்கள் ஆற்றலைச் சிறிதளவும்
காட்டிக்கொள்ள வேண்டாம்;
தலையை ஆட்டி இறுமாப்புடன்
பேச வேண்டாம்;’ எனவும் சொல்வேன்.
6கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ,
பாலைவெளியிலிருந்தோ,
மலைகளிலிருந்தோ,
உங்களுக்கு எதுவும் வராது.
7ஆனால், கடவுளிடமிருந்தே
தீர்ப்பு வரும்; அவரே
ஒருவரைத் தாழ்த்துகின்றார்;
இன்னொருவரை உயர்த்துகின்றார்.
8ஏனெனில், மதிமயக்கும்
மருந்து கலந்த திராட்சை மது
பொங்கிவழியும் ஒரு பாத்திரம்
ஆண்டவர் கையில் இருக்கின்றது;
அதிலிருந்து அவர்
மதுவை ஊற்றுவார்;
உலகிலுள்ள பொல்லார் அனைவரும்
அதை முற்றிலும்
உறிஞ்சிக் குடித்துவிடுவர்.
9நானோ எந்நாளும் மகிழ்ந்திருப்பேன்;
யாக்கோபின் கடவுளைப்
புகழ்ந்து பாடுவேன்;
10பொல்லாரை அவர்
வலிமை இழக்கச் செய்வார்;
நேர்மையாளரின் ஆற்றலோ
உயர்வுபெறும்.