6. காட்சிகள்
ஆட்டுக்குட்டியின் தோழர்
1மேலும், சீயோன் மலைமீது ஆட்டுக்குட்டி நிற்கக் கண்டேன். அதன் பெயரையும் அதனுடைய தந்தையின் பெயரையும் தங்களது நெற்றியில் பொறித்திருந்த ஓர் இலட்சத்து நாற்பத்து நான்காயிரம்பேர் அதனுடன் இருந்தனர்.
2பின்பு விண்ணகத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டேன். அது பெரும் வெள்ளத்தின் இரைச்சல்போலும் பேரிடி முழக்கம்போலும் யாழை மீட்டுவோர் எழுப்பும் இசைபோலும் ஒலித்தது.
3அந்த ஓர் இலட்சத்து நாற்பத்து நான்காயிரம் பேரும் அரியணை முன்னிலையில் நான்கு உயிர்களுக்கும் மூப்பர்களுக்கும் முன்பாகப் புதியதொரு பாடலைப் பாடிக்கொண்டிருந்தார்கள். மண்ணுலகிலிருந்து விலை கொடுத்து மீட்கப்பட்ட அவர்களைத் தவிர வேறு யாராலும் அந்தப் பாடலைக் கற்றுக்கொள்ள இயலவில்லை.
4அவர்கள் பெண்களோடு சேர்ந்து தங்களைக் கறைப்படுத்திக்கொள்ளாமல் கற்பைக் காத்துக்கொண்டவர்கள்; ஆட்டுக்குட்டி சென்ற இடம் எங்கும் அதைப் பின்தொடர்ந்தவர்கள்; கடவுளுக்கும் ஆட்டுக்குட்டிக்கும் உரிய முதற்கனியாக மனித குலத்திலிருந்து விலை கொடுத்து மீட்கப்பட்டவர்கள்.
5அவர்களது வாயினின்று பொய்யே வந்ததில்லை; ஏனெனில், அவர்கள் மாசற்றவர்கள்.
மூன்று வானதூதர் விடுத்த செய்தி
6பின்பு,வேறொரு வானதூதர் நடுவானில் பறந்துகொண்டிருக்கக் கண்டேன். அவர் மண்ணுலகில் வாழ்வோருக்கு, அதாவது நாடு, குலம், மொழி, மக்களினம் ஆகிய அனைத்துக்கும் அறிவிக்கும் பொருட்டு எக்காலத்துக்கும் உரிய நற்செய்தியை வைத்திருந்தார்.
7“கடவுளுக்கு அஞ்சுங்கள்; அவரைப் போற்றிப் புகழுங்கள். ஏனெனில், அவர் தீர்ப்பளிக்கும் நேரம் வந்துவிட்டது. மண், கடல், நீரூற்றுகள் ஆகியவற்றைப் படைத்தவரை வணங்குங்கள்” என்று அவர் உரத்த குரலில் கூறினார்.
8மற்றொரு வானதூதர் அவரைத் தொடர்ந்து வந்தார். இந்த இரண்டாம் தூதர், “வீழ்ந்தது! பரத்தைமை என்னும் தன் மதுவை எல்லா நாட்டினரும் குடித்து வெறிகொள்ளச் செய்த பாபிலோன் மாநகர் வீழ்ந்தது!” என்றார்.
9வேறொரு வானதூதர் அவர்களைத் தொடர்ந்து வந்தார். அந்த மூன்றாம் வானதூதர் உரத்த குரலில் கூறியது: “விலங்கையும் அதன் சிலையையும் வணங்கி, தங்கள் நெற்றியிலோ கையிலோ குறி இட்டுக்கொண்டோர் அனைவரும்
10கடவுளின் சீற்றம் என்னும் மதுவை — அவர்தம் சினம் என்னும் கிண்ணத்தில் கலப்பின்றி ஊற்றப்பட்ட அந்த மதுவை — குடித்தே தீர வேண்டும். அவர்கள் தூய வானதூதர் முன்னிலையிலும் ஆட்டுக்குட்டியின் முன்னிலையிலும் நெருப்பாலும் கந்தகத்தாலும் வதைக்கப்படுவார்கள்.
