யூதாவின் வழிமரபினர்

1யூதாவின் புதல்வர்: பெரேட்சு, எட்சரோன், கர்மி, கூர், சோபால்.
2சோபாலின் மகன் இரயாயாவுக்கு யாகத்து பிறந்தார்; யாகத்துக்கு அகுமாயும் இலாகாதும் பிறந்தனர்; சோராவியர் குடும்பங்கள் இவையே.
3ஏத்தாம் என்னும் மூதாதையின் வழிமரபினர் இவர்கள்; இஸ்ரியேல், இஸ்மா, இத்பாசு; அவர்களின் சகோதரி பெயர் அட்சலெல்போனி.
4மேலும், கெதோரின் மூதாதை பெனுவேல், ஊசாவின் மூதாதை எட்சேர். இவர்கள் பெத்லகேமியரின் மூதாதையும் எப்ராத்தா என்பவரின் தலைமகனுமான கூரின் புதல்வர்கள்.
5தெக்கோவாவின் மூதாதையான அஸ்கூருக்கு ஏலா, நாரா என்னும் இரு மனைவியர் இருந்தனர்.
6நாரா அவருக்கு அகுசாம், ஏப்பேர், தேமனி, அகஸ்தாரி ஆகியோரைப் பெற்றெடுத்தாள்; நாராவின் புதல்வர் இவர்களே.
7ஏலாவின் புதல்வர்: செரேத்து, இட்சகார், எத்னான்.
8அனுபு, சோபேபா, ஆரூம் மகன் அகரகேலின் குடும்பத்தினர் ஆகியோருக்குக் கோசு தந்தை.
9யாபேசு தம் சகோதரரைவிடச் சிறப்பு மிக்கவராய் இருந்தார். அவர் தம் தாய் ‘நான் வேதனையுற்று அவனைப் பெற்றெடுத்தேன்’ என்று சொல்லி அவருக்கு ‘யாபேசு’ என்று பெயரிட்டார்.
10யாபேசு இஸ்ரயேலின் கடவுளை நோக்கி, “கடவுளே, மெய்யாகவே நீர் எனக்கு ஆசிவழங்கி, என் எல்லையைப் பெரிதாக்குவீராக! உம் கை என்னோடு இருப்பதாக! தீங்கு என்னைத் துன்புறுத்தாது நீர் பாதுகாத்தருள்வீராக!” என்று மன்றாடினார். கடவுளும் அவர் வேண்டியதை அருளினார்.

பிற மரபினர்

11சூகாவின் சகோதரருக்குக் கெலுபுக்கு மெகீர் பிறந்தார். அவர் எஸ்தோனின் மூதாதை.
12எஸ்தோனுக்கு பெத்ராபா, பாசயாகு, ஈர்னகாசின் மூதாதை தெகின்னா ஆகியோர் பிறந்தனர். இவர்கள் இரேக்காவில் வாழும் மனிதர்கள்.
13கெனாசின் புதல்வர்: ஒத்னியேல், செராயா; ஒத்னியேலின் புதல்வர்: அத்தாத்து, மெயோனத்தாய்.
14மெயோனத்தாய்க்கு ஒப்ரா பிறந்தார்; கோராசிம் பள்ளத்தாக்கில் வாழ்ந்த கைவினைஞரின் மூதாதையான யோவாபு செராயாவுக்குப் பிறந்தார்.
15எப்புன்னே மகன் காலேபின் புதல்வர்: ஈரு, ஏலா, நாவாம்; ஏலாவின் மகன் கெனானி.
16எகலலேலின் புதல்வர்: சீபு, சிப்பா, தீரியா, அசரேல்.
17எஸ்ராவின் புதல்வர்: எத்தேர், மெரேது, ஏப்பேர், யாலோன். மெரேது மணந்த பார்வோன் மகள் பித்தியா பெற்றெடுத்த புதல்வர்: மிரியாம், சம்மாய், எஸ்தமோவாவின் மூதாதை இஸ்பாக்;
18மெரேகின் யூதா குல மனைவி பெற்றெடுத்தவர்; கெதோரின் மூதாதை எரேது, சோக்கோவின் மூதாதை கெபேர், சானோவக்கின் மூதாதை எகுத்தியேல்.
19நகாமின் சகோதரியாகிய ஓதியாவின் மனைவி பெற்றெடுத்தவர்; கர்மியரான கெயிலாவின் மூதாதை, மாக்காத்தியரான எஸ்தெமோவாவின் மூதாதை.
20சீமோனின் புதல்வர்: அம்னோன், ரின்னா, பென்கனான், தீலோன்; இசீயின் புதல்வர்: சோகேத்து, பென்சோகேத்து.

