திருவெளிப்பாடு முன்னுரை


புதிய ஏற்பாட்டின் இறுதி நூலாகிய திருவெளிப்பாடு வேறுபட்ட ஓர் இலக்கிய வகையைச் சார்ந்தது. இதில் அடையாளங்கள் மிகுதியாய் உள்ளன. இத்தகு இலக்கிய வகை கி.மு. 2ஆம் நூற்றாண்டையொட்டித் தோன்றி வளர்ந்ததாகத் தெரிகிறது. யூதர்கள் பிறஇனத்தாரால் துன்புறுத்தப்பட்ட காலத்தில் நம்பிக்கையும் ஊக்கமும் ஆறுதலும் ஊட்டுவதற்காகவும் அக்கால நிகழ்ச்சிகளை ஒரு குறிப்பிட்ட பார்வையில் புரிந்துகொள்ள உதவுவதற்காகவும் திருவெளிப்பாட்டு வகை நூல்கள் உருவாயின. தானியேல் நூல் இத்தன்மை கொண்டது.

ஆசிரியர்

இந்நூலின் ஆசிரியர் தம்மை யோவான் எனக் குறிப்பிடுகிறார் (1:1,4,9; 22:8). தாம் ஒரு திருத்தூதர் என்றோ இயேசுவின் சீடர் என்றோ அவர் தம்மைப் பற்றிக் கூறிக் கொள்ளவில்லை. மொழிநடை, இலக்கணம், இறையியல் கருத்துகள் ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்தால் இது நான்காம் நற்செய்தியை எழுதிய ஆசிரியரால் எழுதப்பட்டிருக்க இயலாது என்பது புலனாகும். தொடக்கக் காலத்திலிருந்தே கிறிஸ்தவ எழுத்தாளர்கள் இந்நூலின் ஆசிரியர் திருத்தூதர் யோவானே என்று கூறி வந்திருப்பது உண்மை எனினும், அகச்சான்று அடிப்படையில் பார்க்கும்போது இந்நூலாசிரியர் யோவான் என்னும் பெயருடைய தொடக்க கால மூப்பர் ஒருவராய் இருந்திருக்க வேண்டும் என்று சொல்வதே முறையாகத் தெரிகிறது.

சூழலும் நோக்கமும்

இந்நூல் எழுதப்பட்ட காலத்தில் கிறிஸ்தவர்கள் கொடிய துன்பங்களுக்கு இலக்காயினர். அது நீரோவின் காலம் (கி.பி. 54-68) எனச் சிலர் கூறுகின்றனர். ஆனால் தொமீசியன் காலமாக (கி.பி. 89-96) இருக்கும் எனக் கூறுவதே ஏற்புடையதாகத் தெரிகிறது. உரோமை அதிகாரிகள் அரச வணக்கத்தைப் பரப்பிய நேரத்தில் உரோமைப் பேரரசர் சீசரை வணங்க மறுத்த கிறிஸ்தவர்கள் வெறுப்புக்கும் இகழ்ச்சிக்கும் இன்னலுக்கும் உள்ளானார்கள். இந்நிலையில்தான் இதன் ஆசிரியர் பத்மு தீவிலிருந்து இதனை எழுதியிருக்க வேண்டும்.

உள்ளடக்கம்

வாசகர்கள் துணிச்சலோடு அரச வழிபாட்டை எதிர்க்க வேண்டும். கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையிலான இறுதிப் போர் விரைவில் வர இருக்கிறது. சாத்தான் கிறிஸ்துவின் சீடர்களுக்கு எதிராகத் துன்பங்களை மிகுதிப்படுத்துவான். ஆனால், கிறிஸ்தவர்கள் சாவுவரை உறுதியோடு இருக்க வேண்டும். அவர்களுக்கு அழிவு வராது என்பது உறுதி. கிறிஸ்து இயேசு வரும்போது அவர்கள் வெற்றி பெறுவார்கள். அப்போது கொடியவர்கள் என்றென்றைக்கும் அழிக்கப்படுவார்கள். கடவுளின் மக்களோ நிலைவாழ்வு பெறுவார்கள்.

அடையாளங்கள்

மேற்சொல்லப்பட்ட கருத்தை நேரடியாகச் சொல்வது ஆபத்தாக முடியும். எனவே இந்நூலில் பற்பல அடையாளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன; காட்சிகள் மூலமாகவும் செய்திகள் சொல்லப்படுகின்றன.

7 என்னும் எண் 52 முறை இடம்பெறுகிறது. இது முழுமையைக் குறிக்கும் எண். ஒரு வேளை இது கடவுளையும் உலகையும் உள்ளடக்கும் எண்ணாக இருக்கலாம். ஏனெனில் மூன்று என்னும் எண் கடவுளைக் குறிக்கும்; நான்கு என்னும் எண் உலகைக் குறிக்கும். இவ்வாறு அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையைக் குறிக்கின்ற எண்ணாக ஏழு கருதப்பட்டிருக்கலாம். மேலும் 10, 1000 என்பவையும் முழுமையைக் குறிப்பனவாக உள்ளன.

144 என்னும் எண்ணும், 12000, 1,44,000 என்பவையும் திருச்சபையைக் குறித்து நிற்கின்றன. 7 என்னும் முழுமையில் பாதியான 3½ என்னும் எண்ணைப் பயன்படுத்தி, இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத் துன்பங்கள் நிகழும் என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது என ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

கிறிஸ்தவர்களின் துன்பத்திற்குச் சின்னமாய் இருப்பவை ஏழு முத்திரைகள் (அதி 7,8), ஏழு எக்காளங்கள் (அதி 8,9), ஏழு கிண்ணங்கள் (அதி 16).

துன்புறுத்துவோருக்குச் சின்னங்களாய் இருப்பவை விலங்கு (அதி 13), விலைமகள் (அதி 17), பாபிலோன் (அதி 18). இங்கு பாபிலோன் எதிரிகளின் அரசான உரோமையைக் குறித்து நிற்கிறது.

இயேசு குரு என்றும் (1:12-16), சிங்கம் என்றும் (5:5), ஆட்டுக்குட்டி என்றும் (5:6), குழந்தை என்றும் (12:5), மணமகன் என்றும் (22:12), விண்மீன் என்றும் (21:13, 22:16) குறிப்பிடப்படுகிறார். கதிரவனை ஆடையாக உடுத்திய பெண் (12:1-16) புதிய இஸ்ரயேலாகிய திருச்சபையைக் குறித்து நிற்கிறார்.

அமைப்பு

  1. முன்னுரை (நூன்முகம்) 1: 1 - 3
  2. ஆசியாவிலுள்ள திருச்சபைகளுக்குக் கடிதம் 1:4 - 3:22
  3. ஏழு முத்திரைகளுள்ள சுருளேடு 4:1 - 8:1
  4. ஏழு எக்காளங்கள் 8:2 - 11:19
  5. அரக்கப் பாம்பும் இரு விலங்குகளும் 12:1 - 13:18
  6. காட்சிகள் 14:1 - 15:8
  7. ஏழு கிண்ணங்கள் 16:1 - 21
  8. பாபிலோனின் அழிவும் எதிரிகளின் தோல்வியும் 17:1 - 20:15
  9. புதிய விண்ணகமும் புதிய மண்ணகமும் 21:1 - 22:15
  10. முடிவுரை 22:16 - 21