ரூபனின் வழிமரபினர்

1இஸ்ரயேலின் தலைமகன் ரூபனின் புதல்வர்: அவர் தலைமகனாய் இருந்தும் தம் தந்தையின் மஞ்சத்தைத் தீட்டுப்படுத்தியதால் அவரது தலைமகனுரிமை இஸ்ரயேலின் மகன் யோசேப்பின் புதல்வர்களுக்கு வழங்கப்பட்டது. எனவே, தலைமுறை அட்டவணையில் அவர் தலைமகனாய்க் கருதப்படவில்லை.
2யூதா, தம் சகோதரருள் வலிமைமிக்கவராயிருந்தும் அவரிடமிருந்து தலைவர் ஒருவர் தோன்றியபோதிலும், தலைமகனுரிமை யோசேப்புக்கே உரித்தாயிற்று.
3இஸ்ரயேலின் தலைமகன் ரூபனின் புதல்வர்: அனோக்கு, பல்லூ, எட்சரோன், கர்மி.
4யோவேலின் புதல்வர்: அவர் மகன் செமாயா, அவர் மகன் கோகு, அவர் மகன் சிமயி,
5அவர் மகன் மீக்கா, அவர் மகன் இரயாயா, அவர் மகன் பாகால்,
6அவர் மகன் பெயேரா; ரூபனியரின் தலைவரான அவரை அசீரிய மன்னன் தில்கத்பில்னேசர் சிறைப்படுத்திச் சென்றான்.
7அவர்களது உறவின்முறையில் குடும்ப வாரியாகத் தலைமுறை அட்டவணையில் குறிக்கப்பட்டோர்; தலைவர் எயியேல், செக்கரியா,
8யோவேல் மகன் செமாவிற்குப் பிறந்த ஆசாசு புதல்வன் பெலா. அவர் வழிமரபினர் அரோயேரிலிருந்து நேபோ, பாகால்மெயோன் வரை குடியேறியிருந்தனர்.
9அவர்கள் கிழக்கே யூப்பிரத்தீசு நதி முதல் பாலைநிலத்தின் எல்லை வரை வாழ்ந்து வந்தனர்; கிலயாது நாட்டில் அவர்களின் கால்நடைகள் பெருகின.
10அவர்கள் சவுலின் நாள்களில் அகாரியருடன் போர்த்தொடுத்துத் தம் கையால் அவர்களை வீழ்த்தினர்; கிலயாதின் கிழக்குப் புறம் எங்கும் தங்கள் கூடாரங்களில் வாழ்ந்தனர்.

காத்தின் வழிமரபினர்

11அவர்களுக்கு வடக்கே பாசான் நிலப்பகுதியில் சலிக்காவரை காத்தின் புதல்வர் குடியேறியிருந்தனர்.
12பாசானில், தலைவரான யோவேல், அடுத்தவரான சாப்பாம், யானாய், சாப்பாத்து ஆகியோர் வாழ்ந்தனர்.
13அவர்கள் மூதாதையர் வீட்டுச் சகோதரர் மிக்கேல், மெசுல்லாம், சேபா, யோராய், யாக்கான், சீயா, ஏபேர் என்னும் ஏழு பேர்.
14இவர்கள் ஊரிக்குப் பிறந்த அபிகயிலின் புதல்வர்: ஊரி யாரோவாகின் மகன்; அவர் கிலெயாதின் மகன்; அவர் மிக்கேலின் மகன்; அவர் எசிசாயின் மகன்; அவர் யாகுதோவின் மகன்; அவர் பூசின் மகன்.
15கூனிக்குப் பிறந்த அப்தியேலின் மகன் அகி அவர்களின் மூதாதை வீட்டுக்குத் தலைவராய் இருந்தார்.
16அவர்கள் கிலயாது, பாசான், அதைச் சார்ந்த நகர்கள், சாரோனின் மேய்ச்சல் நிலப்பகுதிகள் மற்றும் அவற்றின் எல்லைகள்வரை குடியேறினர்.
17அவர்கள் யாவரும் யூதா அரசன் யோத்தாம் காலத்திலும் இஸ்ரயேல் அரசன் எரொபவாம் நாள்களிலும் தலைமுறை அட்டவணையில் பதிவு செய்யப்பட்டனர்.