11அவர்களை வதைத்த நெருப்பிலிருந்து எழுந்த புகை என்றென்றும் மேலே எழுந்த வண்ணம் உள்ளது. அந்த விலங்கையும் அதன் சிலையையும் வணங்குவோருக்கும் அதனுடைய பெயரைக் குறியாக இட்டுக்கொண்டோருக்கும் அல்லும் பகலும் ஓய்வே இராது.
12ஆகவே, கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து, இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டிருக்கும் இறைமக்களுக்கு மனவுறுதி தேவை.”
13பின்பு, விண்ணகத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டேன்: “‘இது முதல் ஆண்டவரோடு இணைந்த நிலையில் இறப்போர் பேறுபெற்றோர்’ என எழுது” என்று அது ஒலித்தது. அதற்குத் தூய ஆவியார், “ஆம், அவர்கள் தங்கள் உழைப்பிலிருந்து ஓய்வு பெறுவார்கள்; ஏனெனில், அவர்களின் செயல்கள் அவர்களைப் பின்தொடரும்” என்று கூறினார்.
நாடுகள் ஒன்றுதிரட்டப்படல்
14பின்பு, ஒரு வெண் மேகத்தைக் கண்டேன். அதன்மீது மானிட மகனைப்போன்ற ஒருவர் வீற்றிருந்தார். அவரது தலையில் பொன் முடியும் கையில் கூர்மையான அரிவாளும் காணப்பட்டன.
15மற்றொரு வானதூதர் கோவிலிருந்து வெளியே வந்து, மேகத்தின்மீது வீற்றிருந்தவரை நோக்கி, “உமது அரிவாளை எடுத்து அறுவடை செய்யும்; ஏனெனில் ,அறுவடைக் காலம் வந்துவிட்டது; மண்ணுலகம் என்னும் பயிர் முற்றிவிட்டது” என்று உரத்த குரலில் கத்தினார்.
16உடனே மேகத்தின்மீது வீற்றிருந்தவர் மண்ணுலகெங்கும் தமது அரிவாளை வீசி அறுவடை செய்தார்.
17மற்றொரு வானதூதரும் விண்ணகத்தில் உள்ள கோவிலிருந்து வெளியே வந்தார். அவரிடமும் கூர்மையான அரிவாள் ஒன்று இருந்தது.
18நெருப்பின்மேல் அதிகாரம் கொண்டிருந்த இன்னுமொரு வானதூதர் பலிபீடத்திலிருந்து வெளியே வந்தார். அவர் கூர்மையான அரிவாளை வைத்திருந்தவரிடம், “உமது கூர்மையான அரிவாளை எடுத்து மண்ணுலகின் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்த்திடும்; ஏனெனில், திராட்சை கனிந்துவிட்டது” என்று உரத்த குரலில் கூறினார்.
19ஆகவே, அந்த வானதூதர் மண்ணுலகின்மீது தம் அரிவாளை வீசி மண்ணுலகின் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்த்தார்; கடவுளின் சீற்றம் என்னும் பெரிய பிழிவுக்குழியில் அவற்றைப் போட்டார்.
20நகருக்கு வெளியே இருந்த அந்தப் பிழிவுக்குழியில் அவை மிதிக்கப்பட்டன. அந்தப் பிழிவுக்குழியிலிருந்து இரத்த வெள்ளம் ஏறத்தாழ இரண்டு மீட்டர் ஆழம்,* முந்நூறு கிலோ மீட்டர்** தொலைக்குப் பாய்ந்தோடியது.
14:1 எசே 9:4; திவெ 7:3. 14:5 செப் 3:13. 14:8 எசா 21:9; எரே 51:8; திவெ 18:2. 14:10 எசா 51:17; தொநூ 18:24; எசா 38:22. 14:11 எசா 34:10. 14:14 தானி 7:13. 14:15 யோவே 3:13. 14:20 எசா 63:3; புல 1:15; திவெ 9:15.