யாப்பாவில் யூதர்களின் அழிவு

1இந்த ஒப்பந்தங்களைச் செய்து கொண்டபின், மன்னனிடம் லீசியா திரும்பிச் சென்றான். யூதர்கள் தங்கள் பயிர்த்தொழிலில் ஈடுபட்டார்கள்.
2ஆனால் அந்தந்த இடத்துக்கு ஆளுநர்களாகத் திமொத்தெயு, கென்னாயின் மகனான அப்பொல்லோன், மற்றும் ஏரோனிம், தெமோபோன் ஆகியோருடன் சேர்ந்து சைப்பிரசு நாட்டு ஆளுநனான நிக்கானோரும் யூதர்களைத் தொல்லையின்றி அமைதியாக வாழவிடவில்லை.
3இதே காலத்தில், யாப்பா நகரத்தார் மாபெரும் துரோகம் புரிந்தார்கள்; தங்களோடு வாழ்ந்துவந்த யூதர்களிடம் பகைமை அற்றவர்போல் காட்டிக் கொண்டு, அவர்களை மனைவி மக்களோடு, தாங்கள் ஏற்பாடு செய்திருந்த படகுகளில் ஏறும்படி கேட்டுக்கொண்டார்கள்.
4இது நகரத்தாரின் பொது இசைவுடன் செய்யப்பட்டதால், அமைதியில் வாழ விரும்பிய யூதர்கள் யாதொரு ஐயப்பாட்டுக்கும் இடம் கொடாது அதற்கு இசைந்தார்கள். யாப்பா நகரத்தார் அவர்களைக் கடலுக்குள் கொண்டுபோய் மூழ்கடித்தார்கள். இவ்வாறு மூழ்கடிக்கப்பட்டவர்கள் ஏறக்குறைய இருநூறு பேர்.
5தம் இனத்தாருக்குச் செய்யப்பட்ட இக்கொடுமைபற்றி யூதா கேள்விப்பட்டு அதை அவர் தம் வீரர்களுக்குத் தெரிவித்தார்;
6நேர்மையான நடுவராகிய கடவுளை மன்றாடிவிட்டுத் தம் சகோதரர்களைக் கொன்றவர்களை எதிர்த்துச் சென்றார்; இரவில் துறைமுகத்துக்குத் தீவைத்துப் படகுகளைக் கொளுத்தினார்; அங்கு அடைக்கலம் புகுந்திருந்தவர்களை வாளுக்கு இரையாக்கினார்;
7நகர வாயில்கள் அடைபட்டிருந்ததால் அவர் திரும்பிச் சென்றார்; மீண்டும் வந்து யாப்பா நகரத்தார் அனைவரையும் அறவே அழிக்கத் திட்டமிட்டார்.
8யாம்னியா மக்களும் தங்களிடையே வாழ்ந்துவந்த யூதர்களை இவ்வாறே கொல்லத் திட்டமிட்டிருந்தார்கள் என்று அவர் அறிய வந்தார்;
9இரவில் யாம்னியா மக்களைத் தாக்கினார்; கப்பற்படையோடு சேர்த்துத் துறைமுகத்துக்குத் தீவைத்தார். இத்தீப்பிழம்பின் செந்தழல் ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் இருந்த எருசலேம் வரை தெரிந்தது.

