வெள்ளப்பெருக்கு

1அப்பொழுது ஆண்டவர் நோவாவிற்குக் கூறியது: “நீ உன் குடும்பத்தார் அனைவரோடும் பேழைக்குள் செல். ஏனெனில், இத்தலைமுறையில் உன்னையே நான் நேர்மையானவனாகக் காண்கிறேன்.
2தக்க விலங்குகள் எல்லாவற்றிலிருந்தும் ஆணும் பெண்ணுமாக ஏழு சோடிகளையும், தகாத விலங்குகளிலிருந்து ஆணும் பெண்ணுமாக ஒரு சோடியையும்.
3வானத்துப் பறவைகளிலிருந்து ஆணும் பெண்ணுமாக ஏழு சோடிகளையும் மண்ணுலகெங்கும் அவற்றின் இனங்கள் உயிர் பிழைத்துக் கொள்வதற்காக உன்னுடன் சேர்த்துக் கொள்.
4ஏனெனில், இன்னும் ஏழு நாள்களில் மண்ணுலகின்மேல் நாற்பது பகலும் நாற்பது இரவும் நான் மழை பெய்விக்கப்போகிறேன். நான் உருவாக்கிய உயிரினங்களை எல்லாம் இந்த நிலத்திலிருந்து அழித்தொழிப்பேன்.”
5ஆண்டவர் கட்டளையிட்டபடியே நோவா எல்லாவற்றையும் செய்தார்.
6மண்ணுலகில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது நோவாவிற்கு வயது அறுநூறு.
7வெள்ளப்பெருக்கிலிருந்து தப்புவதற்காக நோவா தம் புதல்வர், மனைவி, புதல்வரின் மனைவியர் ஆகியோருடன் பேழைக்குள் சென்றார்.
8தக்க விலங்குகள், தகாத விலங்குகள், பறவைகள், நிலத்தில் ஊர்வன அனைத்தும்
9சோடி சோடியாக, ஆணும் பெண்ணுமாக, நோவாவுடன் கடவுள் அவருக்குக் கட்டளையிட்டபடி பேழைக்குள் சென்றன.
10ஏழு நாள்களுக்குப்பின் மண்ணுலகில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
11நோவாவின் வாழ்க்கையின் அறுநூறாம் ஆண்டின் இரண்டாம் மாதத்தில் பதினேழாம் நாளன்று பேராழத்தின் ஊற்றுகள் எல்லாம் பீறிட்டெழுந்தன. வானங்களின் மதகுகள் திறக்கப்பட்டன.
12நாற்பது பகலும் நாற்பது இரவும் மண்ணுலகில் பெரு மழை பெய்தது.
13நோவா தம் புதல்வர் சேம், காம், எப்பேத்து, தம் மனைவி, தம் புதல்வர் மூவரின் மனைவியர் ஆகியோருடன் அன்றே பேழைக்குள் நுழைந்தார்.
14அவர்களும் அவர்களுடன் எல்லாவகைக் காட்டு விலங்குகளும், கால்நடைகளும், நிலத்தில் ஊர்வனவும், பறவைகளும், இறக்கைகளையுடைய யாவும்,
15உயிருள்ள அனைத்தும் சோடி சோடியாக நோவாவிடம் பேழைக்குள் சென்றன.
16கடவுள் அவருக்குக் கட்டளையிட்டபடி உள்ளே சென்றவை எல்லாம் ஒவ்வோர் உயிரினத்திலும் ஆணும் பெண்ணுமாக உள்ளே சென்றன. அதன் பின் ஆண்டவர் அவரை உள்ளே விட்டுக் கதவை மூடினார்.
17நாற்பது நாள்களாகப் பெரு வெள்ளம் மண்ணுலகில் வந்து கொண்டிருந்தது. வெள்ளம் பெருக்கெடுத்துப் பேழையைத் தூக்க, அது நிலத்திலிருந்து உயர்ந்து எழுந்தது.
18மண்ணுலகின் மேல் வெள்ளம் பாய்ந்து மிகுதியாகப் பெருக்கெடுக்க, பேழை நீரின்மேல் மிதந்தது.
19மண்ணுலகில் வெள்ளம் பாய்ந்து பெருகப்பெருக வானத்தின்கீழ் எங்கும் இருந்த உயர்ந்த மலைகள் எல்லாம் நீரில் மூழ்கின.
20மூழ்கிய மலைகளுக்குமேல் நீர் மட்டம் பதினைந்து முழம் உயர்ந்திருந்தது.
21நிலத்தில் ஊர்வன, பறவைகள், கால்நடைகள், காட்டு விலங்குகள், நிலத்தில் தவழ்வன, மனிதர் அனைவர் ஆகிய சதையுள்ள உயிரினங்கள் அனைத்தும் மாண்டன.
22தரையில் வாழ்ந்தவற்றில் நாசியால் மூச்சுவிடும் அனைத்தும் செத்துப் போயின.
23மனிதர் முதல் விலங்குகள், ஊர்வன, வானத்துப் பறவைகள் ஈறாக மண்ணில் உயிர் வாழ்ந்த அனைத்தும் அழிந்தன. அவை மண்ணுலகில் இராதபடி ஒழிக்கப்பட்டன. நோவாவும் அவருடன் பேழையில் இருந்தவர்களுமே எஞ்சியிருந்தனர்.
24நூற்றைம்பது நாள்களாக மண்ணுலகில் வெள்ளம் பாய்ந்து பெருகிற்று.

7:7 மத் 24:38-39; லூக் 17:27. 7:11 2 பேது 3:6.