புகழ்ச்சிப் பாடல்
(தாவீதுக்கு உரியது)

1ஆண்டவரே என் ஒளி;

அவரே என் மீட்பு;

யாருக்கு நான் அஞ்சவேண்டும்?

ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்;

யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்?

2தீயவர் என் உடலை விழுங்க

என்னை நெருங்குகையில்,

என் பகைவரும் எதிரிகளுமான அவர்களே

இடறி விழுந்தார்கள்.

3எனக்கெதிராக ஒரு படையே

பாளையமிறங்கினும்,

என் உள்ளம் அஞ்சாது;

எனக்கெதிராகப் போர் எழுந்தாலும்,

நான் நம்பிக்கையோடிருப்பேன்.

4நான் ஆண்டவரிடம்

ஒரு விண்ணப்பம் செய்தேன்;

அதையே நான் நாடித் தேடுவேன்;

ஆண்டவரின் இல்லத்தில்

என் வாழ்நாள் எல்லாம்

நான் குடியிருக்க வேண்டும்,

ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்;
அவரது கோவிலில் அவரது

திருவுளத்தைக் கண்டறிய வேண்டும்.

5ஏனெனில், கேடுவரும் நாளில்

அவர் என்னைத்

தம் கூடாரத்தில் மறைத்து வைப்பார்;

தம் கூடாரத்தினுள்ளே

என்னை ஒளித்து வைப்பார்;

குன்றின்மேல் என்னைப்

பாதுகாப்பாய் வைப்பார்.

6அப்பொழுது, என்னைச் சுற்றிலுமுள்ள

என் எதிரிகளுக்கு எதிரில்

நான் தலைநிமிரச் செய்வார்;

அவரது கூடாரத்தில் ஆர்ப்பரிப்புடன்

பலிகளைச் செலுத்துவேன்;

ஆண்டவரைப் புகழ்ந்து பாடல் பாடுவேன்.

7ஆண்டவரே, நான் மன்றாடும்போது

என் குரலைக் கேட்டருளும்;

என்மீது இரக்கங்கொண்டு

எனக்குப் பதிலளித்தருளும்.

8‛புறப்படு, அவரது முகத்தை நாடு’ என்றது

என் உள்ளம்; ஆண்டவரே,

உமது முகத்தையே நாடுவேன்.

9உமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்;

நீர் சினங்கொண்டு

அடியேனை விலக்கிவிடாதிரும்;
நீரே எனக்குத் துணை;

என் மீட்பராகிய கடவுளே,

என்னைத் தள்ளிவிடாதிரும்;

என்னைக் கைவிடாதிரும்.

10என் தந்தையும் தாயும்

என்னைக் கைவிட்டாலும்

ஆண்டவர் என்னை ஏற்றுக்கொள்வார்.

11ஆண்டவரே, உமது வழியை

எனக்குக் கற்பித்தருளும்;

என் எதிரிகளை முன்னிட்டு, என்னைச்

செம்மையான பாதையில் நடத்தும்.

12என் பகைவரின் விருப்பத்திற்கு

என்னைக் கையளித்துவிடாதிரும்;

ஏனெனில், பொய்ச்சாட்சிகளும்

வன்முறையை மூச்சாகக் கொண்டவர்களும்

எனக்கெதிராய்க் கிளம்பியுள்ளனர்.

13வாழ்வோரின் நாட்டினிலே

ஆண்டவரின் நலன்களைக்

காண்பேன் என்று

நான் இன்னும் நம்புகின்றேன்.

14நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு;

மன உறுதிகொள்;

உன் உள்ளம் வலிமை பெறட்டும்;

ஆண்டவருக்காகக் காத்திரு.