பற்றுறுதியும் நம்பிக்கையும்
(பாடகர் தலைவர்க்கு: ‘தொலையில் வாழும் மௌன மாடப்புறா’ என்ற மெட்டு; பெலிஸ்தியர் தாவீதைக் காத்து என்னுமிடத்தில் பிடித்த வேளை அவர் பாடிய கழுவாய்ப்பாடல்)

1கடவுளே, எனக்கு இரங்கியருளும்;

ஏனெனில், மனிதர் என்னை

நசுக்குகின்றனர்;

அவர்கள் என்னுடன் நாள்தோறும்

சண்டையிட்டுத் துன்புறுத்துகின்றனர்.

2என் பகைவர் நாள்தோறும்

கொடுமைப்படுத்துகின்றனர்;

மிகப் பலர் என்னை ஆணவத்துடன்

எதிர்த்துப் போரிடுவோர்.

3அச்சம் என்னை ஆட்கொள்ளும் நாளில்,

உம்மையே நான் நம்பியிருப்பேன்.

4கடவுளின் வாக்கை நான் புகழ்கின்றேன்;

கடவுளையே நம்பியிருக்கின்றேன்;

எதற்கும் அஞ்சேன்; அற்ப மனிதர்

எனக்கென்ன செய்ய முடியும்?

5என் எதிரிகள் எந்நேரமும்

என் சொற்களைப் புரட்டுகின்றனர்;

அவர்கள் திட்டங்கள் எல்லாம்

என்னைத் துன்புறுத்தவே.

6அவர்கள் ஒன்றுகூடிப்

பதுங்கி இருக்கின்றனர்;

என் உயிரைப் போக்குவதற்காக

என் காலடிச் சுவடுகளைக்

கவனித்துக்கொண்டே இருக்கின்றனர்.

7அவர்கள் தீமைகளைச் செய்துவிட்டுத்

தப்பமுடியுமோ?

கடவுளே, சினம் கொண்டெழுந்து

இந்த மக்களினங்களைக் கீழே வீழ்த்தும்.

8என் துன்பங்களின் எண்ணிக்கையை

நீர் அறிவீர்;

உமது தோற்பையில் என் கண்ணீரைச்

சேர்த்து வைத்துள்ளீர்;

இவையெல்லாம் உம் குறிப்பேட்டில்

உள்ளன அல்லவா?

9நான் உம்மை நோக்கி மன்றாடும் நாளில்

என் எதிரிகள் புறமுதுகிட்டு ஓடுவர்;

அப்போது, கடவுள்

என் பக்கம் இருக்கின்றார் என்பதை

நான் உறுதியாய் அறிவேன்.

10கடவுளின் வாக்கை

நான் புகழ்கின்றேன்;

ஆண்டவனின் வாக்கை

நான் புகழ்கின்றேன்.

11கடவுளையே நம்பியிருக்கின்றேன்;

எதற்கும் அஞ்சேன்;

மானிடர் எனக்கெதிராய்

என்ன செய்ய முடியும்?

12கடவுளே, நான் உமக்குச் செய்த

பொருத்தனைகளை மறக்கவில்லை;

உமக்கு நன்றிப்பலி செலுத்துவேன்.

13ஏனெனில், சாவினின்று

என் உயிரை நீர் மீட்டருளினீர்;

வாழ்வோரின் ஒளியில்,

கடவுளின் முன்னிலையில்

நான் நடக்கும் பொருட்டு

என் அடிகள் சறுக்காதபடி

காத்தீர் அன்றோ!


56 தலைப்பு: 1 சாமு 22:1; 24:3.