மனைவியும் கணவரும்

1-2திருமணமான பெண்களே, உங்கள் கணவருக்குப் பணிந்திருங்கள். இதனால், அவர்களுள் சிலர் கடவுளுடைய வார்த்தையை ஏற்காதிருந்தாலும் மரியாதையுடைய உங்கள் தூய நடத்தையைக் கண்டு, கவரப்பட்டு நல்வழிப்படுத்தப்படுவர். அப்போது வார்த்தையே தேவைப்படாது.
3முடியை அழகுபடுத்துதல், பொன் நகைகளை அணிதல், ஆடைகளை அணிதல் போன்ற வெளிப்படையான அலங்காரமல்ல,
4மாறாக, மனித உள்ளத்தில் மறைந்திருக்கும் பண்புகளாகிய பணிவும் அமைதியுமே உங்களுக்கு அழியாத அலங்காரமாய் இருக்கட்டும். கடவுள் பார்வையில் அதுவே விலையுயர்ந்தது.
5முற்காலத்தில் கடவுள்மேல் நம்பிக்கை கொண்டிருந்த தூய பெண்களும் இவ்வாறுதான் தங்களை அணி செய்து கொண்டார்கள்; தங்கள் கணவருக்குப் பணிந்திருந்தார்கள்.
6அவ்வாறே, சாரா ஆபிரகாமைத் “தலைவர்” என்றழைத்து அவருக்குக் கீழ்ப்படிந்திருந்தார். நீங்களும் நன்மை செய்து, எவ்வகை அச்சுறுத்தலுக்கும் அஞ்சாதிருப்பீர்களென்றால் சாராவின் புதல்வியராய் இருப்பீர்கள்.
7அவ்வாறே, திருமணமான ஆண்களே, உங்கள் மனைவியர் வலுக்குறைந்தவர்கள் என்பதை நீங்கள் உணர்ந்து, அவர்களோடு இணைந்து வாழுங்கள். வாழ்வுதரும் அருளுக்கு உடன் உரிமையாளராக இருப்பதால் அவர்களுக்கு மதிப்புக் கொடுங்கள். அப்போதுதான் நீங்கள் தடையின்றி இறைவேண்டல் செய்ய முடியும்.

நீதியின் பொருட்டுத் துன்புறுதல்

8இறுதியாக, நீங்கள் எல்லாரும் ஒருமனப்பட்டிருங்கள். பிறரிடம் இரக்கமும் சகோதரர் அன்பும் பரிவுள்ளமும் மனத்தாழ்மையும் கொண்டிருங்கள்.
9தீமைக்குப் பதில் தீமை செய்யாதீர்கள்; பழிச்சொல்லுக்குப் பழிச் சொல் கூறாதீர்கள்; மாறாக, ஆசி கூறுங்கள். ஏனென்றால், கடவுள் வாக்களித்த ஆசியை உரிமையாக்கிக் கொள்வதற்கே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.

10“வாழ்க்கையில் இன்பம் காணவும்

நல்ல நாள்களைக் காணவும்

விரும்புவோர், தீச்சொல்லினின்று

தம் நாவைக் காத்துக் கொள்க!

வஞ்சக மொழியைத்

தம் வாயை விட்டு விலக்கிடுக!

11தீமையை விட்டு விலகி

நன்மை செய்க!

நல்வாழ்வை நாடி, அதை

அடைவதிலே கருத்துக் கொள்க!

12ஏனெனில், ஆண்டவரின் கண்கள்

நேர்மையானவர்களை

நோக்குகின்றன. அவர் செவிகள்

அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன.

ஆண்டவரின் முகமோ

தீமைச் செய்வோருக்கு

எதிராக இருக்கின்றது.

13நன்மை செய்வதில் நீங்கள் ஆர்வமுடையவர்களாய் இருந்தால், உங்களுக்குத் தீமை செய்யப்போகிறவர் யார்?
14நீதியின்பொருட்டுத் துன்புற வேண்டியிருப்பினும் நீங்கள் பேறு பெற்றவர்களே. யாருக்கும் நீங்கள் அஞ்சி நடுங்கவோ மனங்கலங்கவோ வேண்டாம்.
15உங்கள் உள்ளத்தில் கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு அவரைத் தூயவரெனப் போற்றுங்கள். நீங்கள் எதிர்நோக்கி இருப்பதைக் குறித்து யாராவது விளக்கம் கேட்டால் விடையளிக்க நீங்கள் எப்பொழுதும் ஆயத்தமாய் இருங்கள்.
16ஆனால், பணிவோடும் மரியாதையோடும் விடை அளியுங்கள். உங்கள் மனச்சான்றும் குற்றமற்றதாயிருக்கட்டும். அப்பொழுது உங்கள் கிறிஸ்தவ நன்னடத்தையைப் பழிக்கிறவர்கள் உங்களை இழிவாகப் பேசியதைக் குறித்து வெட்கப்படுவார்கள்.
17ஏனெனில், தீமை செய்து துன்புறுவதை விட, கடவுளுக்குத் திருவுளமானால், நன்மை செய்து துன்புறுவதே மேல்.
18கிறிஸ்துவும் உங்கள் பாவங்களின் பொருட்டு ஒரே முறையாக இறந்தார். அவர் உங்களைக் கடவுளிடம் கொண்டு சேர்க்கவே இறந்தார்.* நீதியுள்ளவராகிய அவர் நீதியற்றவர்களுக்காக இறந்தார். மனித இயல்போடிருந்த அவர் இறந்தாரெனினும் ஆவிக்குரிய இயல்புடையவராய் உயிர் பெற்றெழுந்தார்.
19அந்நிலையில் அவர் காவலில் இருந்த ஆவிகளிடம் போய்த் தம் செய்தியை அறிவித்தார்.
20நோவா பேழையைச் செய்து கொண்டிருந்த நாள்களில், பொறுமையோடு காத்துக் கொண்டிருந்த கடவுளை அந்த ஆவிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. சிலர், அதாவது, எட்டுப்பேர் மட்டும் அந்தப் பேழையில், தண்ணீர் வழியாகக் காப்பாற்றப்பட்டனர்.
21அந்தத் தண்ணீரானது திருமுழுக்கிற்கு முன்னடையாளம். இத்திருமுழுக்கு உடலின் அழுக்கைப் போக்கும் செயல் அல்ல; அது குற்றமற்ற மனச்சான்றுடன் கடவுளுக்குத் தரும் வாக்குறுதியாகும்; இது இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் வழியாக இப்போது உங்களுக்கு மீட்பளிக்கிறது.
22அவர் வான தூதர்களையும் அதிகாரங்களையும் வல்லமைகளையும் தமக்குப் பணிய வைத்து, விண்ணுலகம் சென்று, கடவுளின் வலப்பக்கத்தில் இருக்கிறார்.

3:1 எபே 5:22; கொலோ 3:18. 3:3 1 திமொ 2:9. 3:6 தொநூ 18:12. 3:7 எபே 5:25; கொலோ 3:19. 3:10-12 திபா 34:12-16. 3:14 மத் 5:10. 3:14-15 எசா 8:12,13. 3:20 தொநூ 6:1-7,24.
3:18 ‘இறந்தார்’ என்னும் சொல் பல முக்கிய கையெழுத்துப் படிகளில் ‘துன்புற்றார்’ என்று உள்ளது.