5. அரக்கப்பாம்பும் இரு விலங்குகளும்

பெண்ணும் அரக்கப் பாம்பும்

1வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது; பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார்.
2அவர் கருவுற்றிருந்தார்; பேறுகால வேதனைப்பட்டுக் கடும் துயருடன் கதறினார்.
3வானில் வேறோர் அடையாளமும் தோன்றியது; இதோ நெருப்புமயமான பெரிய அரக்கப் பாம்பு ஒன்று காணப்பட்டது. அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன. அதன் தலைகளில் ஏழு மணி முடிகள் இருந்தன.
4அது தன் வாலால் விண்மீன்களின் மூன்றில் ஒரு பகுதியை நிலத்தின்மீது இழுத்துப் போட்டது. பேறுகால வேதனையிலிருந்த அப்பெண் பிள்ளை பெற்றவுடன் அதை விழுங்கிவிடுமாறு அரக்கப் பாம்பு அவர்முன் நின்று கொண்டிருந்தது.
5எல்லா நாடுகளையும் இருப்புக்கோல் கொண்டு நடத்தவிருந்த ஓர் ஆண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார். அக்குழந்தையோ கடவுளிடம் அவரது அரியணை இருந்த இடத்துக்குப் பறித்துச் செல்லப்பெற்றது.
6அப்பெண் பாலைநிலத்துக்கு ஓடிப்போனார்; அங்கு ஆயிரத்து இருநூற்று அறுபது நாள் அவரைப் பேணுமாறு கடவுள் அவருக்கென ஓர் இடத்தை ஏற்பாடு செய்திருந்தார்.
7பின்னர், விண்ணகத்தில் போர் மூண்டது. மிக்கேலும் அவருடைய தூதர்களும் அரக்கப் பாம்போடு போர் தொடுத்தார்கள்; அரக்கப் பாம்பும் அதன் தூதர்களும் அவர்களை எதிர்த்துப் போரிட்டார்கள்.
8அரக்கப் பாம்பு தோல்வியுற்றது. விண்ணகத்தில் அதற்கும் அதன் தூதர்களுக்கும் இடமே இல்லாது போயிற்று.
9அப்பெரிய அரக்கப் பாம்பு வெளியே தள்ளப்பட்டது. அலகை என்றும் சாத்தான் என்றும் அழைக்கப் பெற்ற அதுவே தொடக்கத்தில் தோன்றிய பாம்பு. உலகு முழுவதையும் ஏமாற்றிய அது மண்ணுலகுக்குத் தள்ளப்பட்டது; அதன் தூதர்களும் அதனுடன் வெளியே தள்ளப்பட்டார்கள்.
10பின்பு விண்ணகத்தில் ஒலித்த பெரியதொரு குரலைக் கேட்டேன். அது சொன்னது:

“இதோ, மீட்பு, வல்லமை,

நம் கடவுளின் ஆட்சி,

அவருடைய மெசியாவின் அதிகாரம்

ஆகிய அனைத்தும் வந்துவிட்டன.

நம் சகோதரர் சகோதரிகள் மீது

குற்றம் சுமத்தியவன்,

நம் கடவுள் திருமுன் அல்லும் பகலும்

அவர்கள்மீது குற்றம் சாட்டியவன்

வெளியே தள்ளப்பட்டான்.

11ஆட்டுக்குட்டி சிந்திய இரத்தத்தாலும்

தாங்கள் பகர்ந்த சான்றாலும்

அவர்கள் அவனை வென்றார்கள்.

அவர்கள் தங்கள் உயிர்மீது

ஆசை வைக்கவில்லை;

இறக்கவும் தயங்கவில்லை.

12இதன்பொருட்டு விண்ணுலகே,

அதில் குடியிருப்போரே,

மகிழ்ந்து கொண்டாடுங்கள்.

மண்ணுலகே, கடலே,

ஐயோ! உங்களுக்குக் கேடு!

தனக்குச் சிறிது காலமே

எஞ்சியிருக்கிறது என்பதை

அலகை அறிந்துள்ளது;

அதனால் கடுஞ் சீற்றத்துடன்

உங்களிடம் வந்துள்ளது.”

13தான் மண்ணுலகுக்குத் தள்ளப்பட்டதைக் கண்ட அரக்கப் பாம்பு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த அப்பெண்ணைத் துரத்திச் சென்றது.
14ஆனால், அப்பாம்பிடமிருந்து தப்பித்துப் பாலைநிலத்தில் அவருக்கெனக் குறிக்கபட்டிருந்த இடத்துக்குப் பறந்து செல்லுமாறு, பெரும் கழுகின் இரு சிறகுகள் அவருக்கு அளிக்கப்பட்டன. அங்கு அவர் மூன்றரை ஆண்டுக் காலம் பேணப்படுவார்.
15அப்பெண்ணை வெள்ளம் அடித்துச் செல்லும்பொருட்டு, அவர் பின்னால் அப்பாம்பு தன் வாயிலிருந்து ஆறுபோலத் தண்ணீர் பாய்ந்தோடச் செய்தது.
16ஆனால், நிலம் அப்பெண்ணுக்குத் துணை நின்றது. அது தன் வாயைத் திறந்து, அரக்கப்பாம்பின் வாயிலிருந்து பாய்ந்த வெள்ளத்தைக் குடித்துவிட்டது.
17இதனால் அரக்கப்பாம்பு அப்பெண்மீது சினங் கொண்டு, அவருடைய எஞ்சிய பிள்ளைகளோடு போர் தொடுக்கப் புறப்பட்டுச் சென்றது. அவர்கள் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து இயேசுவுக்குச் சான்று பகர்ந்தவர்கள்.*
18அரக்கப்பாம்பு கடற்கரையில் நின்றுகொண்டிருந்தது.*

12:3 தானி 7:7. 12:4 தானி 8:10. 12:5 எசா 66:7; திபா 2:9. 12:7 தானி 10:13; 12:1; யூதா 9. 12:9 தொநூ 3:1; லூக் 10:18. 12:10 யோபு 1:9-11; செக் 3:1. 12:14 தானி 7:25; 12:7.
12:17 ‘இயேசு அளித்த சாட்சியத்தை ஏற்றுக்கொண்டவர்கள்’ என்றும் மொழிபெயர்க்கலாம். 12:18 ‘நான் கடற்கரையில் நின்றுகொண்டிருந்தேன்’ என்னும் பாடம் சில முக்கிய கையெழுத்துப் படிகளில் காணப்படுகிறது. இவ்வாறு இவ்வசனம் 13:1 உடன் தொடர்புப் படுத்தப்படுகிறது.