மாவேந்தரின் வருகை
(தாவீதின் புகழ்ப்பா)

1மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள

அனைத்தும் ஆண்டவருடையவை;

நிலவுலகும் அதில் வாழ்வனவும்

அவருக்கே சொந்தம்.

2ஏனெனில், அவரே கடல்கள்மீது

அதற்கு அடித்தளமிட்டார்;

ஆறுகள்மீது அதை

நிலைநாட்டினவரும் அவரே.

3ஆண்டவரது மலையில் ஏறத்

தகுதியுள்ளவர் யார்?

அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவர் யார்?

4கறைபடாத கைகளும்

மாசற்ற மனமும் உடையவர்;

பொய்த் தெய்வங்களை நோக்கித்

தம் உள்ளத்தை உயர்த்தாதவர்;

வஞ்சக நெஞ்சோடு

ஆணையிட்டுக் கூறாதவர்,

5இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்;

தம் மீட்பராம் கடவுளிடமிருந்து

நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.

6அவரை நாடுவோரின்

தலைமுறையினர் இவர்களே:

*யாக்கோபின் கடவுளது முகத்தைத்*

தேடுவோர் இவர்களே. (சேலா)

7வாயில்களே, உங்கள் நிலைகளை

உயர்த்துங்கள்;

தொன்மைமிகு கதவுகளே,

உயர்ந்து நில்லுங்கள்;

மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்.

8மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ?

வலிமையும் ஆற்றலும் கொண்ட

ஆண்டவர் இவர்; இவரே

போரில் வல்லவரான ஆண்டவர்.

9வாயில்களே,

உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்;

தொன்மைமிகு கதவுகளே,

உயர்ந்து நில்லுங்கள்;

மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்.

10மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ?

படைகளின் ஆண்டவர் இவர்;

இவரே மாட்சிமிகு மன்னர். (சேலா)


24:4 மத் 5:8.
24:6 *…* ‘யாக்கோபே! உனது முகத்தை’ என்பது எபிரேய பாடம்.