கடவுளும் அவர்தம் மக்களும்
(1 குறி 16:8-22)

1ஆண்டவருக்கு

நன்றி செலுத்துங்கள்!

அவர்தம் பெயரைச்

சொல்லி வழிபடுங்கள்!

அவர்தம் செயல்களை

மக்களினங்கள் அறியச் செய்யுங்கள்.

2அவருக்குப் பாடல் பாடுங்கள்;

அவரைப் புகழ்ந்தேத்துங்கள்!

அவர்தம் வியத்தகு செயல்கள்

அனைத்தையும் எடுத்துரையுங்கள்!

3அவர்தம் திருப்பெயரை

மாட்சிப்படுத்துங்கள்;

ஆண்டவரைத் தேடுவோரின் இதயம்

அக்களிப்பதாக!

4ஆண்டவரையும்

அவரது ஆற்றலையும் தேடுங்கள்!

அவரது திருமுகத்தை

இடையறாது நாடுங்கள்!

5அவர் செய்த வியத்தகு செயல்களை

நினைவு கூருங்கள்!

அவர்தம் அருஞ்செயல்களையும்,

அவரது வாய் மொழிந்த

நீதித் தீர்ப்புகளையும்

நினைவில் கொள்ளுங்கள்.

6அவரின் ஊழியராம்

ஆபிரகாமின் வழிமரபே!

அவர் தேர்ந்துகொண்ட

யாக்கோபின் பிள்ளைகளே!

7அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்!

அவரின் நீதித்தீர்ப்புகள்

உலகம் அனைத்திற்கும் உரியன.

8அவர் தமது உடன்படிக்கையை

என்றென்றும் நினைவில் கொள்கின்றார்;

ஆயிரம் தலைமுறைக்கென

தாம் அளித்த வாக்குறுதியை

நினைவுகூர்கின்றார்.

9ஆபிரகாமுடன் தாம் செய்து கொண்ட

உடன்படிக்கையையும்

ஈசாக்குக்குத் தாம்

ஆணையிட்டுக் கூறியதையும்

அவர் நினைவில் கொண்டுள்ளார்.

10யாக்கோபுக்கு நியமமாகவும்

இஸ்ரயேலுக்கு

என்றுமுள உடன்படிக்கையாகவும்

அதை அவர் உறுதிப்படுத்தினார்.

11‘கானான் நாட்டை

உங்களுக்கு அளிப்பேன்;

அப்பங்கே உங்களுக்கு

உரிமைச் சொத்தாய் இருக்கும்’

என்றார் அவர்.

12அப்போது, அவர்கள்

மதிப்பிலும் எண்ணிக்கையிலும்

குறைந்தவராய் இருந்தார்கள்;

அங்கே அவர்கள்

அன்னியராய் இருந்தார்கள்.

13அவர்கள் ஒரு நாட்டினின்று

மற்றொரு நாட்டிற்கும்

ஓர் அரசினின்று மற்றொரு மக்களிடமும்

அலைந்து திரிந்தார்கள்.

14யாரும் அவர்களை ஒடுக்குமாறு

அவர் விட்டு விடவில்லை;

அவர்களின் பொருட்டு மன்னர்களை

அவர் கண்டித்தார்.

15‘நான் அருள்பொழிவு செய்தாரைத்

தொடாதீர்!

என் இறைவாக்கினர்க்குத்

தீங்கிழைக்காதீர்’ என்றார் அவர்.

16நாட்டில் அவர் பஞ்சம் வரும்படி செய்தார்;

உணவெனும் ஊன்றுகோலை

முறித்துவிட்டார்.

17அவர்களுக்கு முன் ஒருவரை

அனுப்பிவைத்தார்;

யோசேப்பு என்பவர்

அடிமையாக விற்கப்பட்டார்.

18அவர்தம் கால்களுக்கு விலங்கிட்டு

அவரைத் துன்புறுத்தினர்.

அவர்தம் கழுத்தில்

இரும்புப் பட்டையை மாட்டினர்.

19காலம் வந்தது;

அவர் உரைத்தது நிறைவேறிற்று;

ஆண்டவரின் வார்த்தை

அவர் உண்மையானவரென மெய்ப்பித்தது.

20மன்னர் ஆளனுப்பி

அவரை விடுதலை செய்தார்;

மக்களினங்களின் தலைவர்

அவருக்கு விடுதலை அளித்தார்;

21அவர் அவரைத் தம் அரண்மனைக்குத்

தலைவர் ஆக்கினார்;

தம் உடைமைகளுக்கெல்லாம்

பொறுப்பாளராக ஏற்படுத்தினார்.

22அவர் அரச அலுவலரைப் பயிற்றுவித்தார்;

அவருடைய அவைப்பெரியோருக்கு

நல்லறிவு புகட்டினார்.

23பின்னர், இஸ்ரயேல் எகிப்துக்கு வந்தார்;

யாக்கோபு காம் நாட்டில்

அன்னியராய் வாழ்ந்தார்.

24ஆண்டவர் தம் மக்களைப்

பல்கிப் பெருகச் செய்தார்;

அவர்களின் எதிரிகளைவிட அவர்களை

வலிமைமிக்கவர்கள் ஆக்கினார்.

