கடவுள் தம் மக்களுக்குக் காட்டிய கருணை

1அல்லேலூயா! ஆண்டவருக்கு

நன்றி செலுத்துங்கள்;

ஏனெனில் அவர் நல்லவர்!

என்றென்றுமுள்ளது அவரது பேரன்பு!

2ஆண்டவரின் வலிமைமிகு செயல்களை

யாரால் இயம்ப இயலும்?

ஆவர்தம் புகழை

யாரால் விளம்பக் கூடும்?

3நீதிநெறி காப்போர் பேறு பெற்றோர்!

எப்போதும் நேரியதே செய்வோர்

பேறுபேற்றோர்!

4ஆண்டவரே! நீர் உம்மக்கள்மீது

இரக்கம் காட்டும்போது

என்னை நினைவு கூரும்!

அவர்களை நீர் விடுவிக்கும்போது

எனக்கும் துணைசெய்யும்!

5நீர் தேர்ந்தெடுத்த மக்களின்

நல்வாழ்வை நான் காணும்படி செய்யும்;

உம்முடைய மக்களின் மகிழ்ச்சியில்

நானும் பங்கு கொள்ளும்படிச் செய்யும்!

அப்போது, உமது உரிமைச் சொத்தான

மக்களோடு உம்மைப் போற்றிட இயலும்.

6எங்கள் மூதாதையரின் வழிநடந்து,

நாங்களும் பாவம் செய்தோம்;

குற்றம் புரிந்தோம்; தீமை செய்தோம்.

7எங்கள் மூதாதையர் எகிப்தில் நீர்செய்த

வியத்தகு செயல்களைப் பற்றிச்

சிந்திக்கவில்லை;

உமது மாபெரும் பேரன்பை

அவர்கள் நினைவில் கொள்ளவில்லை;

மாறாக உன்னதமானவரை எதிர்த்துச்

செங்கடல் ஓரத்தில்* கலகம் செய்தனர்.

8அவரோ தமது பெயரின் பொருட்டு

அவர்களை விடுவித்தார்;

இவ்வாறு அவர் தமது வலிமையை

வெளிப்படுத்தினார்.

9அவர் செங்கடலை அதட்டினார்;

அது உலர்ந்து போயிற்று;

பாலை நிலத்தில் நடத்திச் செல்வது போல்

அவர்களை ஆழ்கடல் வழியே

நடத்திச்சென்றார்.

10எதிரியின் கையினின்று

அவர்களை விடுவித்தார்;

பகைவரின் பிடியினின்று

அவர்களை மீட்டார்.

11அவர்களுடைய எதிரிகளைக்

கடல்நீர் மூழ்கடித்தது;

அவர்களுள் ஒருவர்கூட

எஞ்சியிருக்கவில்லை.

12அப்பொழுது, அவர்கள்

அவருடைய வாக்குறுதிகளில்

நம்பிக்கை வைத்தார்கள்;

அவரைப் புகழ்ந்து பாடினார்கள்.

13ஆயினும், அவர் செய்தவற்றை

அவர்கள் விரைவிலேயே

மறந்துவிட்டார்கள்;

அவரது அறிவுரைக்காக

அவர்கள் காத்திருக்கவில்லை.

14பாலைநிலத்தில் அவர்கள்

பெருவிருப்புக்கு இடங்கொடுத்தார்கள்.

பாழ்வெளியில் அவர்கள்

இறைவனைச் சோதித்தார்கள்.

15அவர்கள் கேட்டதை

அவர் அவர்களுக்குச் கொடுத்தார்;

அவர்களின் உயிரை அழிக்குமாறு

அவர்கள்மீது நோயை அனுப்பினார்.

16பாளையத்தில் இருக்கும்போது

மோசேயின்மீதும்,

ஆண்டவருக்காகத் திருநிலைபெற்ற

ஆரோன்மீதும்,

அவர்கள் பொறாமை கொண்டார்கள்.

