துன்புற்றவரின் முறையீடு
(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)

1என் புகழ்ச்சிக்குரிய இறைவா,

மௌனமாய் இராதேயும்.

2தீயோரும் வஞ்சனை செய்வோரும்

எனக்கெதிராய்த்

தம் வாயைத் திறந்துள்ளனர்;

எனக்கெதிராய் அவர்கள்

பொய்களைப் பேசியுள்ளனர்.

3பகைவரின் சொற்கள்

என்னைச் சூழ்ந்துள்ளன;

அவர்கள் காரணமின்றி

என்னைத் தாக்குகின்றனர்.

4நான் காட்டிய அன்புக்குக் கைம்மாறாக

என்மேல் குற்றம் சாட்டினர்;

நானோ அவர்களுக்காக மன்றாடினேன்.

5நன்மைக்குப் பதிலாக அவர்கள்

எனக்குத் தீமையே செய்தனர்;

அன்புக்குப் பதிலாக அவர்கள்

வெறுப்பையே காட்டினர்;

6அவர்கள் கூறியது:

“அவனுக்கு எதிராகத்

தீயவனை எழும்பச் செய்யும்!

‘குற்றம் சாட்டுவோன்’

அவனது வலப்பக்கம் நிற்பானாக!

7நீதி விசாரணையின்போது

அவன் தண்டனை பெறட்டும்!

அவன் செய்யும் வேண்டுகோள்

குற்றமாகக் கருதப்படுவதாக!

8அவனது வாழ்நாள் சொற்பமாகட்டும்;

அவனது பதவியை வேறோருவன்

எடுத்துக் கொள்ளட்டும்!

9அவனுடைய பிள்ளைகள்

தந்தை இழந்தோர் ஆகட்டும்!

அவனுடைய மனைவி

கைம்பெண் ஆகட்டும்!

10அவனுடைய பிள்ளைகள்

அலைந்து திரிந்து பிச்சை எடுக்கட்டும்!

பாழான தங்கள் வீடுகளிலிருந்து

அவர்கள் விரட்டப்படட்டும்!

11அவனுக்கு உரியவற்றை எல்லாம்

கடன் கொடுத்தவன்

பறித்துக் கொள்ளட்டும்!

அவனது உழைப்பின் பயனை

அன்னியர் கொள்ளையடிக்கட்டும்!

12அவனுக்கு இரக்கங்காட்ட

ஒருவனும் இல்லாதிருக்கட்டும்!

தந்தையை இழந்த,

அவனுடைய பிள்ளைகள்மேல்

யாரும் இரங்காதிருக்கட்டும்!

13அவன் வழி மரபு அடியோடு அழியட்டும்!

அடுத்த தலைமுறைக்கு

அவர்களுடைய பெயர்

இல்லாது போகட்டும்!

14அவனுடைய மூதாதையரின் குற்றத்தை

ஆண்டவர் நினைவில் கொள்ளட்டும்!

அவனுடைய தாய் செய்த பாவத்தை

அவர் மன்னியாது இருக்கட்டும்!

15அவை என்றும்

ஆண்டவர் திருமுன்னே இருக்கட்டும்!

அவனது நினைவை பூவுலகினின்று

அடியோடு அவர் அகற்றட்டும்!

16ஏனெனில், அவன்

இரக்கம் காட்ட நினைக்கவில்லை;

எளியோரையும் வறியோரையும்

கொடுமைப்படுத்தினான்;

நெஞ்சம் நொறுங்குண்டோரைக்

கொலைசெய்யத் தேடினான்.

17சபிப்பதையே அவன் விரும்பினான்;

விரும்பிய அதுவே அவன்மீது விழட்டும்!

ஆசி வழங்குவதை அவன் விரும்பவில்லை;

ஆகவே அது அவனைவிட்டுத்

தொலைவில் செல்லட்டும்!

18சாபமே அவன் அணிந்த ஆடை;

தண்ணீரென அவன் உடலையும்

எண்ணெயென அவன் எலும்புகளையும்

அது நனைக்கட்டும்!

19அது அவனைப் போர்த்தும்

ஆடைபோல் இருக்கட்டும்!

நாள்தோறும் அவன் கட்டும்

கச்சைபோல் இருக்கட்டும்!

20என்னைக் குற்றம் சாட்டுவோருக்கும்,

எனக்கு எதிராகத்

தீயன பேசுவோருக்கும்

ஆண்டவர் அளிக்கும் கைம்மாறாக

அது இருப்பதாக!

21ஆனால், என் தலைவராகிய கடவுளே!

உமது பெயரை முன்னிட்டு

என் சார்பாகச் செயல்படும்!

உமது பேரன்பின் இனிமைபொருட்டு

என்னை மீட்டருளும்!

22நானோ எளியவன்; வறியவன்;

என் இதயம் என்னுள் புண்பட்டுள்ளது.

23மாலைநேர நிழலைப்போல்

நான் மறைந்து போகின்றேன்;

வெட்டுக் கிளியைப் போல நான்

காற்றில் அடித்துச் செல்லப்படுகின்றேன்.

24நோன்பினால் என் முழங்கால்கள்

தளர்வுறுகின்றன;

என் உடல் வலிமை இழந்து

மெலிந்து போகின்றது.

25நானோ அவர்களது

பழிச்சொல்லுக்கு உள்ளானேன்;

என்னைப் பார்க்கின்றோர்

தலையை ஆட்டுகின்றனர்.

26ஆண்டவரே! என் கடவுளே!

எனக்கு உதவியருளும்!

உமது பேரன்பிற்கேற்ப

மீட்டருளும்!

27இது உம் ஆற்றலால் நிகழ்ந்தது என

அவர்கள் அறியட்டும்!

ஆண்டவரே! இதைச் செய்தவர் நீரே என

அவர்கள் உணரட்டும்.

28அவர்கள் என்னைச் சபித்தாலும்,

நீர் எனக்கு ஆசி வழங்கும்!

எனக்கு எதிராக எழுவோர் இழிவுறட்டும்!

உம் ஊழியனாகிய நான் அகமகிழ்வேன்.

29என்னைக் குற்றஞ்சாட்டுவோர்க்கு

மானக்கேடு மேலாடை ஆகட்டும்!

அவர்களின் வெட்கம்

அவர்களுக்கு மேலங்கி ஆகட்டும்!

30என் நாவினால் ஆண்டவரைப்

பெரிதும் போற்றிடுவேன்;

பெரும் கூட்டத்திடையே

அவரைப் புகழ்ந்திடுவேன்.

31ஏனெனில், வறியோரின் வலப்பக்கம்

அவர் நிற்கின்றார்;

தண்டனைத் தீர்ப்பிடுவோரிடமிருந்து

அவர்களது உயிரைக் காக்க நிற்கின்றார்.


109:8 திப 1:20. 109:25 மத் 27:39; மாற் 15:29.