1 பேதுரு முன்னுரை


இத்திருமுகம் சின்ன ஆசியாவிலுள்ள கிறிஸ்தவ சபைகளுக்கு எழுதப்பட்டது என முதல் வசனத்திலிருந்து அறிகிறோம். அங்கு யூதக் கிறிஸ்தவர்களும் பிற இனத்துக் கிறிஸ்தவர்களும் இருந்திருக்க வேண்டும். வாசகர்களுள் பெரும்பாலோர் ஏழைகளாக இருந்திருக்க வேண்டும். அவர்களிடையே அடிமைகளும் இருந்திருக்க வேண்டும்.

ஆசிரியர்

திருச்சபைத் தந்தையர் காலத்திலிருந்தே இத்திருமுகம் திருத்தூதரான பேதுருவால் எழுதப்பட்டது என ஏற்கப்பட்டு வந்தது. ஆசிரியரும் தம்மைப்பற்றி “இயேசு கிறிஸ்துவின் திருத்தூதனான பேதுரு (1:2)” என எழுதுகிறார். எனினும் இதனைப் பேதுருவே நேரடியாக எழுதியிருப்பாரா என்னும் கேள்வி எழுகிறது. இத்திருமுகம் உயர்ந்த கிரேக்க நடையில் அமைந்துள்ளது; பவுலின் கருத்துகள் பல இதில் பிரதிபலிக்கின்றன. மேலும் திருமுகம் குறிப்பிடுவது போன்ற பெரிய துன்புறுத்தல் பேதுரு வாழ்ந்தபோது இல்லை. இத்திருமுகம் அனுப்பப்பெற்ற இடங்களில் (1:1) சிலவற்றிலாவது பேதுரு இறக்குமுன்னே (கி.பி. 64) திருச்சபை தோன்றியிருந்ததா என்பதே ஒரு கேள்விக்குறியாக உள்ளது. எனவே மாறிவிட்ட ஒரு காலக்கட்டத்தில் பேதுரு என்ன சொல்லியிருப்பார் என்பதை, அவருடைய சீடர் ஒருவர் அவர் பெயரில் திருமுகமாக எழுதியிருக்கலாம் என அறிஞர் பலர் கருதுகின்றனர். இவ்வாறு இத்திருமுகம் கி.பி. 70-90 ஆண்டுகளில் எழுதப்பட்டிருக்கலாம்.

சூழலும் நோக்கமும்

இத்திருமுகம் எழுத ஏதாவது குறிப்பிட்ட சூழ்நிலை இருந்ததா எனத் தெரியவில்லை. எனினும் துன்புறுத்தப்பட்ட காலத்திலும் சோதனைக் காலத்திலும் கிறிஸ்தவர்களை ஊக்கப்படுத்தவும், தளர்ந்துபோன நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் இத்திருமுகத்தை எழுதியுள்ளார் எனலாம் (4:12-13).

உள்ளடக்கம்

இத்திருமுகத்தில் கிறிஸ்தவ வாழ்வின் கடமைகள், உண்மையான வாழ்வு, சகோதர அன்பு ஆகியவை வலியுறுத்தப்படுகின்றன (1:1-2:10). கிறிஸ்தவர்கள் பிற இனத்தாருக்கும் அரசு அதிகாரிகளுக்கும், அடிமைகள் தலைவர்களுக்கும், கணவர்கள் மனைவியருக்கும், மனைவியர் கணவர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளை ஆசிரியர் நினைவூட்டுகிறார் (2:11-4:6); கிறிஸ்துவின் இறுதி வருகைபற்றிப் பேசி, விழிப்புணர்வு தேவை என வலியுறுத்துகிறார் (4:7-5:11).

அமைப்பு

  1. முன்னுரை (வாழ்த்து) 1:1 - 2
  2. கிறிஸ்தவ அழைப்பும் பொறுப்பும் 1:3 - 2:10
  3. குடும்பத்திலும் சமூகத்திலும் கிறிஸ்தவ நடத்தை 2:11 - 4:11
  4. துன்புறுத்தப்படுவோருக்கு அறிவுரை 4:12 - 5:11
  5. முடிவுரை (இறுதி வாழ்த்து) 5:12 - 4