கெயிலா நகரைத் தாவீது பாதுகாத்தல்

1பின்னர், “பெலிஸ்தியர் கெயிலாவுக்கு எதிராகப் போர் தொடுத்துக் களஞ்சியங்களைக் கொள்ளையடிக்கின்றனர்” என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது.
2ஆதலால், தாவீது, “நான் சென்று இப்பெலிஸ்தியரை முறியடிக்கலாமா?” என்று ஆண்டவரிடம் ஆலோசனை கேட்டதற்கு, ஆண்டவர் தாவீதிடம், “நீ போய் பெலிஸ்தியரை முறியடித்துக் கெயிலாவைக் காப்பாற்று!” என்று பதிலளித்தார்.
3ஆனால், தாவீதின் வீரர்கள் அவரை நோக்கி, “நாம் யூதாவில் இருக்கும் போதே இப்படி அஞ்சுகிறோம். பெலிஸ்தியர் படைகளுக்கு எதிராக நாம் கெயிலாவுக்கு சென்றால் இன்னும் எவ்வளவு அஞ்வோம்?” என்றனர்.
4தாவீது மீண்டும் ஆண்டவரிடம் ஆலோசனை கேட்டார்; ஆண்டவர் மீண்டும் மறுமொழியாக, “கெயிலாவுக்குப் புறப்பட்டுப் போ! ஏனெனில், பெலிஸ்தியரை உன்னிடம் ஒப்புவிப்பேன்” என்றார்.
5பின்பு, தாவீதும் அவர்தம் வீரர்களும் கெயிலாவுக்குச் சென்று, பெலிஸ்தியரோடு போரிட்டனர். அவர் அவர்களுக்குப் பேரிழப்பை உண்டாக்கி அவர்களின் கால்நடைகளை ஓட்டிச்சென்றார். இவ்வாறு, தாவீது கெயிலாவாழ் மக்களை விடுவித்தார்.
6அகிமெலக்கின் மகன் அபியத்தார் தாவீதிடம் ஓடிவந்த போது ஓர் ஏபோதை தம்முடன் எடுத்து வந்திருந்தார்.
7பின்னர், தாவீது கெயிலாவுக்கு வந்திருப்பது பற்றிச் சவுலுக்கு தெரிவிக்கப்பட்டபோது, சவுல் “கடவுள் அவனை என்னிடம் ஒப்புவித்துள்ளார். ஏனெனில், கதவுகளும் தாழ்ப்பாள்களுமுள்ள நகரில் நுழைந்து அவன்மாட்டிக் கொண்டான்” என்றார்.
8அடுத்து, கெயிலாமீது படையெடுத்துத் தாவீதையும் அவர் வீரர்களையும் முற்றுக்கையிடுமாறு சவுல் தம் வீரர்கள் எல்லாரையும் போருக்கு அழைத்தார்.
9சவுல் தமக்குத் தீங்கு செய்யத்திட்டமிடுகிறார் என்று தாவீது அறிந்து, குரு அபியத்தாரிடம், “ஏபோதை இங்குக் கொண்டுவா” என்றார்.
10பிறகு தாவீது, “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே, என் பொருட்டு சவுல் கெயிலாவுக்கு வந்து அந்நகரை அழிக்க திட்டமிட்டுள்ளதை உம் அடியான் நான் பன்முறை கேள்விப்பட்டேன்.
11கெயிலாவின் குடிமக்கள் என்னை அவரிடம் ஒப்புவிப்பார்களா? உம் அடியான் கேள்விப்பட்டது போல் சவுல் வருவாரா? என்று கேட்டார். அதற்கு ஆண்டவர்,“அவன் வருவான்” என்று பதிலளித்தார்.
12மீண்டும் தாவீது, “கெயிலா மக்கள் என்னையும் என் வீரர்களையும் சவுலிடம் ஒப்புவிப்பார்களா?” என்று கேட்டார். அதற்கு ஆண்டவர், “அவர்கள் உங்களை ஒப்புவிப்பார்கள்” என்றார்.
13பின்பு, தாவீதும் அவருடன் இருந்த சுமார் அறுநூறு பேரும் கெயிலாவைவிட்டுப் புறப்பட்டு இடமாறிச் சென்று கொண்டிருந்தார்கள். தாவீது தப்பிவிட்டதைக் கேள்விப்பட்ட சவுல், மேலும் தொடர்வதைக் கைவிட்டார்.

