இத்திருமுகம் உலகெங்கும் சிதறுண்டு வாழும் இஸ்ரயேலின் பன்னிரு குலத்தினருக்கும் எழுதப்பட்டுள்ளது. அவர்கள் யூதக் கிறிஸ்தவர்கள். ஆயினும் திருமுகம் தரும் போதனை யூதக் கிறிஸ்தவர்களுக்கும் பிற இனத்துக் கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தவே அமைந்துள்ளது.

இத்திருமுகம் கிறிஸ்தவ நடைமுறை வாழ்வுக்கான அறிவுரை எனினும், பழைய ஏற்பாட்டின் ஞானநூல்களின் தன்மையைக் கொண்டுள்ளது. இது எழுதப்பட்ட காலத்தைக் கணிப்பது கடினம். வெவ்வேறு விவிலிய அறிஞர்கள் கி.பி. 50லிருந்து 100 வரையுள்ள வெவ்வேறு காலக் கணிப்புகளைக் கொடுக்கிறார்கள்.

ஆசிரியர்

யாக்கோபு திருமுகத்தின் ஆசிரியர் தம்மைப் பற்றிக் “கடவுளுக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் பணியாளனாகிய யாக்கோபு” என்று குறிப்பிடுகிறார் (1:11). மரபுக் கருத்துப்படி யாக்கோபு ஆண்டவரின் சகோதரர்; எருசலேம் திருச்சபையின் தலைவர்; பவுலுடன் தொடர்பு கொண்டிருந்தவர் (கலா 1:19; 2:9,12; திப 15:13).

ஆனால் இக்கருத்துக்களைப் பல அறிஞர்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள்; ஏனெனில் கடிதத்தின் நடை, கருத்துக்கள், இயேசுவோடுள்ள நெருக்கமான உறவு பற்றிய குறிப்பின்மை போன்றவற்றின் அடிப்படையில் இத்திருமுகத்தின் ஆசிரியர் வேறு ஒரு யாக்கோபாக இருக்கலாம் என எண்ணுகிறார்கள்.

உள்ளடக்கம்

இத்திருமுகத்தின் முக்கியக் கருத்து கிறிஸ்தவர் ஒருவர் தம் அன்றாடக் கடமைகளைப் பிழையின்றிச் செய்து முடிக்க வேண்டும் என்பதாகும். உண்மையான கிறிஸ்தவ வாழ்வு தன்னல மறுப்பையும் தூய வாழ்வையும் உள்ளடக்கியது (1:1-27). நம்பிக்கை, பிறரன்பு போன்றவை செயல்களில் காட்டப்பட வேண்டும். செயலற்ற நம்பிக்கை செத்த நம்பிக்கை (2:1-26). நாவை அடக்குதல், அமைதி வாழ்விற்கான ஆர்வம் ஆகியவை ஒருவரை ஞானியாகவும், தூயவராகவும் மாற்றுகின்றன (3:1-18). பாவம் பிளவின் காரணம். திருமுகத்தின் இறுதியில் அனைவருக்கும் எழுச்சியுரை தரப்படுகிறது (4-5).

அமைப்பு

  1. முன்னுரை (வாழ்த்து) 1:1
  2. சோதனைகள் 1:2 - 18
  3. அறிவுரையும் எச்சரிக்கைகளும் 1:19 - 5:20