அரசராம் கடவுள் போற்றி!
(தாவீதின் திருப்பாடல்)

1என் கடவுளே, என் அரசே!

உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்;

உமது பெயரை என்றும்

எப்பொழுதும் போற்றுவேன்.

2நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்;

உமது பெயரை என்றும்

எப்பொழுதும் புகழ்வேன்.

3ஆண்டவர் மாண்புமிக்கவர்;

பெரிதும் போற்றுதலுக்கும் உரியவர்;

அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது.

4ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு

உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்;

வல்லமைமிகு உம் செயல்களை

எடுத்துரைக்கும்.

5உமது மாண்பின்

மேன்மையையும் மாட்சியையும்

வியத்தகு உம் செயல்களையும்

நான் சிந்திப்பேன்.

6அச்சந்தரும் உம் செயல்களின்

வல்லமையைப்பற்றி

மக்கள் பேசுவார்கள்;

உமது மாண்பினை நான்

விரித்துரைப்பேன்,

7அவர்கள் உமது உயர்ந்த நற்பண்பை

நினைந்துக் கொண்டாடுவார்கள்;

உமது நீதியை எண்ணி

ஆர்ப்பரித்துப் பாடுவார்கள்.

8ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்;

எளிதில் சினம் கொள்ளாதவர்;

பேரன்பு கொண்டவர்.

9ஆண்டவர் எல்லாருக்கும்

நன்மை செய்பவர்;

தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும்

இரக்கம் காட்டுபவர்.

10ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும்

உமக்கு நன்றி செலுத்தும்;

உம்முடைய அன்பர்கள்

உம்மைப் போற்றுவார்கள்.

11அவர்கள் உமது அரசின் மாட்சியை

அறிவிப்பார்கள்;

உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள்.

12மானிடர்க்கு

உம் வல்லமைச் செயல்களையும்

உமது அரசுக்குரிய

மாட்சியின் பேரொளியையும்

புலப்படுத்துவார்கள்.

13உமது அரசு

எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு;

உமது ஆளுகை

தலைமுறை தலைமுறையாக உள்ளது.

ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும்

உண்மையானவர்;

தம் செயல்கள் அனைத்திலும்

தூய்மையானவர்.

14தடுக்கி விழும் யாவரையும்

ஆண்டவர் தாங்குகின்றார்.

தாழ்த்தப்பட்ட யாவரையும்

தூக்கிவிடுகின்றார்.

15எல்லா உயிரினங்களின் கண்களும்

உம்மையே நோக்குகின்றன;

தக்க வேளையில் நீரே அவற்றிற்கு

உணவளிக்கின்றீர்.

16நீர் உமது கையைத் திறந்து

எல்லா உயிரினங்களின்

விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர்.

17ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும்

நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும்

இரக்கச் செயல்களே.

18தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும்,

உண்மையாய்த் தம்மை நோக்கி

மன்றாடும் யாவருக்கும்,

ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.

19அவர் தமக்கு அஞ்சி நடப்போரின்

விருப்பத்தை நிறைவேற்றுவார்;

அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து

அவர்களைக் காப்பாற்றுவார்.

20ஆண்டவர் தம்மிடம் பற்றுக் கொள்ளும்

அனைவரையும் பாதுகாக்கின்றார்;

பொல்லார் அனைவரையும் அழிப்பார்.

21என் வாய் ஆண்டவரின் புகழை

அறிவிப்பதாக!

உடல்கொண்ட அனைத்தும்

அவரது திருப்பெயரை

என்றும் எப்பொழுதும் போற்றுவதாக!