சேலாவின் வழிமரபினர்

21யூதாவின் மகன் சேலாவின் புதல்வர்: லேக்காவின் மூதாதை ஏர், மாரேசாவின் மூதாதை இலாதா, பெத்தஸ் பெயவில் நார்ப்பட்டு நெய்த தொழிலாளர் குடும்பங்கள்,
22யோக்கீம், கோஸ்பாவைச் சார்ந்த ஆள்கள், மோவாபியரை மணந்த யோவாசு, சாராபு என்பவர்களுமே. அவர்கள் பெத்லகேம் திரும்பியுள்ளார்கள். இவற்றுக்கான பதிவேடுகள் பழங்காலத்தவை.
23அவர்கள் நெத்தாயிமிலும் கெதேராவிலும் குயவராய் வாழ்ந்தனர். அவர்கள் அரசப் பணிக்கென அரசருடன் அங்கே வாழ்ந்து வந்தனர்.

சிமியோனின் வழிமரபினர்

24சிமியோனின் புதல்வர்: நெமுவேல், யாமின், யாரிபு, செராகு, சாவூல்
25அவர் மகன் சல்லூம், அவர் மகன் மிப்சாம், அவர் மகன் மிஸ்மா.
26மிஸ்மாவின் புதல்வர்: அவர் மகன் அம்முயேல், அவர் மகன் சக்கூர், அவர் மகன் சிமயி.
27சிமயிக்கு பதினாறு புதல்வரும் ஆறு புதல்வியரும் இருந்தனர்; அவரின் சகோதரர்களுக்குப் புதல்வர் பலர் இருந்ததில்லை; அவர்கள் குடும்பங்கள் அனைத்தும் யூதாவின் புதல்வரைப்போல் பெருகவில்லை.
28அவர்கள் குடியேறிய இடங்கள்; பெயேர்செபா, மேலதா, அட்சார் சூவால்,
29பில்கா, எட்சேம், தோலாது,
30பெத்துவேல், ஒர்மா,சீக்லாகு,
31பெத்மர்காபோத்து, அட்சார்சூசிம், பெத்பிரி, சாரயிம் என்பவை. தாவீது அரசாளும்வரை இவை அவர்களின் நகர்களாய் இருந்தன.
32அவர்கள் வாழ்ந்த ஐந்து வேறு இடங்கள்; ஏத்தாம், அயின்; ரிம்மோன், தோக்கேன், ஆசான்;
33இந்நகர்களைச் சுற்றிலும் பாகால்வரை அமைந்த அனைத்துச் சிற்றூர்களும் அவர்களுடையவை. இவை அவர்களின் குடியிருப்புகள்; அவர்கள் தங்களுக்கென ஒரு தலைமுறைக் குறிப்பேடு வைத்திருந்தனர்.
34மெசோபாபு, யம்லேக்கு, அமட்சியா மகன் யோசா,
35யோவேல், அசியேலின் மகன் செராயாவுக்குப் பிறந்த யோசிபியாவின் மகன் ஏகூ,
36எலியோவனாய், யாக்கோபா, எசோகாயா, அசாயா, அதியேல், எசிமியேல், பெனாயா,
37செமாயாவின் மகன் சிம்ரிக்குப் பிறந்த எதாயாவின் புதல்வனான அல்லோனின் மகன் சிபியின் புதல்வன் சீசா.
38பெயர் பெயராகக் குறிக்கப்பட்டிருந்த இவர்கள் தம் குடும்பங்களில் தலைவர்களாய் இருந்தனர். இவர்களின் மூதாதை வீட்டார் பெருவாரியாகப் பெருகினர்.
39அவர்கள் தங்கள் மந்தைக்கு மேய்ச்சலைத் தேடிப் பள்ளத்தாக்கின் கீழ்ப்புறத்தில் கெதோர் நுழைவுவரை சென்றனர்.
40அங்கே அவர்கள் செழிப்புமிகு, நல்ல மேய்ச்சலைக் கண்டார்கள். நிலம் விரிந்து பரந்து, அமைதியுடனும் வளத்துடனும் இருந்தது. காமைச் சார்ந்தோர் முன்பு அங்குக் குடியிருந்தனர்.
41பெயர் பெயராகக் குறிக்கபட்டுள்ள இவர்கள் யூதா அரசன் எசேக்கியாவின் நாள்களில் அங்குச் சென்றார்கள். அங்குக் காணப்பட்ட கூடாரங்களையும் மெயுனியரையும் வெட்டி வீழ்த்தினர். இந்நாளில் இருப்பது போல் அவர்களை அழித்தொழித்து, தங்களின் ஆட்டுமந்தைக்கு மேய்ச்சல் நிலத்தைக் கண்டதால், அங்கேயே அவர்கள் குடியேறினார்கள்.
42சிமியோன் புதல்வர்களாகிய அவர்களுள் ஐந்நூறு பேர், இசீயின் புதல்வர்களான பெலத்தியா, நெகரியா, இரபாயா, உசியேல் ஆகியோரின் தலைமையில் சேயிர் மலைக்குச் சென்றனர்.
43அவர்கள் அமலேக்கியருள் தப்பிப் பிழைத்த எஞ்சியோரை அழித்து, அன்று முதல் இந்நாள்வரை அங்கே வாழ்ந்து வருகின்றனர்.

4:28-33 யோசு 19:2-8.