லேவியரும் அவர் மறுமனைவியும்

1இஸ்ரயேல் மக்களுக்கு அரசன் இல்லாத அந்நாள்களில் லேவியர் ஒருவர் எப்ராயிம் மலைநாட்டின் எல்லைப்புறத்தில் தங்கியிருந்தார். யூதாநாட்டுப் பெத்லகேமைச் சார்ந்த ஒரு பெண்ணை மறு மனைவியாகக் கொண்டிருந்தார்.
2அவள் அவருக்கு எதிராக வேசித்தனம் செய்துவிட்டு அவரிடமிருந்து பிரிந்து யூதாநாட்டுப் பெத்லகேமிலிருந்த தன் தந்தையின் வீட்டுக்குச் சென்றாள். அங்கு நான்கு மாதம் தங்கியிருந்தாள்.
3அவளிடம் நயந்து பேசி, அவளைத் தன்னுடன் மீண்டும் அழைத்து வர அவள் கணவன் அவளை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். அவர் தம்முடன் தம் வேலையாளையும் இரு கழுதைகளையும் கூட்டிக்கொண்டு சென்று அவள் தந்தையின் வீட்டை வந்தடைந்தார். அவரைக் கண்டதும் பெண்ணின் தந்தை மகிழ்வுடன் வரவேற்றார்.
4பெண்ணின் தந்தையான அவர் மாமனார் அவரை வற்புறுத்தவே அவர் அவருடன் மூன்று நாள்கள் தங்கினார்.
5நான்காம் நாள் அவர்கள் அதிகாலையில் எழுந்தார்கள். அவர் புறப்படுகையில் பெண்ணின் தந்தை தம் மருமகனிடம், “சிறிது உணவருந்தித் திடம் கொண்டபின் போகலாம்” என்றார்.
6அவர்கள் இருவரும் ஒன்றாக அங்கே அமர்ந்து உண்டு குடித்தனர். பெண்ணின் தந்தை அவரிடம், “உம் இதயம் மகிழுமாறு இரவும் இங்கே தங்கும்” என்றார்.
7அவர் போவதற்கு எழுந்தார். அவர் மாமனார் அவரை வற்புறுத்தவே, அவர் அங்கேயே தங்கி இரவைக் கழித்தார்.
8அவர், ஐந்தாம் நாள் புறப்படுவதற்காக அதிகாலையில் எழுந்தார். அப்போது பெண்ணின் தந்தை உம் இதயம் மகிழுமாறுபொழுது சாயும்வரை இங்கே தங்கும்” என்றார். இருவரும் உண்டனர்.
9அவரும் அவர் மறுமனைவியும் அவருடைய வேலையாளும் புறப்படத் தயாராயினர், பெண்ணின் தந்தையான அவர் மாமனார் அவரிடம், “இதோ! நாள் முடிந்து மாலையாகி விட்டது. நாள் முடிவடைந்துவிட்டது. இரவு இங்கே தங்கி, உம் இதயத்தை மகிழ்வியும்; நாளை அதிகாலையில் எழுந்து உங்கள் வீட்டுக்குப் பயணமாகலாம்” என்றான்.
10அம்மனிதர் இரவு தங்க விரும்பவில்லை. எனவே, அவர் சேணமிட்ட இரு கழுதைகளுடனும் தம் மறு மனைவியுடனும் புறப்பட்டு எருசலேம் என்ற எபூசுக்கு அருகே வந்தார்.
11அவர்கள் எபூசை நெருங்கியபொழுது அந்திமாலை ஆகிவிட்டது. வேலையாள் தம் தலைவரிடம், “நாம் எபூசுக்குச் சென்று அங்கே இரவைக் கழிப்போம்” என்றான்.
12அவன் தலைவர் அவனிடம், “நாம் இஸ்ரயேல் மக்கள் அல்லாத வேற்றினத்தார் நகர்ப்பக்கம் செல்லாமல், கிபயாவுக்குக் கடந்து செல்வோம்” என்றார்.
13அவர் தம் வேலையாளிடம், “கிபயா அல்லது இராமாவுக்குச் சென்று அவற்றுள் ஏதாவது ஓரிடத்தில் இரவைக் கழிப்போம்” என்றார்.
14அவ்வாறே, அவர்கள் சென்று பென்யமினைச் சார்ந்த கிபயாவை அடைந்தபொழுது கதிரவன் மறைந்தான்.
15அவர்கள் கிபயாவில் இரவைக் கழிக்க அங்கே சென்றனர். ஆனால், இரவைக் கழிக்கத் தன் வீட்டிற்குள் வருமாறு அவர்களை ஒருவனும் அழைக்கவில்லை. ஆகவே, நகரின் சதுக்கத்தில் அமர்ந்தனர்.
16மாலையில் ஒரு முதியவர் தம் வேலையை முடித்துவிட்டு, வயலிலிருந்து வந்தார். அவர் எப்ராயிம் மலை நாட்டைச் சார்ந்தவர். அவர் கிபயாவிற்கு வந்து தங்கியிருந்தார். ஆனால் அங்கு வாழ்ந்தவர்கள் பென்யமின் மக்கள்,
17அவர் உற்றுப்பார்த்த பொழுது, வழிப்போக்கரான அந்த மனிதரை நகரின் சதுக்கத்தில் கண்டார். அம்முதியவர் அவரிடம், “எங்கே போகின்றாய்? எங்கிருந்து வருகின்றாய்?” என்று கேட்டார்.