25தம் மக்களை வெறுக்கும்படியும்,

தம் அடியார்களுக்கு எதிராகச்

சூழ்ச்சி செய்யும்படியும்

அவர் எகிப்தியரின் மனத்தை மாற்றினார்.

26அவர்தம் ஊழியராகிய மோசேயையும்,

தாம் தேர்ந்தெடுத்த

ஆரோனையும் அனுப்பினார்.

27அவர்கள் எகிப்தியரிடையே

அவர்தம் அருஞ்செயல்களைச் செய்தனர்;

காம் நாட்டில் வியத்தகு செயல்களைச்

செய்து காட்டினர்.

28அவர் இருளை அனுப்பி

நாட்டை இருட்டாக்கினார்;

அவருடைய சொற்களை

எதிர்ப்பார் இல்லை.

29அவர்களுடைய நீர்நிலைகளை

அவர் இரத்தமாக மாற்றினார்;

அவற்றிலிருந்த மீன்களைச் சாகடித்தார்.

30அவர்களது நாட்டிற்குள்

தவளைகள் ஏறிவந்தன;

மன்னர்களின் பள்ளியறைகளுக்குள்ளும்

அவை நுழைந்தன.

31அவர் கட்டளையிட,

அவர்களுடைய நாடு முழுவதிலும்

ஈக்களும் கொசுக்களும் திரண்டு வந்தன.

32அவர் நீருக்குப் பதிலாகக்

கல்லை மழையாகப் பொழிந்தார்;

அவர்களது நாடெங்கும்

மின்னல் தெறிக்கச் செய்தார்.

33அவர் அவர்களின்

திராட்சைச் செடிகளையும்

அத்திமரங்களையும் அழித்தார்;

அவர்களது நாடெங்குமுள்ள

மரங்களை முறித்தார்.

34அவரது சொல்லால் வெட்டுக் கிளிகளும்

எண்ணற்ற வெட்டுப்புழுக்களும்

அங்கே தோன்றின.

35அவை அவர்களது நாட்டின்

பயிர் பச்சைகளைத் தின்றுத்தீர்த்தன;

அவர்களது நிலத்தின் விளைச்சல்களை

விழுங்கிவிட்டன.

36அவர் அவர்களது நாட்டின்

தலைப்பேறுகள் அனைத்தையும்

தாக்கினார்; அவர்களது

ஆண்மையின் முதற்பேறுகள்

அனைத்தையும் வீழ்த்தினார்.

37அவர் இஸ்ரயேலரை

வெள்ளியோடும் பொன்னோடும்

புறப்படச் செய்தார்;

அவர்கள் குலங்களில் எவரும்

தளர்ந்து போகவில்லை.

38அவர்கள் வெளியேறுகையில்

எகிப்தியர் அகமகிழ்ந்தனர்;

ஏனெனில், இஸ்ரயேலர் பற்றிய பேரச்சம்

அவர்களை ஆட்கொண்டிருந்தது.

39அவர் அவர்களைப் பாதுகாக்க

மேகத்தைப் பரப்பினார்;

இரவில் ஒளிதர நெருப்பைத் தந்தார்.

40அவர்கள் கேட்டதால்

அவர் காடைகளை வரச்செய்தார்;

வானினின்று வந்த உணவால்

அவர்களை நிறைவுறச் செய்தார்.

41அவர் கற்பாறையைப் பிளந்தார்;

தண்ணீர் பொங்கி வழிந்தது;

அது பாலைநிலங்களில் ஆறாய் ஓடிற்று.

42ஏனெனில், தம் அடியார்

ஆபிரகாமுக்கு அளித்த

தமது தூய வாக்குறுதியை

அவர் நினைவுகூர்ந்தார்.

43அவர் தம் மக்களை

மகிழ்ச்சியோடு வெளிக்கொணர்ந்தார்;

அவர்தாம் தெரிந்தெடுத்தவர்களை

ஆரவாரத்தோடு கூட்டிச் சென்றார்.

44அவர் வேற்றினத்தாரின் நாடுகளை

அவர்களுக்கு அளித்தார்;

மக்களினங்களது உழைப்பின் பயனை

அவர்கள் உரிமையாக்கிக்

கொள்ளுமாறு செய்தார்.

45அவர்கள் அவருடைய

கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும்,

அவருடைய சட்டங்களின்படி ஒழுகவுமே

அவர் இவ்வாறு செய்தார். அல்லேலூயா!


105:9 தொநூ 12:7; 17:8; 26:3. 105:10-11 தொநூ 28:13. 105:14-15 தொநூ 20:3-7. 105:16 தொநூ 41:53-57. 105:17 தொநூ 37:28; 45:5. 105:18-19 தொநூ 39:20-40:23. 105:20 தொநூ 41:14. 105:21 தொநூ 41:39-41. 105:23 தொநூ 46:6; 47:11. 105:24-25 விப 1:7-14. 105:26 விப 3:1-4:17. 105:28 விப 10:21-23. 105:29 விப 7:17-21. 105:30 விப 8:1-6. 105:31 விப 8:16-17, 20-24. 105:32-33 விப 9:22-25. 105:34-35 விப 10:12-15. 105:36 விப 12:29. 105:37-38 விப 12:33-36. 105:39 விப 13:21-22. 105:40 விப 16:2-15. 105:41 விப 17:1-7; எண் 20:2-13. 105:44 யோசு 11:16-23.