ஒப்பற்ற மீட்பு
1எனவே, நாம் கேட்டறிந்த செய்தியினின்று வழுவிவிடாதிருக்குமாறு, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
2ஏனெனில், வானதூதர்வழி எடுத்துரைக்கப்பட்ட செய்தி உறுதியாயிருந்தது. அதை மீறிய எவரும், அதற்குக் கீழ்ப்படியாத எவரும் தகுந்த தண்டனை பெற்றனர்.
3அவ்வாறிருக்க, இத்தகைய ஒப்பற்ற மீட்பைப்பற்றி நாம் அக்கறையற்றிருப்போமானால், தண்டனையிலிருந்து எப்படி தப்பமுடியும்? இம்மீட்புச் செய்தியை முதன்முதல் அறிவித்தவர் ஆண்டவரே. இதைக் கேட்டவர்களும் இதனை நமக்கு உறுதிப்படுத்தியுள்ளனர்.
4கடவுளும் அடையாளங்கள், அருஞ்செயல்கள், பல்வேறு வல்ல செயல்கள் மூலமாகவும், தம் திருவுளப்படி தூய ஆவியின் கொடைகளைப் பகிர்ந்தளித்ததன் மூலமாகவும் இதற்குச் சான்று பகர்ந்துள்ளார்.
கிறிஸ்து நம் மீட்பர்
5வரவிருக்கும் உலகு பற்றிப் பேசுகிறோம். கடவுள் அதனை வானதூதரின் அதிகாரத்திற்குப் பணியச் செய்யவில்லை.
6இதற்குச் சான்றாக மறைநூலில் ஓரிடத்தில் சொல்லப்பட்டுள்ளது இதுவே:
“மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு
அவர்கள் யார்?
மனிதப் பிறவிகளை நீர்
ஒரு பொருட்டாக எண்ணுவதற்கு
அவர்கள் எம்மாத்திரம்?
7ஆயினும், நீர் அவர்களை
வானதூதரை விடச்
சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்;
மாட்சியையும் மேன்மையையும்
அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர்.
உமது கை படைத்தவற்றுக்கு மேலாக
அவர்களை நியமித்தீர்.
8எல்லாவற்றையும் அவர்கள்
பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர்.”
அனைத்தையும் மனிதருக்கு அடிபணியச் செய்தார் என்பதால், எதையும் பணியாதிருக்க விட்டுவிடவில்லை எனலாம். எனினும், அனைத்தும் மனிதருக்கு இன்னும் அடிபணியக் காணோம்.
9நாம் காண்பதோ சிறிது காலம் வானதூதரைவிடச் சற்றுத் தாழ்ந்தவராக்கப்பட்ட இயேசுவையே. இவர் துன்புற்று இறந்ததால், மாட்சியும் மாண்பும் இவருக்கு முடியாகச் சூட்டப்பட்டதைக் காண்கிறோம். இவ்வாறு கடவுளின் அருளால் அனைவருடைய நலனுக்காகவும் இவர் சாவுக்கு உட்பட வேண்டியிருந்தது.
10கடவுள் எல்லாவற்றையும் தமக்கென்று தாமே உண்டாக்கினார். அவர், மக்கள் பலரை மாட்சியில் பங்குகொள்ள அழைத்துச் செல்ல விரும்பியபோது, அவர்களது மீட்பைத் தொடங்கி வழி நடத்துபவரைத் துன்பங்கள் மூலம் நிறைவுள்ளவராக்கினார். இது ஏற்ற செயலே.
11தூய்மையாக்குகிறவர், தூய்மையாக்கப்படுவோர் அனைவருக்கும் உயிர்முதல் ஒன்றே. இதனால் இயேசு இவர்களைச் சகோதரர் சகோதரிகள் என்று அழைக்க வெட்கப்படவில்லை.
12“உமது பெயரை என் சகோதரர்
சகோதரிகளுக்கு அறிவிப்பேன்;
சபை நடுவே உம்மைப்
புகழ்ந்து பாடுவேன்”
என்று கூறியுள்ளார் அன்றோ!
13மேலும்,
“நான் அவர்மேல் என் நம்பிக்கையை
நிலை நிற்கச் செய்வேன்”
என்றும்,
“இதோ, நானும் கடவுள் எனக்கு
அளித்த குழந்தைகளும்”
அவ்வாறு செய்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
14ஊனும் இரத்தமும் கொண்ட அப்பிள்ளைகளைப் போல் அவரும் அதே இயல்பில் பங்கு கொண்டார். இவ்வாறு சாவின்மேல் ஆற்றல் கொண்டிருந்த அலகையைச் சாவின் வழியாகவே அழித்து விட்டார்.
15வாழ்நாள் முழுவதும் சாவுபற்றிய அச்சத்தினால் அடிமைப்பட்டிருந்தவர்களை விடுவித்தார்.
16ஏனெனில், அவர் வானதூதருக்குத் துணை நிற்கவில்லை. மாறாக, ஆபிரகாமின் வழிமரபினருக்கே துணை நின்றார் என்பது கண்கூடு.
17ஆதலின், கடவுள் பணியில் அவர் இரக்கமும், நம்பிக்கையும் உள்ள தலைமைக் குருவாயிருந்து, மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாகுமாறு எல்லாவற்றிலும் தம் சகோதர் சகோதரிகளைப்போல் ஆக வேண்டிதாயிற்று.
18இவ்வாறு தாமே சோதனைக்கு உள்ளாகித் துன்பப்பட்டதனால் சோதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய அவர்வல்லவர்.
2:6-8 திபா 8:4-6. 2:12 திபா 22:22. 2:13 எசா 8:17,18.