போத்திபாரின் வீட்டில் யோசேப்பு

1யோசேப்பு எகிப்து நாட்டிற்கு கொண்டு போகப்பட்டபோது, பார்வோனின் மெய்க்காப்பாளர் தலைவனும் படைத்தலைவனுமான போத்திபார் என்ற எகிப்தியன் அவரை, அவ்விடத்திற்குக் கொண்டுவந்த இஸ்மயேலரிடமிருந்து விலைக்கு வாங்கினான்.
2ஆண்டவர் யோசேப்புடன் இருந்தார். எனவே, அவர் சிறப்புற்றவராகத் தம் எகிப்தியத் தலைவனின் இல்லத்தில் வாழ்ந்து வந்தார்.
3ஆண்டவர் அவரோடு இருந்ததையும் அவர் தொட்ட காரியமனைத்தையும் ஆண்டவர் துலங்கச் செய்ததையும் அவர் தலைவன் கண்டான்.
4எனவே, அவனுடைய தயை யோசேப்புக்குக் கிடைத்தது. அவன் அவரைத் தன் சிறப்புப் பணியாளராகவும் வீட்டின் மேலாளராகவும் நியமித்து, தனக்கிருந்த அனைத்தையும் அவர் பொறுப்பில் ஒப்படைத்தான்.
5இவ்வாறு, தன் வீட்டையும் தனக்கிருந்த அனைத்தையும் அவர் பொறுப்பில் விட்டதிலிருந்து, எகிப்தியனின் வீட்டுக்கு யோசேப்பின் பொருட்டு ஆண்டவர் ஆசி வழங்கினார். வீட்டிலும் வயல்வெளியிலும் அவனுக்கிருந்த அனைத்தின்மீதும் ஆண்டவர் ஆசி பொழிந்தார்.
6இவ்வாறு, யோசேப்பின் பொறுப்பில் தனக்கிருந்த அனைத்தையும் ஒப்படைத்த பின், தான் உண்ணும் உணவைத் தவிர வேறெதைப் பற்றியும் அவன் விசாரிக்கவில்லை. யோசேப்பு நல்ல உடற்கட்டும் அழகிய தோற்றமும் கொண்டிருந்தார்.
7சில நாள்கள் சென்றபின், யோசேப்பின் மீது கண்வைத்திருந்த அந்தத் தலைவனின் மனைவி அவரிடம், “என்னோடு படு” என்றாள்.
8அவர் அதற்கு இணங்க மறுத்து, தம் தலைவரின் மனைவியை நோக்கி, “என் தலைவர் எல்லாவற்றையும் என் பொறுப்பில் ஒப்படைத்து விட்டார். வீட்டிலுள்ள எதைப்பற்றியும் அவர் விசாரிப்பதுகூட இல்லை.
9இந்த வீட்டில் என்னைவிட அதிகாரம் பெற்றவர் ஒருவருமில்லை. நீங்கள் அவருடைய மனைவியாயிருப்பதால், உங்களைத் தவிர வேறெதையும் அவர் என்னிடம் ஒப்படைக்காமல் இருக்கவில்லை. இந்த மாபெரும் தீச்செயலைச் செய்து, கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்யலாமா?” என்றார்.
10அவள் நாள்தோறும் வற்புறுத்தியபோதிலும், யோசேப்பு அவளோடு படுக்கவோ இருக்கவோ இணங்கவில்லை.
11இவ்வாறிருக்க, ஒருநாள் யோசேப்பு தம் வேலையை முன்னிட்டு வீட்டுக்குள் சென்றார். உள்ளே வீட்டைச் சார்ந்தவர் வேறு எவரும் இல்லை.
12அவள் அவரது மேலாடையைப் பற்றி இழுத்து, “என்னோடு படு” என்றாள். உடனே அவர் அவள் கையில் தம் மேலாடையை விட்டுவிட்டு வெளியே தப்பியோடினார்.
13அவர் தம் மேலாடையை அவள் கையில் விட்டுவிட்டு வெளியே ஓடியதைக் கண்டு,
14அவள் தன் வீட்டு ஆள்களைக் கூப்பிட்டு; “என் கணவர் நம்மை அவமானப்படுத்துவதற்காகவா இந்த எபிரேயனை வீட்டிற்குக் கொண்டுவந்தார்? இதோ இவன் என்னோடு படுப்பதற்காக என்னிடம் வந்தான். உடனே நான் பெரும் கூச்சலிட்டுக் கத்தினேன்.
15ஆனால், நான் கூச்சலிட்டதைக் கண்டு அவன் தன் மேலாடையை என்னருகே போட்டுவிட்டு வெளியே ஓடிப்போய் விட்டான்” என்றாள்.
16மேலும், அவள் அவருடைய மேலாடையைத் தன் கணவன் வீட்டுக்குத் திரும்பி வரும்வரை வைத்திருந்துஅவனிடம்,
17“நீர் நம்மிடம் அழைத்து வந்துள்ள எபிரேய அடிமை என்னோடு சரசம் பண்ணும்படி என்னிடம் வந்தான்.
18அப்போது நான் கூச்சலிட்டுக் கத்தியதும், அவன் தன் மேலாடையை என்னருகே போட்டுவிட்டு வெளியே ஓடிப்போய்விட்டான்” என்று கதை கட்டினாள்.
19“உம் அடிமை எனக்கு இப்படிச் செய்துவிட்டான்” என்று தன் மனைவி சொல்லக் கேட்ட அவர் தலைவன், கடுஞ்சினம் கொண்டான்.
20யோசேப்பின் தலைவன், அரசக் கைதிகள் காவலில் வைக்கப்பட்டிருந்த அதே சிறைச்சாலைக்கு அவரை இழுத்துச் சென்று அடைத்து வைத்தான்.
21ஆண்டவர் யோசேப்புடன் இருந்து, அவர்மீது பேரன்பு காட்டி, சிறை மேலாளன் பார்வையில் அவருக்குத் தயை கிடைக்கும்படி செய்தார்.
22எனவே, சிறைமேலாளன் சிறையிலிருந்த கைதிகள் அனைவரையும், அங்குச் செய்யப்பட்ட வேலைகள் அனைத்தையும், யோசேப்பின் பொறுப்பில் ஒப்படைத்தான்.
23அவர் பொறுப்பில் விடப்பட்ட எதைப்பற்றியும் சிறைமேலாளன் விசாரிக்கவில்லை. ஏனெனில், ஆண்டவர் யோசேப்புடன் இருந்தார். அவர் செய்த யாவற்றிலும் வெற்றி அளித்தார்.