ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதன் பயன்கள்
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)

1ஆண்டவருக்கு அஞ்சி

அவர் வழிகளில் நடப்போர்

பேறுபெற்றோர்!

2உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்!

நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்!

3உம் இல்லத்தில் உம் துணைவியார்

கனிதரும் திராட்சைக் கொடிபோல்

இருப்பார்;

உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள்

ஒலிவக் கன்றுகளைப் போல்

உம்மைச் சூழ்ந்திருப்பர்.

4ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர்

இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார்.

5ஆண்டவர் சீயோனிலிருந்து

உமக்கு ஆசி வழங்குவாராக!

உம் வாழ் நாளெல்லாம் நீர்

எருசலேமின் நல்வாழ்வைக்

காணும்படி செய்வாராக!

6நீர் உம் பிள்ளைகளின்

பிள்ளைகளைக் காண்பீராக!

இஸ்ரயேலுக்கு நலம் உண்டாவதாக!