புதிய இஸ்ரயேல்

1இதன்பின் உலகின் நான்கு மூலைகளிலும் நான்கு வானதூதர்கள் நிற்கக் கண்டேன். உலகின் மீதும் கடல்மீதும் மரத்தின்மீதும் காற்று வீசாதவாறு காற்று வகைகள் நான்கினையும் அவர்கள் கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள்.
2கதிரவன் எழும் திசையிலிருந்து மற்றொரு வானதூதர் எழுந்து வரக் கண்டேன். வாழும் கடவுளின் முத்திரை அவரிடம் இருந்தது. நிலத்தையும் கடலையும் அழிக்க அதிகாரம் பெற்றிருந்த அந்த நான்கு வானதூதர்களையும் அவர் உரத்த குரலில் அழைத்து,
3“எங்கள் கடவுளுடைய பணியாளர்களின் நெற்றியில் நாங்கள் முத்திரையிடும்வரை நிலத்தையோ கடலையோ மரத்தையோ அழிக்க வேண்டாம்” என்று அவர்களிடம் கூறினார்.
4முத்திரையிடப்பட்டவர்களின் எண்ணிக்கைபற்றிச் சொல்லக் கேட்டேன். இஸ்ரயேல் மக்களின் குலங்கள் அனைத்திலும் முத்திரையிடப்பட்டவர்கள் ஓர் இலட்சத்து நாற்பத்து நான்கு ஆயிரம்.

5யூதா குலத்தில் முத்திரையிடப்

பட்டவர்கள் பன்னிரண்டு ஆயிரம்,

ரூபன் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்,

காத்து குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்,

6ஆசேர் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்,

நப்தலி குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்,

மனாசே குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்,

7சிமியோன் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்,

லேவி குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்,

இசக்கார் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்,

8செபுலோன் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்,

யோசேப்பு குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்,

பென்யமின் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்.

9இதன்பின் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்; வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்களாய்க் கையில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தார்கள்.
10அவர்கள்,

“அரியணையில் வீற்றிருக்கும்

எங்கள் கடவுளிடமிருந்தும்

ஆட்டுக் குட்டியிடமிருந்துமே

மீட்பு வருகிறது”

என்று உரத்த குரலில் பாடினார்கள்.
11அப்பொழுது வானதூதர்கள் அனைவரும் அரியணையையும் மூப்பர்களையும் நான்கு உயிர்களையும் சூழ்ந்து நின்றுகொண்டிருந்தார்கள்; பின் அரியணைமுன் முகம் குப்புற விழுந்து கடவுளை வணங்கினார்கள்.

12“ஆமென், புகழ்ச்சியும் பெருமையும்

ஞானமும் நன்றியும் மாண்பும்

வல்லமையும் வலிமையும்

எங்கள் கடவுளுக்கே

என்றென்றும் உரியன; ஆமென்”

என்று பாடினார்கள்.
13மூப்பர்களுள் ஒருவர், “வெண்மையான தொங்கலாடை அணிந்துள்ள இவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள் தெரியுமா?” என்று என்னை வினவினார்.
14நான் அவரிடம், “என் தலைவரே, அது உமக்குத்தான் தெரியும்” என்றேன். அதற்கு அவர் என்னிடம் கூறியது: “இவர்கள் கொடிய வேதனையிலிருந்து மீண்டவர்கள்; தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள்.

15இதனால்தான் கடவுளது

அரியணைமுன் நின்றுகொண்டு

அவரது கோவிலில் அல்லும் பகலும்

அவரை வழிபட்டுவருகிறார்கள்;

அரியணையில் வீற்றிருப்பவர்

அவர்களிடையே குடிகொண்டு

அவர்களைப் பாதுகாப்பார்.

16இனி அவர்களுக்குப்

பசியோ தாகமோ இரா;

கதிரவனோ எவ்வகை வெப்பமோ

அவர்களைத் தாக்கா.

17ஏனெனில் அரியணை நடுவில்

இருக்கும் ஆட்டுக்குட்டி

அவர்களை மேய்க்கும்;

வாழ்வு அளிக்கும் நீரூற்றுகளுக்கு

வழிநடத்திச் செல்லும்.

கடவுள் அவர்களின் கண்ணீர்

அனைத்தையும் துடைத்துவிடுவார்.”


7:1 எரே 49:36; தானி 7:2; செக் 6:5. 7:3 எசே 9:4,6. 7:14 தானி 12:1; மத் 24:21; மாற் 13:19. 7:16 எசா 49:10. 7:17 திபா 23:1-2; எசா 25:8; 49:10; எசே 34:23.