நன்றிப் புகழ்ப்பா
(பாடகர் தலைவர்க்கு: புகழ்ப்பாடல்)

1அனைத்துலகோரே!

கடவுளைப் போற்றி

ஆர்ப்பரியுங்கள்!

2அவரது பெயரின் மாட்சியைப்

புகழ்ந்து பாடுங்கள்;

அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள்.

3கடவுளை நோக்கி

‘உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை;

உமது மாபெரும் ஆற்றலின் காரணமாக

உம் எதிரிகள் உமது முன்னலையில்

கூனிக் குறுகுவர்;

4அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்;

அவர்கள் உம் புகழ் பாடிடுவர்;

உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்’

என்று சொல்லுங்கள். (சேலா)

5வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்!

அவர் மானிடரிடையே ஆற்றிவரும்

செயல்கள் அஞ்சுவதற்கு உரியவை.

6கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்;

ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள்.

அங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம்.

7அவர் தமது வலிமையால்

என்றென்றும் அரசாள்கிறார்!

அவர்தம் கண்கள் வேற்றினத்தாரைக்

கவனித்து வருகின்றன;

கலகம் செய்வோர் அவருக்கு எதிராய்த்

தலைதூக்காதிருப்பராக! (சேலா)

8மக்களினங்களே!

நம் கடவுளைப் போற்றுங்கள்;

அவரைப் புகழ்ந்துபாடும் ஒலி

கேட்கச் செய்யுங்கள்.

9நம்மை உயிர்வாழச் செய்தவர் அவரே;

அவர் நம் கால்களை இடற விடவில்லை.

10கடவுளே! எங்களை ஆய்ந்து,

வெள்ளியைப் புடமிடுவதுபோல் புடமிட்டீர்;

11கண்ணியில் எங்களை விழும்படி செய்தீர்;

பளுவான சுமைகளை

எங்கள் முதுகின் மீது சுமத்தினீர்.

12மனிதரை எங்கள் தலைகள்மீது

நடந்துபோகச் செய்தீர்;

நெருப்பிலும் தண்ணீரிலும்

அகப்பட்டிருந்தோம்; ஆயினும்,

நீர் எங்களைப் பாதுகாப்பான இடத்திற்குக்

கொண்டுவந்து சேர்த்தீர்.

13எரிபலியுடன்

உமது இல்லத்தினுள் செல்வேன்;

என் பொருத்தனைகளை

உமக்குச் செலுத்துவேன்.

14அவற்றை என் துன்ப வேளையில்

என் நா உரைத்தது;

என் வாய் உறுதி செய்தது.

15கொழுத்த கன்றுகளை,

செம்மறிக்கிடாய்களின் நறும்புகையோடு,

உமக்கு எரிபலியாகச் செலுத்துவேன்;

காளைகளையும்

வெள்ளாட்டுக் கிடாய்களையும்

உமக்குப் பலியிடுவேன். (சேலா)

16கடவுளுக்கு அஞ்சி நடப்போரே!

அனைவரும் வாரீர்! கேளீர்!

அவர் எனக்குச் செய்ததனை

எடுத்துரைப்பேன்.

17அவரிடம் மன்றாட என் வாய்திறந்தது;

அவரை ஏத்திப் புகழ என் நா எழுந்தது.

18என் உள்ளத்தில் தீய எண்ணங்களை

வளர்த்திருந்தேனாகில்,

என் தலைவர் எனக்குச்

செவிசாய்த்திருக்கமாட்டார்.

19ஆனால், உண்மையில்

கடவுள் எனக்குச் செவிகொடுத்தார்;

என் விண்ணப்பக் குரலை உற்றுக் கேட்டார்.

20என் மன்றாட்டைப் புறக்கணியாத

கடவுள் போற்றி!

தம் பேரன்பை என்னிடமிருந்து

நீக்காத இறைவன் போற்றி!


66:6 விப 14:21; யோசு 3:14-17.