சாமுவேல் இஸ்ரயேலரை ஆளுதல்

1கிரியத்து எயாரிமின் ஆள்கள் வந்து ஆண்டவரின் பேழையைத் தூக்கிச் சென்று, குன்றின் மீதிருந்த அபினதாபின் வீட்டில் வைத்தனர். ஆண்டவரின் பேழையை காக்கும் படி அவன் மகன் எல்யாசரைத் திரு நிலைப்படுத்தினர்.
2பேழை கிரியத்து எயாரில் பலநாள்கள் தங்கியது; இருபது ஆண்டுகள் ஆயின. இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் ஆண்டவரை நினைத்துப் புலம்பிக்கொண்டிருந்தனர்.
3இஸ்ரயேல் வீட்டார் அனைவருக்கும் சாமுவேல் கூறியது: “நீங்கள் முழுஉள்ளத்தோடு ஆண்டவரிடம் திரும்பினால் வேற்றுத் தெய்வங்களையும் அஸ்தரோதையும் உங்களிடமிருந்து அகற்றி விடுங்கள். உங்கள் உள்ளங்களை ஆண்டவருக்காகத் தயார் செய்யுங்கள். அவருக்கு மட்டுமே ஊழியம் செய்யுங்கள். பெலிஸ்தியர் கையிலினின்று அவர் உங்களை விடுவிப்பார்.
4இஸ்ரயேல் மக்கள் பாகால்களையும் அஸ்தரோதையும் விலக்கிவிட்டு ஆண்டவருக்கு மட்டுமே ஊழியம் செய்தார்கள்.
5மேலும் சாமுவேல், “இஸ்ரயேலர் அனைவரையும் மிஸ்பாவில் ஒன்று கூட்டுங்கள். உங்களுக்காக நான் ஆண்டவரிடம் மன்றாடுவேன்” என்றார்.
6ஆகவே, அவர்கள் மிஸ்பாவில் ஒன்றுகூடி தண்ணீர் மொண்டு ஆண்டவர் திருமுன் ஊற்றி, அன்று நோன்பிருந்து ‘ஆண்டவருக்கு எதிராக நாங்கள் பாவம் செய்துவிட்டோம்’ என்று அறிக்கையிட்டார். சாமுவேல் மிஸ்பாவில் தங்கி இஸ்ரயேல் மக்களுக்கு தலைவராய் இருந்தார்.
7இஸ்ரயேல் மக்கள் மிஸ்பாவில் ஒன்று கூடியதைப் பெலிஸ்தியர் கேள்விப்பட்டனர். அப்போது பெலிஸ்திய தலைவர்கள் இஸ்ரயேலுக்கு எதிராகப் புறப்பட்டார்கள். இதைக் கேட்ட இஸ்ரயேல் மக்கள் பெலிஸ்தியரை முன்னிட்டு அச்சமுற்றார்கள்.
8இஸ்ரயேல் மக்கள் சாமுவேலிடம் கூறியது: “நம் கடவுளாகிய ஆண்டவர் பெலிஸ்தியர் கையினின்று நம்மை காக்கும் படி அவரிடம் விடாமல் மன்றாடும்”.
9ஆகவே, பால் குடிக்கும் ஓர் ஆட்டுக் குட்டியை சாமுவேல் பிடித்து அதை ஆண்டவருக்கு ஒரு முழு எரி பலியாக செலுத்தி, இஸ்ரயேலுக்காக அவரிடம் மன்றாடினார். ஆண்டவரும் அவர்தம் மன்றாட்டை கேட்டார்.
10சாமுவேல் இவ்வாறு எரி பலி செலுத்திக் கொண்டிருந்த போது, பெலிஸ்தியர் இஸ்ரயேலுடன் போரிட நெருங்கினர். அன்று ஆண்டவர் பெலிஸ்தியர் மீது பேரிடி முழங்கச் செய்து அவர்களைக் கலங்கடிக்க, அவர்கள் இஸ்ரயேலர் முன்பாகத் தோல்லியுற்றனர்.
11இஸ்ரயேல் மிஸ்பாவிலிருந்து புறப்பட்டுப் பெத்கார் பள்ளத்தாக்கு வரை பெலிஸ்தியரைத் துரத்திச் சென்று, அவர்களை வெட்டி வீழ்த்தினார்கள்.
12சாமுவேல் ஒரு கல்லை எடுத்து அதை மிஸ்பாவுக்கு சொனாவுக்கும் நடுவில் நிறுத்தி, “ஆண்டவர் இதுவரை நமக்கு உதவி செய்தார்” என்று கூறி அதற்கு ‘எபனேசர்’* என்று பெயரிட்டார்.
13பெலிஸ்தியர் சிறுமையுற்று அதன்பின் மீண்டும் இஸ்ரயேல் எல்லைக்குள் வரவில்லை. சாமுவேலின் வாழ் நாள் முழுவதும் ஆண்டவரின் கரம் பெலிஸ்தியருக்கு எதிராக இருந்தது.
14எக்ரோன் முதல் காத்துவரை இஸ்ரயேலிடமிருந்து பெலிஸ்தியர் கைப்பற்றியிருந்த நகர்கள் இஸ்ரயேலுக்கு திரும்பக் கிடைத்தன. பெலிஸ்தியர் கையினின்று இஸ்ரயேல் தங்கள் எல்லைப் பகுதியை மீட்டுக் கொண்டனர். மேலும், இஸ்ரயேருக்கும் எமோரியருக்குமிடையே அமைதி நிலவிற்று.
15சாமுவேல் தம் வாழ்நாள் முழுவதும் இஸ்ரயேலுக்குத் தலைவராய் இருந்தார்.
16அவர் ஆண்டு தோறும் சுற்றுப் பயணம் செய்து, பெத்தேல், கில்கால், மிஸ்பா ஆகிய இடங்களில் எல்லாம் இஸ்ரயேலுக்கு நீதி வழங்கினார்.
17பின்பு, அவர் தம் வீடு இருந்த இராமாவுக்குத் திரும்பி அங்கேயும் இஸ்ரயேலருக்கு நீதி வழங்கினார்; அங்கே ஆண்டவருக்கு ஒரு பலி பீடம் எழுப்பினார்.

7:12 சாமு 6:2-4; 1 குறி 13:5-7.
7:12 எபிரேயத்தில், ‘உதவியின் கல்’ என்பது பொருள்.