எதிரியிடமிருந்து காக்க வேண்டுதல்
(பாடகர் தலைவர்க்கு: நரம்பிசைக் கருவிகளுடன்; தாவீது தங்களிடம் ஒளிந்து கொண்டிருப்பதாகச் சிப்பியர் சவுலிடம் தெரிவித்தபோது, தாவீது பாடிய அறப்பாடல்)

1கடவுளே, உமது பெயரின்

வல்லமையால்

என்னைக் காப்பாற்றும்;

உமது ஆற்றலினால் எனது

நேர்மையை நிலைநாட்டும்.

2கடவுளே, என் விண்ணப்பத்தைக்

கேட்டருளும்;

என் வாயின் சொற்களுக்குச்

செவிகொடுத்தருளும்.

3ஏனெனில், செருக்குற்றோர்

எனக்கு எதிராய் எழுந்துள்ளனர்;

கொடியவர் என் உயிரைப்

பறிக்கப் பார்க்கின்றனர்;

அவர்கள் கடவுளை

அறவே நினைப்பதில்லை. (சேலா)

4இதோ! கடவுள் எனக்குத்

துணைவராய் இருக்கின்றார்;

என் தலைவர் என் வாழ்வுக்கு

ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்;

5என் எதிரிகள் எனக்குச் செய்ய விரும்பும்

தீமையை அவர்கள் மேலேயே அவர்
திருப்பிவிடுவாராக!

‛உம் வாக்குப் பிறழாமைக்கு ஏற்ப

அவர்களை அழித்தொழியும்!

6தன்னார்வத்தோடு உமக்குப்

பலி செலுத்துவேன்;

ஆண்டவரே, உமது பெயருக்கு

நன்றி செலுத்துவேன்; இதுவே நன்று.’

7ஏனெனில், அவர் என்னை

எல்லா இன்னல்களினின்றும்

விடுவித்துள்ளார்;

என் எதிரிகளின் வீழ்ச்சியை நான்

கண்ணாரக் கண்டுள்ளேன்.


54 தலைப்பு: 1 சாமு 23:19; 26:1.