அரசரின் திருமணப்பாடல்
(பாடகர் தலைவர்க்கு: ‘லீலிமலர்கள்’ என்ற மெட்டு; கோராகியரின் அறப்பாடல்; காதல் பாடல்)

1மன்னரைக் குறித்து யான்

கவிதை புனைகின்ற போழ்து,

இனியதொரு செய்தியால்

என் நெஞ்சம் ததும்பி வழிகின்றது;

திறன்மிகு கவிஞரின் எழுதுகோலென

என் நாவும் ஆகிடுமே!

2மானிட மைந்தருள்

பேரழகுப் பெருமகன் நீர்;

உம் இதழினின்று அருள் வெள்ளம்

பாய்ந்துவரும்;

கடவுள் உமக்கு என்றென்றும்

ஆசி வழங்குகின்றார்.

3வீரமிகு மன்னா! மாட்சியொடு

உம் மாண்பும் துலங்கிடவே,

உம் இடையினிலே வீரவாள் தாங்கி வாரும்!

4உண்மையைக் காத்திட,

நீதியை நிலைநாட்டிட,

மாண்புடன் வெற்றிவாகை சூடி வாரும்!

உம் வலக்கை

அச்சமிகு செயல்களை ஆற்றுவதாக!

5உம்முடைய கணைகள் கூரியன;

மன்னர்தம் மாற்றாரின்

நெஞ்சினிலே பாய்வன; மக்களெல்லாம்

உம் காலடியில் வீழ்ந்திடுவர்.

6இறைவனே, என்றுமுளது

உமது அரியணை;

உமது ஆட்சியின் செங்கோல்

வளையாத செங்கோல்.

7நீதியே உமது விருப்பம்;

அநீதி உமக்கு வெறுப்பு;

எனவே கடவுள், உமக்கே உரிய கடவுள்,

மகிழ்ச்சியின் நெய்யால்

உமக்குத் திருப்பொழிவு செய்து,

உம் அரசத் தோழரினும் மேலாய்

உம்மை உயர்த்தினார்.

8நறுமணத் துகள், அகிலொடு

இலவங்கத்தின் மணங்கமழும்

உம் ஆடையெலாம்;

தந்தம் இழைத்த மாளிகைதனிலே

யாழிசை உம்மை மகிழ்விக்கும்.

9அருமைமிகு அரசிள மகளிர்

உம்மை எதிர்கொள்வர்;

ஓபீரின் பொன் அணிந்து

வடிவாக வலப்புறம் நிற்கின்றாள்
பட்டத்து அரசி!

10கேளாய் மகளே! கருத்தாய்க்

காதுகொடுத்துக் கேள்!

உன் இனத்தாரை மறந்துவிடு;

பிறந்தகம் மறந்துவிடு.

11உனது எழிலில்

நாட்டங்கொள்வார் மன்னர்;

உன் தலைவர் அவரே;

அவரைப் பணிந்திடு!

12தீர் நகர மக்கள் பரிசில் பல ஏந்தி நிற்பர்;

செல்வமிகு சீமான்கள்

உன்னருள் வேண்டி நிற்பர்.

13அந்தப்புரத்தினிலே மாண்புமிகு இளவரசி

தங்கமிழைத்த உடையணிந்து

தோன்றிடுவாள்.

14பலவண்ணப் பட்டுடுத்தி

மன்னரிடம் அவளை அழைத்து வருவர்;

கன்னித் தோழியர் புடைசூழ

அவள் அடியெடுத்து வந்திடுவாள்.

15மன்னவரின் மாளிகைக்குள்

நுழையும்போது அவர்கள்

மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும்

அழைத்து வரப்படுவர்.

16உம் தந்தையரின் அரியணையில்

உம் மைந்தரே வீற்றிருப்பர்;

அவர்களை நீர் உலகுக்கெலாம்

இளவரசர் ஆக்கிடுவீர்.

17என் பாடல் வழிவழியாய்

உம் பெயரை நிலைக்கச் செய்யும்;

ஆகையால், எல்லா இனத்தாரும்

உமை வாழ்த்திடுவர்.


45:6-7 எபி 1:8-9.