மனிதரின் தீச்செயல்
1மண்ணில் மனிதர் பெருகத் தொடங்கி, அவர்களுக்குப் புதல்வியர் பிறந்தபொழுது,
2மனிதரின் புதல்வியர் அழகாக இருப்பதைத் தெய்வப் புதல்வர் கண்டு, தாங்கள் தேர்ந்து கொண்டவர்களையெல்லாம் மனைவியர் ஆக்கிக்கொண்டனர்.
3அப்பொழுது ஆண்டவர், “என் ஆவி தவறிழைக்கும் மனிதனில் என்றென்றும் தங்கப் போவதில்லை. அவன் வெறும் சதைதானே! இனி அவன் நூற்றிருபது ஆண்டுகளே வாழ்வான்” என்றார்.
4தெய்வப் புதல்வர் மனிதரின் புதல்வியருடன் சேர்ந்து அவர்களுக்குக் குழந்தைகள் பிறக்க, அக்காலத்திலும் அதற்குப் பின்னரும் மண்ணுலகில் அரக்கர் இருந்தனர். அவர்களே பெயர் பெற்ற பழங்காலப் பெருவீரர்கள் ஆவர்.
5மண்ணுலகில் மனிதர் செய்யும் தீமை பெருகுவதையும் அவர்களின் இதயச் சிந்தனைகளெல்லாம் நாள் முழுவதும் தீமையையே உருவாக்குவதையும் ஆண்டவர் கண்டார்.
6மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரமடைந்தது.
7அப்பொழுது ஆண்டவர், “நான் படைத்த மனிதரை மண்ணிலிருந்து அழித்தொழிப்பேன். மனிதர்முதல் கால்நடைகள், ஊர்வன, வானத்துப் பறவைகள்வரை அனைத்தையும் அழிப்பேன். ஏனெனில், இவற்றை உருவாக்கியதற்காக நான் மனம் வருந்துகிறேன்” என்றார்.
8ஆனால், நோவாவுக்கு ஆண்டவரின் அருள் பார்வை கிடைத்தது.
நோவா
9நோவானின் வழி மரபினர் இவர்களே: தம் காலத்தவருள் நோவா நேர்மையானவராகவும், குற்றமற்றவராகவும் இருந்தார். நோவா கடவுளோடு நடந்தார்.
10நோவாவிற்கு சேம், காம், எப்பேத்து என்னும் மூன்று புதல்வர் பிறந்தனர்.
11அப்பொழுது கடவுள் முன்னிலையில் மண்ணுலகு சீர்கெட்டிருந்தது, பூவுலகு வன்முறையால் நிறைந்திருந்தது.
12கடவுள் மண்ணுலகை உற்று நோக்கினார். இதோ! அது சீர்கெட்டுப் போயிருந்தது. மண்ணுலகில் ஒவ்வொருவரும் தீய வழியில் நடந்துவந்தனர்.
13அப்பொழுது கடவுள் நோவாவிடம் பின்வருமாறு கூறினார்: “எனது முன்னிலையிலிருந்து மனிதர் எல்லாரையும் ஒழித்துவிடப்போகிறேன். ஏனெனில், அவர்களால் மண்ணுலகில் வன்முறை நிறைந்திருக்கின்றது. இப்பொழுது நான் அவர்களை மண்ணுலகோடு அழிக்கப் போகிறேன்.
14உனக்காகக் கோபர் மரத்தால் ஒரு பேழை செய்; அதில் அறைகள் அமைத்து அதற்கு உள்ளேயும் வெளியேயும் கீல் பூசு.
15பேழையை நீ செய்யவேண்டிய முறையாவது; நீளம் முந்நூறு முழம்; அகலம் ஐம்பது முழம்; உயரம் முப்பது முழம்.
16பேழைக்குமேல் கூரை அமைத்து அந்தக் கூரை பேழைக்கு ஒரு முழம் வெளியே தாழ்வாக இருக்கும்படி கட்டி முடி; பேழையின் கதவை ஒரு பக்கத்தில் அமை. பேழையில் கீழ்த்தளம், நடுத்தளம், மேல்தளம் என மூன்று தளங்கள் அமை.
17நானோ, வானுலகின்கீழ் உயிருள்ள எல்லாவற்றையும் அழிப்பதற்காக மண்ணுலகின் மேல் வெள்ளப்பெருக்கு வரச் செய்வேன். மண்ணுலகில் உள்ளவையெல்லாம் மடிந்துபோம்.
18உன்னுடனோ, என் உடன்படிக்கையை நிலைநாட்டுவேன். உன் புதல்வர், உன் மனைவி, உன் புதல்வரின் மனைவியர் ஆகியோருடன் நீ பேழைக்குள் செல்.
19உன்னுடன் உயிர் பிழைத்துக்கொள்ளுமாறு, சதையுள்ள எல்லா உயிரினங்களிலிருந்தும் வகைக்கு இரண்டைப் பேழைக்குள் கொண்டு வா. அவை ஆணும் பெண்ணுமாக இருக்கட்டும்.
20வகை வகையான பறவைகள், கால்நடைகள், நிலத்தில் ஊர்வன ஆகியவற்றிலிருந்து வகைக்கு இரண்டு உயிர் பிழைத்துக்கொள்ள உன்னிடம் வரட்டும்.
21உண்பதற்கான எல்லா வகை உணவுப் பொருள்களையும் நீ எடுத்துச் சென்று சேர்த்து வைத்துக்கொள். அவை உனக்கும் அவற்றிற்கும் உணவாகட்டும்.”
22கடவுள் தமக்குக் கட்டளையிட்டபடியே நோவா எல்லாவற்றையும் செய்து முடித்தார்.
6:1-4 யோபு 1:6; 2:1. 6:4 எண் 13:33. 6:5-8 மத் 24:37; லூக் 17:26; 1 பேது 3:20. 6:9 2 பேது 2:5. 6:22 எபி 11:7.