புகழ்ச்சிப் பாடல்
(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)

1நான் ஆண்டவருக்காகப்

பொறுமையுடன் காத்திருந்தேன்;

அவரும் என் பக்கம் சாய்ந்து

எனது மன்றாட்டைக் கேட்டருளினார்.

2அழிவின் குழியிலிருந்து

என்னை அவர் வெளிக்கொணர்ந்தார்;

சேறு நிறைந்த பள்ளத்தினின்று

தூக்கியெடுத்தார்;

கற்பாறையின்மேல் நான்

காலூன்றி நிற்கச் செய்தார்;

என் காலடிகளை உறுதிப்படுத்தினார்.

3புதியதொரு பாடலை,

நம் கடவுளைப் புகழும் பாடலை

என் நாவினின்று எழச் செய்தார்;

பலரும் இதைப் பார்த்து அச்சங்கொண்டு

ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்வர்;

4ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவரே

பேறு பெற்றவர்;

அத்தகையோர் சிலைகளை நோக்காதவர்;

பொய்யானவற்றைச் சாராதவர்.

5ஆண்டவரே! எண்ணிறந்தவற்றை

நீர் எமக்கெனச் செய்துள்ளீர்;

உமக்கு நிகரானவர் எவரும் இலர்;

என் கடவுளே!

உம் அருஞ்செயல்களும்

திட்டங்களும் எங்களுக்காகவே;

அவற்றை நான் எடுத்துரைக்க

விரும்புவேனாகில்

அவை எண்ணிலடங்கா.

6பலியையும் காணிக்கையையும்

நீர் விரும்பவில்லை;

எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும்

நீர் கேட்கவில்லை;

ஆனால், என் செவிகள்

திறக்கும்படி செய்தீர்.

7எனவே, ‛இதோ வருகின்றேன்;

என்னைக் குறித்துத் திருநூல் சுருளில்
எழுதப்பட்டுள்ளது;

8என் கடவுளே! உமது திருவுளம்

நிறைவேற்றுவதில்

நான் மகிழ்ச்சி அடைகின்றேன்;

உமது திருச்சட்டம் என் உள்ளத்தில்

இருக்கின்றது’ என்றேன் நான்.

9என் நீதியை நீர் நிலைநாட்டிய

நற்செய்தியை

மாபெரும் சபையில் அறிவித்தேன்;

நான் வாயை மூடிக் கொண்டிருக்கவில்லை;

ஆண்டவரே! நீர் இதை அறிவீர்.

10உமது நீதியை நான்

என் உள்ளத்தின் ஆழத்தில்

மறைத்து வைக்கவில்லை;

உம் வாக்குப்பிறழாமையைப் பற்றியும்

நீர் அருளும் மீட்பைப் பற்றியும்

கூறியிருக்கின்றேன்;

உம் பேரன்பையும் உண்மையையும்

மாபெரும் சபைக்கு நான் ஒளிக்கவில்லை.

11ஆண்டவரே, உமது பேரிரக்கத்தை

எனக்குக் காட்ட மறுக்காதேயும்;

உமது பேரன்பும் உண்மையும்

தொடர்ந்து என்னைப் பாதுகாப்பனவாக!

உதவிக்காக மன்றாடல்
(திபா 70)

12ஏனெனில், எண்ணிறந்த தீமைகள்

எனைச் சூழ்ந்து கொண்டன;

என் குற்றங்கள் என்மீது கவிந்து

என் பார்வையை மறைத்துக்கொண்டன.

அவை என் தலைமுடிகளைவிட

மிகுதியானவை; என் உள்ளம் தளர்ந்து

என்னைக் கைவிட்டது.

13ஆண்டவரே, என்னை விடுவிக்க

மனமிசைந்தருளும்;

ஆண்டவரே, எனக்கு உதவி செய்ய

விரைந்து வாரும்.

14என் உயிரைப் பறிக்கத் தேடுவோர்

அனைவரும்

அவமானமும் குழப்பமும் அடையட்டும்!

என் கேட்டில் மகிழ்வுறுவோர்

தலைகுனிந்து பின்னடையட்டும்!

15என்னைப் பார்த்து ‛ஆ!ஆ!’ என்போர்

தாம் அடையும் தோல்வியினால்

அதிர்ச்சியுறட்டும்!

16உம்மைத் தேடுவோர் அனைவரும்

உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்!

நீர் அருளும் மீட்பில் நாட்டங்கொள்வோர்,

‛ஆண்டவர் எத்துணைப் பெரியவர்!’

என்று எப்போதும் சொல்லட்டும்!

17நானோ ஏழை; எளியவன்;

என் தலைவர்

என்மீது அக்கறை கொண்டுள்ளார்;

நீரே என் துணைவர், என் மீட்பர்!

என் கடவுளே, எனக்குத்

துணை செய்ய விரைந்து வாரும்.


40:6-8 எபி 10:5-7.