கிலயாதுமீது படையெடுப்பு

10யூதர்கள் யாம்னியாவிலிருந்து திமொத்தேயுவை எதிர்த்து ஏறத்தாழ இரண்டு கிலோ மீட்டர் சென்ற போது ஐந்நூறு குதிரைவீரர்களுடன் குறைந்தது ஐயாயிரம் அரேபியர்கள் அவர்களை எதிர்த்தார்கள்.
11கடுஞ் சண்டைக்குப்பின் கடவுளின் உதவியால் யூதாவும் அவருடைய ஆள்களும் வெற்றி பெற்றார்கள். தோல்வியுற்ற அந்த நாடோடிகள் தங்களோடு சமாதானம் செய்துகொள்ளுமாறு யூதாவைக் கேட்டுக்கொண்டார்கள்; அவருக்குக் கால்நடைகளைக் கொடுப்பதாகவும் அவருடைய ஆள்களுக்கு எல்லா வழிகளிலும் உதவுவதாகவும் உறுதி மொழிந்தார்கள்.
12அவர்கள் பலவகையிலும் உண்மையிலேயே தமக்குப் பயன்படுவார்கள் என்று உணர்ந்த யூதா அவர்களோடு சமாதானம் செய்துகொள்ள உடன்பட்டார். அவரிடமிருந்து உறுதி பெற்றபின் அவர்கள் தங்கள் பாசறைகளுக்குத் திரும்பினார்கள்.
13பல்வேறு இனத்தவர் வாழ்ந்த, மதில்களோடு நன்கு அரண்செய்யப்பட்ட ஒரு நகரையும் யூதா தாக்கினார். அதன் பெயர் காஸ்பின்.
14அதன் உள்ளே இருந்தவர்கள் மதில்களின் வலிமையையும் சேகரிக்கப்பட்ட உணவுப்பொருள்களையும் நம்பி யூதாவிடமும் அவருடைய ஆள்களிடமும் சற்றும் மரியாதையின்றி நடந்து கொண்டார்கள். இழிசொற்களால் அவர்களைத் திட்டியதோடு இறைவனையும் பழித்தார்கள்.
15ஆனால் இடிக்கும் கருவிகளையும் படைப்பொறிகளுமின்றி யோசுவா காலத்தில் எரிகோவைத் தரைமட்டமாக்கிய உலகின் பெரும் தலைவரை யூதாவும் அவருடைய ஆள்களும் துணைக்கு அழைத்து மதில்களை நோக்கிச் சீற்றத்துடன் பாய்ந்து சென்றார்கள்.
16கடவுளின் திருவுளத்தால் நகரைக் கைப்பற்றினார்கள்; எண்ணற்ற பேரைக் கொன்றார்கள். இதனால் அருகே இருந்த ஏறக்குறைய அரை கிலோ மீட்டர் அகலமான ஏரி குருதியால் நிரம்பி வழிந்தது போலத் தோன்றியது.

