காலை மன்றாட்டு
(தாவீதின் புகழ்ப்பா: தம் மகன் அப்சலோமிடமிருந்து தப்பியோடிய போது அவர் பாடியது)

1ஆண்டவரே, என் எதிரிகள்

எவ்வளவாய்ப் பெருகிவிட்டனர்!

என்னை எதிர்த்து எழுவோர்

எத்தனை மிகுந்து விட்டனர்!

2‛கடவுள் அவனை விடுவிக்கமாட்டார்’

என்று என்னைக் குறித்துச்

சொல்வோர் பலர். (சேலா)

3ஆயினும், ஆண்டவரே,

நீரே எனைக் காக்கும் கேடயம்;

நீரே என் மாட்சி; என்னைத்

தலைநிமிரச் செய்பவரும் நீரே.

4நான் உரத்த குரலில்

ஆண்டவரிடம் மன்றாடுகின்றேன்;

அவர் தமது திருமலையிலிருந்து

எனக்குப் பதிலளிப்பார். (சேலா)

5நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்;

ஏனெனில்,

ஆண்டவரே எனக்கு ஆதரவு.

6என்னைச் சூழ்ந்திருக்கும் பல்லாயிரம்

பகைவருக்கு நான் அஞ்சமாட்டேன்.

7ஆண்டவரே, எழுந்தருளும்;

என் கடவுளே, என்னை மீட்டருளும்;

என் எதிரிகள் அனைவரையும்

கன்னத்தில் அறையும்!

பொல்லாரின் பல்லை உடையும்!

8விடுதலை அளிப்பவர் ஆண்டவர்;

அவர்தம் மக்களுக்கு

ஆசி வழங்குவாராக! (சேலா)


3 தலைப்பு: 2 சாமு 15:13 - 17:22.