17நிலம் பிளந்து தாத்தானை விழுங்கியது;

அபிராமின் கும்பலை

அப்படியே புதைத்துவிட்டது.

18அக்கும்பலிடையே நெருப்பு

கொழுந்துவிட்டு எரிந்தது;

தீயோரைத் தீப்பிழம்பு எரித்தது.

19அவர்கள் ஓரேபில் ஒரு

கன்றுக் குட்டியைச் செய்துகொண்டனர்;

வார்ப்புச் சிலையை விழுந்து வணங்கினர்;

20தங்கள் ‘மாட்சி’க்குப் பதிலாக,

புல்தின்னும் காளையின்

உருவத்தைச் செய்து கொண்டனர்;

21தங்களை விடுவித்த

இறைவனை மறந்தனர்;

எகிப்தில் பெரியன புரிந்தவரை மறந்தனர்;

22காம் நாட்டில் அவர் செய்த

வியத்தகு செயல்களை மறந்தனர்;

செங்கடலில் அவர் செய்த

அச்சுறுத்தும் செயல்களையும்

மறந்தனர்.

23ஆகையால், அவர்களை அவர்

அழித்துவிடுவதாகக் கூறினார்;

ஆனால், அவரால் தேர்ந்து கொள்ளப்பட்ட

மோசே, அவர்முன்

உடைமதில் காவலர் போல் நின்று

அவரது கடுஞ்சினம் அவர்களை

அழிக்காதவாறு தடுத்தார்.

24அருமையான நாட்டை

அவர்கள் இகழ்ந்தார்கள்;

அவரது வாக்குறுதியில்

நம்பிக்கை கொள்ளவில்லை.

25அவர்கள் தங்களின் கூடாரங்களில்

முறுமுறுத்தார்கள்;

ஆண்டவரின் குரலுக்குச்

செவிகொடுக்கவில்லை.

26ஆகவே அவர் அவர்களுக்கு எதிராகத்

தம் கையை ஓங்கி

‘நான் உங்களைப் பாலைநிலத்தில்

வீழ்ச்சியுறச் செய்வேன்;

27உங்கள் வழிமரபினரை

வேற்றினங்களிடையிலும்

அன்னிய நாடுகளிலும்

சிதறடிப்பேன்’ என்றார்.

28பின்னர் அவர்கள் பாகால்பெயோரைப்

பற்றிக் கொண்டார்கள்.

உயிரற்ற தெய்வங்களுக்குப்

பலியிட்டவற்றை உண்டார்கள்;

29இவ்வாறு தங்கள் செய்கைகளினால்

அவருக்குச் சினமூட்டினார்கள்;

ஆகவே, கொள்ளைநோய்

அவர்களிடையே பரவிற்று.

30பினகாசு கொதித்தெழுந்து

தலையிட்டதால்

கொள்ளைநோய் நீங்கிற்று.

31இதனால், தலைமுறை தலைமுறையாக

என்றென்றும், அவரது செயல்

நீதியாகக் கருதப்பட்டது.

32மெரிபாவின் ஊற்றினருகில்

அவருக்குச் சினமூட்டினார்கள்.

அவர்களின் பொருட்டு

மோசேக்கும் தீங்கு நேரிட்டது.

33மோசேக்கு அவர்கள்

மனக்கசப்பை ஏற்படுத்தியதால்

அவர் முன்பின் பாராது பேசினார்.

34ஆண்டவர் இட்ட கட்டளைக்கு மாறாக,

மக்களினங்களை அவர்கள்

அழிக்கவில்லை.

35வேற்றினத்தாரோடு கலந்துறவாடி,

அவர்களின் வழக்கங்களைக்

கற்றுக்கொண்டனர்;

36அவர்களின் தெய்வச் சிலைகளைத்

தொழுதனர்; அவையே

அவர்களுக்குக் கண்ணிகளாயின.