கர்னாயிம் மீது தாக்குதல்

17அவர்கள் அங்கிருந்து ஏறத்தாழ நூற்றைம்பது கிலோமீட்டர் கடந்து சென்றபின் ‘தோபியர்’* என்று அழைக்கப்பெற்ற யூதர்கள் வாழ்ந்து வந்த காராகா என்னும் இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.
18அவர்கள் அங்கே திமொத்தேயுவைக் காணவில்லை; ஏனெனில் ஓர் இடத்தில் வலிமை வாய்ந்த ஒரு காவற்படையை நிறுத்தி வைத்ததைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாத நிலையில் அவன் அங்கிருந்து ஏற்கெனவே புறப்பட்டுச் சென்றுவிட்டான்.
19மக்கபேயிடம் படைத்தலைவர்களாய் இருந்த தொசித்தும் சோசிபத்தரும் அணிவகுத்துச் சென்று ஒரு கோட்டையில் திமொத்தேயு விட்டுவைத்திருந்த பத்தாயிரத்துக்கும் மிகுதியானவர்களை அழித்தார்கள்.
20மக்கபே தம் படைகளை அணி அணியாய்ப் பிரித்து ஒவ்வோர் அணிக்கும் ஒரு தலைவரை ஏற்படுத்தியபின், திமொத்தேயுவைத் துரத்திச் சென்றார். அவனிடம் இலட்சத்து இருபதாயிரம் காலாட்படையினரும் இரண்டாயிரத்து ஐந்நூறு குதிரைப்படையினரும் இருந்தனர்.
21யூதா தன்னை நெருங்கி வருவதை அறிந்த போது திமொத்தேயு பெண்களையும் பிள்ளைகளையும் பொருள்களையும் கர்னாயிம் நகருக்கு அனுப்பினான்; அங்குச் செல்லும் பாதைகள் அனைத்தும் ஒடுக்கமானவையாய் இருந்தமையால் அந்த இடம் முற்றுகையிடுவதற்குக் கடினமாயும் நெருங்குவதற்கு அரிதாயும் இருந்தது.
22ஆனால் யூதாவின் முதல் அணியைக் கண்டவுடனேயே அச்சமும் கலக்கமும் பகைவர்களை ஆட்கொண்டன; ஏனெனில் அனைத்தையும் காண்பவர் அவர்களுக்குத் தோன்றினார். எனவே அவர்கள் மிரண்டு தலைதெறிக்க ஓடி எல்லாப் பக்கத்திலும் சிதறுண்டு போனார்கள்; தங்களுடைய ஆள்களின் வாள் முனைகளாலேயே குத்தப்பட்டு அடிக்கடி ஒருவர் மற்றவரைக் காயப்படுத்திக் கொண்டார்கள்.
23யூதா மிகுந்த வலிமையோடு அவர்களைப் பின்தொடர்ந்து அந்தக் கொடியவர்களை வாளுக்கு இரையாக்கினார்; அவர்களுள் முப்பதாயிரம் பேரை அழித்தார்.
24தொசித்து, சோசிபத்தர், அவர்களுடைய ஆள்கள் ஆகியோருடைய கையில் திமொத்தேயுவே அகப்பட்டுக் கொண்டான். தன்னை உயிரோடு போகவிடவேண்டும் என்று நயவஞ்சமாக அவர்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்; அவர்களுள் பெரும்பாலோருடைய பெற்றோரும் சகோதரரும் தன்னுடைய பிடியில் இருந்ததால், எச்சலுகையும் அவர்களுக்குக் காட்டப்படமாட்டாது என்று கூறியிருந்தான்.
25எத்தீங்கும் செய்யாமல் அவர்களைத் திருப்பி அனுப்பிவிடுவதாகக் கொடுத்திருந்த தனது வாக்கை அவன் மீண்டும் உறுதிப்படுத்தியதால், தங்கள் சகோதரர்களைக் காப்பாற்றும்பொருட்டு அவனை அவர்கள் விட்டுவிட்டார்கள்.
26யூதா அதன்பின் கர்னாயிமையும் அத்தர்காத்துக் கோவிலையும் எதிர்த்துச் சென்று இருபத்தையாயிரம் பேரைக் கொன்றார்;
27அவர்களை முறியடித்துக் கொன்றபின் எபிரோனை எதிர்த்துச் சென்றார். அரண்சூழ்ந்த அந்நகரில்தான் பன்னாட்டு மக்கள் கூட்டத்தோடு லீசியா வாழ்ந்துவந்தான். வலிமைமிக்க இளைஞர்கள் மதில்களுக்கு முன்பாக நின்றுகொண்டு அவற்றைத் துணிவுடன் பாதுகாத்தார்கள். அங்குப் படைப்பொறிகளும் எறிபடைகளும் மிகுதியாக இருந்தன.
28தமது ஆற்றலால் பகைவர்களின் வலிமையைச் சிதறடிக்க வல்லவரான இறைவனிடம் யூதர்கள் மன்றாடியபின், நகரைக் கைப்பற்றினார்கள்; அதில் இருந்தவர்களுள் இருபத்தையாயிரம் பேரைக் கொன்றார்கள்.
29அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு எருசலேமிலிருந்து நூற்று இருபது கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்த சித்தோப்பொலிக்கு விரைந்தார்கள்.
30ஆனால் அங்கு வாழ்ந்த யூதர்கள், சித்தோப்பொலி மக்கள் தங்களை நன்கு நடத்தியதற்கும் துன்ப காலத்திலும் தங்களுக்கு அன்பு காட்டியதற்கும் சான்று பகர்ந்தார்கள்.
31அதனால் யூதாவும் அவருடைய ஆள்களும் சித்தோப்பொலி மக்களுக்கு நன்றி கூறி எதிர்காலத்திலும் தங்கள் இனத்தாருடன் அன்புறவோடு வாழும்படி கேட்டுக் கொண்டார்கள். பின் பெந்தேகோஸ்து திருவிழா* நெருங்கி வந்தமையால் எருசலேமுக்குச் சென்றார்கள்.

கோர்கியாமீது வெற்றி

32யூதர்கள் பெந்தேகோஸ்து திருவிழாவுக்குப்பின் இதுமெயா நாட்டு ஆளுநனான கோர்கியாவை எதிர்க்க விரைந்தார்கள்.
33அவன் மூவாயிரம் காலாட்படையினரோடும் நானூறு குதிரைப்படையினரோடும் அவர்களை எதிர்த்துச் சென்றான்.
34அவர்கள் போர் தொடுத்தபோது யூதர்களுள் சிலர் கொலை செய்யப்பட்டார்கள்.
35ஆனால் பக்கேனோருடைய ஆள்களுள் வலிமைமிக்க ஒருவரான தொசித்து குதிரைமேல் இருந்தபடியே கோர்கியாவைப் பிடித்துக்கொண்டார். அந்தக் கயவனுடைய மேலாடையைப் பற்றிக்கொண்டு அவனை மிக்க வலிமையோடு இழுத்த வண்ணம் உயிரோடு பிடித்துச் செல்ல எண்ணியிருந்தபோது, திராக்கோன் குதிரைவீரர்களுள் ஒருவன் தொசித்துமீது பாய்ந்து அவருடைய தோளைத் துண்டித்தான். ஆகவே கோர்கியா மாரிசாவுக்குத் தப்பியோடினான்.
36எஸ்தரியும் அவருடைய ஆள்களும் நீண்ட நேரம் போர்செய்து களைப்புற்றிருந்ததால், தங்கள் சார்பாக இருந்து போரிடுவதோடு தலைமையேற்று நடத்துமாறு ஆண்டவரை யூதா வேண்டினார்;
37தம் தாய் மொழியில் போர்க்குரல் எழுப்பிப் புகழ்ப்பாக்கள் இசைத்தார். எதிர் பாராத நேரத்தில் கோர்கியாவின் படையின்மீது பாய்ந்து அவர்களைப் புறமுதுகு காட்டி ஓடும்படி செய்தார்.