18அவரிடம், “நாங்கள் யூதாநாட்டுப் பெத்லகேமிலிருந்து எப்ராயிமின் மலை நாட்டு எல்லைப்புறத்திற்குச் செல்கின்றோம். நான் அப்பகுதியைச் சேர்ந்தவன். யூதாநாட்டுப் பெத்லகேமிற்குச் சென்றிருந்தேன். நான் என் வீட்டிற்குத் திரும்பிச் செல்கின்றேன். இங்கே தன் வீட்டுக்குள் வருமாறு என்னை ஒருவனும் அழைக்கவில்லை.
19எங்கள் கழுதைகளுக்கு வேண்டிய வைக்கோலும், தீவனமும் உம் ஊழியர்களாகிய எனக்கும் என் மறுமனைவிக்கும் வேலையாளுக்கும் வேண்டிய அப்பமும் திராட்சை இரசமும் எங்களிடம் உள்ளன. எங்களுக்கு வேறு எதுவும் தேவை இல்லை” என்றார்.
20அப்பொழுது முதியவர், “உனக்கு நலம் உண்டாகுக! உன் தேவைகள் அனைத்தையும் நான் கவனித்துக்கொள்கிறேன். இரவில் சதுக்கத்தில் மட்டும் தங்காதே” என்றார்.
21அவர் அவரைத் தம் வீட்டுக்கு அழைத்து வந்தார். கழுதைகளுக்குத் தீவனம் அளித்தார். அவர்கள் தங்கள் பாதங்களைக் கழுவினர்; உண்டு குடித்தனர்.
22அவர்கள் மனமகிழ்ந்திருந்தபொழுது இதோ! அந்நகரின் இழி மனிதர் அவ்வீட்டைச் சூழ்ந்துகொண்டு கதவைத் தட்டினர். அவ்வீட்டின் உரிமையாளரான முதியவரிடம், “உன் வீட்டிற்கு வந்திருக்கும் மனிதனை வெளியே கொண்டு வா. நாங்கள் அவனுடன் உறவு கொள்ள வேண்டும்” என்றனர்.
23வீட்டின் உரிமையாளர் வெளியே வந்து அவர்களிடம், “வேண்டாம், என் சகோதரர்களே, என் வீட்டிற்கு வந்திருக்கும் இம்மனிதனுக்குத் தீங்கு எதுவும் செய்ய வேண்டாம். இக்கொடிய செயலைச் செய்யாதீர்கள்.
24இதோ! கன்னிப்பெண்ணான என் மகளையும், அவர் மறுமனைவியையும் வெளியே அழைத்து வருகிறேன். அவர்களோடு உறவு கொண்டு உங்கள் விருப்பப்படியே நடந்துகொள்ளுங்கள். ஆனால், இம்மனிதனுக்கு இக்கொடிய செயலைச் செய்யாதீர்கள்” என்றார்.
25அவர்களோ அவர் சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லை. அப்பொழுது அந்த லேவியர் தம் மறுமனைவியை அவர்களுக்காக வெளியே தள்ளிவிட்டார். அவர்கள் அவளோடு உறவு கொண்டு இரவு முழுவதும் வைகறைவரை அவளை இழிவுபடுத்தினர். அவர்கள் வைகறையானதும் அவளைப் போகவிட்டனர்.
26வைகறையில் அப்பெண் வந்து தன் கணவன் இருந்த வீட்டின் கதவருகில் காலைவரை விழுந்துகிடந்தாள்.
27காலையில் அவள் கணவர் எழுந்து, பயணத்தைத் தொடர, வீட்டின் கதவுகளைத் திறந்து கொண்டு வெளியே வந்தார். அவர் மறுமனைவியான அப்பெண் வீட்டின் கதவருகில் விழுந்துகிடந்தாள். அவள் கைகள் கதவு நிலையின்மீது இருந்தன.
28அவர் அவளிடம் எழுந்திரு புறப்படுவோம் என்றார். பதில் இல்லை. எனவே, அவர் அவளைக் கழுதை மீது தூக்கி வைத்து தன் வீட்டை நோக்கி சென்றார்.
29அவர் தம் வீட்டிற்கு வந்ததும் ஒரு கத்தியால் தம் மறுமனைவியின் உடலைப் பன்னிரு துண்டுகளாக வெட்டி, அவற்றை இஸ்ரயேலின் எல்லா நிலப்பகுதிகளுக்கும் அனுப்பி வைத்தார்.
30அதைக் கண்ட அனைவரும், “இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து, புறப்பட்டதிலிருந்து இந்நாள் வரை இது போன்றது நடந்ததில்லை; இது போன்றதைக் கண்டதுமில்லை; இதைப் பற்றி நீங்கள் சிந்தியுங்கள்; கலந்து பேசுங்கள்; உங்கள் முடிவைத் தெரிவியுங்கள்” என்று சொல்லிக் கொண்டனர்.

19:22-24 தொநூ 19:5-8. 19:29 1 சாமு 11:7.