37அவர்கள் தங்கள் புதல்வர், புதல்வியரைப்

பேய்களுக்குப் பலியிட்டனர்;

38மாசற்ற இரத்தத்தை,

தங்கள் புதல்வர் புதல்வியரின்

இரத்தத்தைச் சிந்தினர்;

கானான் நாட்டுத்

தெய்வங்களின் சிலைகளுக்கு

அவர்களைப் பலியிட்டார்கள்;

அவர்களின் இரத்தத்தால்

நாடு தீட்டுப்பட்டது.

39அவர்கள் தங்கள் செயல்களால் தங்களைக்

கறைப்படுத்திக் கொண்டனர்;

தங்கள் செயல்கள் மூலம்

வேசித்தனம் செய்தனர்.

40எனவே, ஆண்டவரின் சினம்

அவர்தம் மக்களுக்கெதிராகப்

பற்றியெரிந்தது;

தமது உரிமைச் சொத்தை

அவர் அருவருத்தார்.

41வேற்றினத்தாரின் கையில்

அவர் அவர்களை ஒப்படைத்தார்;

அவர்களை வெறுத்தோரே

அவர்களை ஆட்சி செய்தனர்.

42அவர்கள் எதிரிகள்

அவர்களை ஒடுக்கினர்;

தங்கள் கையின்கீழ்

அவர்களைத் தாழ்த்தினர்.

43பன்முறை அவர்

அவர்களை விடுவித்தார்;

அவர்களோ திட்டமிட்டே

அவருக்கு எதிராகக் கலகம் செய்தனர்;

தங்கள் தீச்செயல்களினால்

அவர்கள் தாழ்நிலை அடைந்தனர்.

44எனினும் அவர் அவர்களது

மன்றாட்டுக்குச் செவிசாய்த்து,

அவர்களது துன்பத்தைக் கண்டு

மனமிரங்கினார்.

45அவர்களுக்கு உதவுமாறு,

அவர் தமது உடன்படிக்கையை

நினைவு கூர்ந்தார்;

தமது பேரன்பிற்கேற்பக்

கழிவிரக்கம் கொண்டார்;

46அவர்களைச் சிறைசெய்த

அனைவர் முன்னிலையிலும்

அவர்கள் இரக்கம் பெறும்படி செய்தார்.

47எங்கள் கடவுளாகிய ஆண்டவரே!

எங்களை விடுவித்தருளும்;

வேற்று நாடுகளினின்று

எங்களை ஒன்று சேர்த்தருளும்;

அப்பொழுது நாங்கள்

உமது திருப்பெயருக்கு

நன்றி செலுத்துவோம்;

உம்மைப் புகழ்வதில்

பெருமை கொள்வோம்.

48இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர்

ஊழி ஊழியாய்ப் புகழப் பெறுவாராக!

மக்கள் அனைவரும்

‘ஆமென்’ எனச் சொல்வார்களாக!

அல்லேலூயா!


106:1 1 குறி 16:34; 2 குறி 5:13; 7:3; எஸ்ரா 3:11; திபா 100:5; 107:1; 118:1, 29; 136:1; எரே 33:11. 106:7 விப 14:10-12. 106:9-12 விப 14:21-31. 106:12 விப 15:1-12. 106:14-15 எண் 11:4-34. 106:16-18 எண் 16:1-35. 106:19-23 விப 32:1-14. 106:24-26 எண் 14:1-35. 106:27 லேவி 26:33. 106:28-31 எண் 25:1-13. 106:32-33 எண் 20:2-13. 106:34-36 நீத 2:1; 3:5-6. 106:37 2 அர 17:7. 106:38 எண் 35:33. 106:40-46 நீத 2:14-18. 106:47-48 1 குறி 16:35-36.
106:7 ‘செங்கடல் ஓரத்தில்’ என்பதற்குப் பதில் ‘கடல் ஓரத்தில்’ எ’பது எபிரேய பாடம்.