நேர்மையாளரின் விண்ணப்பம்
(தாவீதுக்கு உரியது)

1ஆண்டவரே, நான் குற்றமற்றவன்

என்பதை அறிவியும்;

ஏனெனில், என் நடத்தை நேர்மையானது;

நான் ஆண்டவரை நம்பினேன்;

நான் தடுமாறவில்லை.

2ஆண்டவரே, என்னைச் சோதித்து

ஆராய்ந்து பாரும்;

என் மனத்தையும் உள்ளத்தையும்

புடமிட்டுப் பாரும்;

3ஏனெனில், உமது பேரன்பு

என் கண்முன் இருக்கின்றது;

உமக்கு உண்மையாக நடந்து வருகிறேன்.

4பொய்யரின் நடுவில்

நான் அமர்வதில்லை;

வஞ்சகரோடு நான் சேர்வதில்லை.

5தீயோரின் மன்றத்தை

நான் வெறுக்கின்றேன்;

பொல்லாரின் நடுவில்

நான் அமர்வதில்லை.

6மாசற்றவனாய்

என் கைகளைக் கழுவுகின்றேன்;

ஆண்டவரே, உம் பலிபீடத்தை

வலம் வருவேன்.

7உரத்த குரலில் உமக்கு

நன்றிப்பா பாடுகின்றேன்;

வியத்தகு உம் செயல்களை எல்லாம்

எடுத்துரைக்கின்றேன்;

8ஆண்டவரே,

நீர் குடிகொள்ளும் இல்லத்தை

நான் விரும்புகின்றேன்;

உமது மாட்சி தங்கியுள்ள இடத்தை

நான் விரும்புகின்றேன்;

9பாவிகளுக்குச் செய்வதுபோல்

என் உயிரைப் பறித்து விடாதீர்!

கொலை வெறியர்களுக்குச் செய்வதுபோல்

என் வாழ்வை அழித்து விடாதீர்!

10அவர்கள் கைகளில் தீச்செயல்கள்;

அவர்கள் வலக்கையில்
நிறையக் கையூட்டு.

11நானோ மாசற்றவனாய்

நடந்து கொள்கின்றேன்;

என்னை மீட்டருளும்;

எனக்கு இரங்கியருளும்.

12என் கால்கள்

சமமான தளத்தில் நிற்கின்றன;

மாபெரும் சபையில்

ஆண்டவரைப் புகழ்ந்திடுவேன்.