கிழக்குப் பழங்குடிகளின் படைகள்

18ரூபனின் புதல்வர், காத்தின் புதல்வர், மனாசேயின் பாதிக்குலத்தார் ஆகியோர்களிடையே கேடயத்தையும் வாளையும் ஏந்தி, வில் எய்து, போர்ப்பயிற்சி பெற்ற வலிமைமிக்கோர் நாற்பத்து நாலாயிரத்து எழுநூற்று அறுபது பேர் இருந்தனர்.
19அவர்கள் ஆகாரியர், எத்தூர், நாப்பிசு, நோதாபு ஆகியோரை எதிர்த்துப் போரிட்டனர்.
20அப்பொழுது அவர்கள் ஆகாரியரையும் அவர்களோடு இருந்த யாவரையும் எதிர்ப்பதற்குரிய ஆற்றலைக் கடவுளிடமிருந்து பெற்றார்கள். பகைவரும் அவர்களிடம் கையளிக்கப்பட்டனர். ஏனெனில், அவர்கள் போர் நடக்கும் போது கடவுளை நோக்கி மன்றாடினார்கள். அவர் மேல் அவர்கள் நம்பிக்கை வைத்ததால் அவரும் அவர்களின் மன்றாட்டைக் கேட்டருளினார்.
21அவர்கள் தம் எதிரிக்குச் சொந்தமான கால்நடைகளான ஐம்பதாயிரம் ஒட்டகங்களையும், இரண்டு இலட்சத்து ஐம்பதினாயிரம் ஆடுகளையும், இரண்டாயிரம் கழுதைகளையும், இலட்சம் ஆள்களையும் உயிருடன் கைப்பற்றினார்கள்.
22அந்தப் போர் கடவுளால் நடத்தப்பட்டதால், பலர் வெட்டி வீழ்த்தப்பட்டனர். நாடு கடத்தப்படும்வரை அவர்கள் அங்கேயே வாழ்ந்தார்கள்.

கிழக்கு மனாசே பகுதியின் மக்கள்

23மனாசேயின் பாதிக்குலத்துப் புதல்வரும் இந்த நாட்டிலேயே வாழ்ந்த வந்தனர். அவர்கள் பாசான் முதல் பாகால்எர்மோன், செனிர், எர்மோன் மலைவரைக்கும் பெருவாரியாகப் பெருகியிருந்தனர்.
24அவர்களின் மூதாதை வீட்டுத் தலைவர்கள் இவர்களே; ஏப்பேர், இசி, எலியேல், அஸ்ரியேல், எரேமியா, ஓதவியா, எகுதியேல். அவர்கள் ஆற்றல்மிக வீரர்களாகவும் புகழ்மிக்கவர்களாகவும் தம் மூதாதை வீட்டுத் தலைவர்களாகவும் திகழ்ந்தார்கள்.

கிழக்குப் பழங்குடிகளின் வெளியேற்றம்

25அவர்களோ தங்கள் கண்முன்னே கடவுள் அழித்து விட்ட நாட்டு மக்களின் தெய்வங்களைப் பின்பற்றிய வேசித்தனத்தின் மூலம் தங்கள் மூதாதையரின் கடவுளுக்குத் துரோகம் செய்தனர்.
26ஆதலால், இஸ்ரயேலின் கடவுள் அசீரிய மன்னன் பூலையும், அசீரிய மன்னன் தில்கத்பில்னேசரையும் கிளர்ந்தெழச் செய்தார். அவன் ரூபனியரையும், காத்தியரையும், மனாசேயின் பாதிக்குலத்தாரையும் சிறைப்படுத்தி, அலாகு, ஆபோர், ஆரா, கோசான் ஆற்றுப்பகுதி ஆகிய இடங்களுக்கு இழுத்துச் சென்றான். இன்று வரை அவர்கள் அங்கேயே உள்ளனர்.

5:1 தொநூ 35:22; 49:3-4. 5:2 தொநூ 49:8-10. 5:6 2 அர 15:29. 5:26 2 அர 15:19,29; 17:6.