மலைநாட்டில் தாவீது

14தாவீது பாலைநிலத்தில் பாதுகாப்பான இடத்தில் தங்கியிருந்தார். மலை நாடான சீபு பாலை நிலப் பகுதிகளில் தங்கியிருந்தவரைச் சவுல் ஒவ்வொரு நாளும் தேடியும் கடவுள் அவரை அவரிடம் ஒப்புவிக்கவில்லை.
15சவுல் தம்மைக் கொலைச் செய்யத் தேடுகிறார் என்று அறிந்த தாவீது மிகுந்த அச்சம் கொண்டார்; ஆதலால், ஓர்சாவில் உள்ள சீபு பாலைநிலத்தில் தங்கியிருந்தார்.
16சவுலின் மகன் யோனத்தான் புறப்பட்டு ஓர்சாவில் இருந்த தாவீதிடம் வந்து கடவுள் அவரைப் பாதுகாப்பார் என்று திடப்படுத்தினார்.
17அவர் தாவீதிடம், “அஞ்சாதே! என் தந்தை சவுல் உன்னைக் கண்டு பிடிக்கமாட்டார். நீ இஸ்ரயேலுக்கு அரசனாவாய்; அப்பொழுது நான் உனக்கு அடுத்த இடத்தை வகிப்பேன்; என் தந்தை சவுல் கூட இதை அறிவார்” என்றார்.
18ஆண்டவர் திருமுன் இருவரும் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டனர். தாவீது ஓர்சாவிலேயே இருக்க, யோனத்தான் வீடுதிரும்பினான்.
19பின்பு, சீபியர் கிபாயாவிலிருந்த சவுலிடம் சென்று, “தாவீது எங்கள் பகுதியில் எசிமோனுக்குத் தெற்கே உள்ள அக்கிலா என்ற மலைநாட்டில் ஓர்சாவின் பாதுகாப்பான இடத்தில் ஒளிந்துக் கொண்டிருக்கிறான் அல்லவா?
20அரசே, உம் விருப்பத்தின் படி இப்பொழுதே வாரும்; அவனை நாங்களே அரசரிடம் ஒப்புவிக்கிறோம்” என்று கூறினர்.
21சவுல் அவர்களைப் பார்த்து, “நீங்கள் என் மீது இரக்கம் காட்டியதால் ஆண்டவரின் ஆசியைப் பெறுவீர்களாக!
22நீங்கள் போய் அவன் நடமாடுகிற இடம் எதுவென்றும், யார் அவனை அங்கு பார்த்தவன் என்றும் இன்னும் நன்றாக ஆய்ந்து அறியுங்கள்; ஏனெனில், அவன் மிகவும் சூழ்ச்சிமிக்கவன் என்று எனக்குத் தெரிய வந்தது.
23ஆதலால் அவன் ஒளிந்துக் கொண்டிருக்கும் எல்லா மறைவிடங்களையும் குறித்துக் கொண்டு, உறுதியான தகவல்களுடன் என்னிடம் திரும்பி வாருங்கள். அப்பொழுது நான் உங்களோடு செல்வேன். அவன் நாட்டில் இருந்தால் பல்லாயிர யூதா மக்கள் வாழும் பகுதியிலும் அவனைத் தேடிக் கண்டுபிடித்துவிடுவேன்” என்றார்.
24அவர்கள் சவுலுக்கு முன்னரே சீபுக்குப் புறப்பட்டுச் சென்றனர். பின்பு, தாவீதும் அவர்தம் ஆள்களும் எசிமோனுக்குத் தெற்கே, அராபாவிலுள்ள மாவோன் பாலைநிலத்தில் இருந்தனர்.
25சவுலும் அவர் ஆள்களும் அவரைத் தேடிச் சென்றனர். தாவீது இதை அறிந்து மாவோன் பாலைநிலத்தில் உள்ள பாறைக்குச் சென்றார். சவுல் இதை கேள்வியுற்று, அவரும் மாவோன் பாலைநிலத்தில் தாவீதைத் தேடினார்.
26சவுல் மலையின் ஒரு பக்கத்தில் செல்ல, தாவீதும் அவர் ஆள்களும் அதே மலையின் மறுப்பக்கத்தில் நடந்தனர். சவுலிடமிருந்து தப்பித்துக்கொள்ள தாவீது விரைந்து சென்ற போது, சவுலும் அவர்தம் ஆள்களும் தாவீதையும் அவர்தம் ஆள்களையும் பிடிப்பதற்கு வளைத்துக் கொண்டனர்.
27அவ்வேளையில் ஒரு தூதன் சவுலிடம் வந்து, “விரைந்து வாரும்! பெலிஸ்தியர் நாட்டின் மேல் படையெடுத்து வந்திருக்கிறார்கள்” என்றான்.
28அதனால், சவுல் தாவீதைக் தொடர்வதைக் கைவிட்டு, பெலிஸ்தியரை எதிர்க்கச் திரும்பிச் சென்றார். ஆதலின், அவ்விடம் “பிரிக்கும் பாறை” என்று அழைக்கப்பட்டது.
29தாவீது அங்கிருந்து புறப்பட்டு ஏன்கேதிலுள்ள பாதுகாப்பான இடத்தில் தங்கினார்.

23:18 1 சாமு 18:3.
23:19 திபா 54 தலைப்பு.