இறந்தோருக்காக வேண்டுதல்

38பின் யூதா தம் படையைத் திரட்டிக் கொண்டு அதுல்லாம் நகரை அடைந்தார். ஏழாம் நாள் வந்தபோது அவர்கள் தங்கள் வழக்கப்படி தங்களைத் தூய்மைப்படுத்திக்கொண்டு அவ்விடத்தில் ஓய்வு நாளைக் கடைப்பிடித்தார்கள்.
39போரில் மடிந்தவர்களின் சடலங்களை எடுத்து அவர்களுடைய மூதாதையரின் கல்லறைகளில் உறவினர்களோடு அடக்கம் செய்ய வேண்டியிருந்ததால், அவற்றைக் கொண்டுவரும்படி மறுநாள் யூதாவும் அவருடைய ஆள்களும் புறப்பட்டார்கள்.
40ஆனால் யூதர்கள் அணியலாகாது என்று திருச்சட்டம் தடைசெய்திருந்த, யாம்னியாவில் இருந்த சிலைகளின் அடையாளங்கள் கொலையுண்ட ஒவ்வொருவரின் ஆடைக்குள்ளும் தென்பட்டன. இதனால்தான் அவர்கள் மடிந்தார்கள் என்பது அப்போது எல்லாருக்கும் தெளிவாயிற்று.
41ஆகவே மறைவானவற்றை வெளிப்படுத்துகிற, நீதியுள்ள நடுவராகிய ஆண்டவரின் செயல்களை எல்லாரும் போற்றினார்கள்;
42அந்தப் பாவத்தை முற்றிலும் துடைத்தழிக்குமாறு வேண்டியவண்ணம் மன்றாட்டில் ஈடுபட்டார்கள். பாவத்தினின்று அகலும்படி பெருமகனார் யூதா மக்களுக்கு அறிவுரை கூறினார்; ஏனெனில் பாவத்தின் விளைவாக மடிந்தவர்களுக்கு நேர்ந்ததை அவர்கள் தங்கள் கண்ணாலேயே பார்த்தார்கள்.
43பின்பு அவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் அவர் பணம் திரட்டி ஆறு கிலோ* வெள்ளி சேகரித்து, பாவம் போக்கும் பலி ஒப்புக்கொடுக்கும்படி எருசலேமுக்கு அனுப்பிவைத்தார்; இச்செயல்மூலம் உயிர்த்தெழுதலை மனத்தில் கொண்டு நன்முறையில், மேன்மையாக நடந்து கொண்டார்.
44ஏனெனில் வீழ்ந்தோர் மீண்டும் எழுவர் என்பதை எதிர் பார்த்திருக்கவில்லை என்றால், அவர் இறந்தோருக்காக மன்றாடியது தேவையற்றதும் மடமையும் ஆகும்.
45ஆனால் இறைப்பற்றுடன் இறந்தோர் சிறந்த கைம்மாறு பெறுவர் என்று அவர் எதிர்பார்த்திருப்பாரெனில், அது இறைப்பற்றை உணர்த்தும் தூய எண்ணமாகும். ஆகவே இறந்தவர்கள் தங்கள் பாவத்தினின்று விடுதலை பெறும்படி அவர் அவர்களுக்காகப் பாவம் போக்கும் பலி ஒப்புக்கொடுத்தார்.

12:10-16 1 மக் 5:9-54; 12:15; யோசு 6:1-21. 12:17-25 1 மக் 5:37-44. 12:26-31 1 மக் 5:45-54. 12:40 இச 7:25.
12:17 தோபி நாட்டில் வாழ்ந்ததால் தோபியர் என்று பெயர் பெற்றனர். (காண் 1மக் 5:13). 12:31 ‘வாரங்களின் விழா’ என்பது மூலப்பாடம் (காண் விப 34:22; இச 16:10). 12:43 ‘இரண்டாயிரம் திராக்மா’ என்பது கிரேக்க பாடம்.