பாஸ்காப் பாடல்

1எகிப்து நாட்டைவிட்டு

இஸ்ரயேலர்

வெளியேறியபொழுது,

வேற்று மொழி பேசிய மக்களை விட்டு

யாக்கோபின் குடும்பம் புறப்பட்டபொழுது,

2யூதா அவருக்குத் தூயகம் ஆயிற்று;

இஸ்ரயேல் அவரது ஆட்சித்தளம் ஆனது.

3செங்கடல் கண்டது;

ஓட்டம் பிடித்தது;

யோர்தான் பின்னோக்கிச் சென்றது.

4மலைகள் செம்மறிக் கிடாய்கள் போலும்

குன்றுகள் ஆட்டுக்குட்டிகள் போலும்

துள்ளிக் குதித்தன.

5கடலே! நீ விலகி ஓடும்படி

உனக்கு நேர்ந்தது என்ன?

யோர்தானே! நீ

பின்னோக்கிச் சென்றது ஏன்?

6மலைகளே! நீங்கள்

செம்மறிக் கிடாய்கள்போல்

குதித்தது ஏன்?

குன்றுகளே!

நீங்கள் ஆட்டுக் குட்டிகள் போல்

துள்ளியது ஏன்?

7பூவுலகே!

தலைவர் முன்னிலையில்

நடுநடுங்கு!

யாக்கோபின் கடவுள் முன்னிலையில்

நடுக்கமுறு!

8அவர் பாறையைத்

தண்ணீர்த் தடாகம் ஆக்குகின்றார்;

கற்பாறையை வற்றாத

நீர்ச்சுனை ஆக்குகின்றார்.


114:1 விப 12:51. 114:3 விப 14:21; யோசு 3:16. 114:8 விப 17:1-7; எண் 20:2-13.