இரக்கத்திற்காக மன்றாடல்
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)

1விண்ணுலகில் வீற்றிருப்பவரே!

உம்மை நோக்கியே என்

கண்களை உயர்த்தியுள்ளேன்.

2பணியாளனின் கண்கள்

தன் தலைவனின் கைதனை

நோக்கியிருப்பதுபோல,

பணிப்பெண்ணின் கண்கள்

தன் தலைவியின் கைதனை

நோக்கியிருப்பதுபோல,

எம் கடவுளாகிய ஆண்டவரே!

நீர் எமக்கு இரங்கும்வரை,

எம் கண்கள்

உம்மையே நோக்கியிருக்கும்.

3எங்களுக்கு இரங்கும் ஆண்டவரே!

எங்களுக்கு இரங்கும்;

அளவுக்கு மேலேயே நாங்கள்

இகழ்ச்சி அடைந்துவிட்டோம்.

4இன்பத்தில் திளைத்திருப்போரின்

வசைமொழி போதும்.

இறுமாந்த மனிதரின்

பழிச்சொல்லும் போதும்.