முதல் வாசகம்
அருள்பணி எனக்கு அளிக்கப்பட்டதை உணர்ந்து கைகொடுத்தனர்.
திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-2, 7-14
சகோதரர் சகோதரிகளே,
பதினான்கு ஆண்டுகளுக்குப் பின் தீத்துவையும் கூட்டிக்கொண்டு பர்னபாவுடன் நான் மீண்டும் எருசலேமுக்குப் போனேன். நான் போகவேண்டும் என்று வெளிப்படுத்தப்பட்டபடியால்தான் அங்குப் போனேன். பிற இனத்தார் நடுவில் நான் அறிவித்துவந்த நற்செய்தியைப் பற்றி அங்கே எடுத்துக் கூறினேன். செல்வாக்கு உள்ளவர்களிடம் தனிமையில் எடுத்துரைத்தேன். நான் இப்போது செய்யும் பணியும் இதுவரை செய்த பணியும் பயனற்றுப் போகக் கூடாதே என்பதற் காகத்தான் இவ்வாறு செய்தேன்.
ஆனால் யூதர்களுக்கு நற்செய்தி அறிவிக்கும் பணி பேதுருவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது போலவே, பிற இனத்தாருக்கு அதை அறிவிக்கும் பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் கண்டுகொண்டார்கள். ஆம், யூதர்களின் திருத்தூதராகச் செயல்படும் ஆற்றலைப் பேதுருவுக்குத் தந்தவரே பிற இனத்தாருக்குத் திருத்தூதராகச் செயல்படும் ஆற்றலை எனக்கும் தந்தார். அந்த அருள்பணி எனக்கு அளிக்கப்பட்டதை உணர்ந்து திருச்சபையின் தூண்கள் எனக் கருதப்பட்ட யாக்கோபு, கேபா, யோவான் ஆகியோர் நட்புறவின் அடையாளமாக எனக்கும் பர்னபாவுக்கும் கைகொடுத்தனர். யூதர்களுக்கு அவர்களும் யூதரல்லாதோர்க்கு நாங்களும் நற்செய்தி அறிவிக்கவேண்டும் என்று ஒத்துக்கொண்டோம். ஏழைகளுக்கு உதவிசெய்ய மறக்கவேண்டாம் என்று மட்டும் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். அதைச் செய்வதில் தான் நான் முழு ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்தேன்.
ஆனால் கேபா அந்தியோக்கியாவுக்கு வந்தபோது அவர் நடந்து கொண்ட முறை கண்டனத்துக்கு உரியது எனத் தெரிந்ததால் நான் அவரை நேருக்கு நேராய் எதிர்த்தேன். அதாவது யாக்கோபின் ஆள்கள் சிலர் வருமுன் கேபா பிற இனத்தாருடன் உண்டு வந்தார்; ஆனால் அவர்கள் வந்தபின் அவர்களுக்கு அஞ்சி அவ்வாறு உண்பதை விட்டுவிட்டார். மற்ற யூதர்களும் இந்த வெளிவேடத்தில் அவரோடு சேர்ந்துகொண்டனர். இந்த வெளிவேடம் பர்னபாவைக்கூடக் கவர்ந்து விட்டது.
இவ்வாறு அவர்கள் நற்செய்தியின் உண்மைக்கேற்ப நேர்மையாய் நடவாததைக் கண்ட நான் எல்லார் முன்னிலையிலும் கேபாவிடம், “நீர் யூதராயிருந்தும் யூத முறைப்படி நடவாமல் பிற இனத்தாரின் முறைப்படி நடக்கிறீரே! அப்படியிருக்க பிற இனத்தார் யூத முறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென நீர் எப்படிக் கட்டாயப்படுத்தலாம்?” என்று கேட்டேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 117: 1. 2 (பல்லவி: மாற்கு 16: 15)பல்லவி: உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
உரோ 8: 15அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள். அதனால் நாம், “அப்பா, தந்தையே” என அழைக்கிறோம். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
ஆண்டவரே, எங்களுக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடும்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 1-4
அக்காலத்தில்
இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, “ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்தது போல் எங்களுக்கும் கற்றுக்கொடும்” என்றார்.
அவர் அவர்களிடம், “நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்: தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப் பெறுக! உமது ஆட்சி வருக! எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால் எங்கள் பாவங்களையும் மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்” என்று கற்பித்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.