ஆண்டவர் அளிக்கும் பயிற்சி

1எனவே, திரண்டு வரும் மேகம் போல் இத்தனை சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து நிற்க எந்தச் சுமையையும், நம்மைப் பற்றிக் கொண்டிருக்கும் எந்தப் பாவத்தையும் உதறித்தள்ளிவிட்டு, நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மனஉறுதியோடு ஓடுவோமாக.
2நம்பிக்கையைத் தொடங்கி வழி நடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மீது கண்களைப் பதிய வைப்போம். அவர் தாம் அடையவிருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, இழிவையும் பொருட்படுத்தாமல் சிலுவையை ஏற்றுக்கொண்டார். இப்போது, கடவுளது அரியணையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.
3பாவிகளால் தமக்கு உண்டான எந்த எதிர்ப்பையும் மன உறுதியோடு தாங்கிக்கொண்ட அவரை எண்ணிப்பாருங்கள். அப்போது நீங்கள் மனம் சோர்ந்து தளர்ந்து போக மாட்டீர்கள்.
4பாவத்திற்கு எதிரான போராட்டத்தில், இரத்தம் சிந்தும் அளவுக்கு நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை.
5தம் பிள்ளைகளிடம் பேசுவதுபோல் இறைவன் உங்களுக்குத் தந்த பின்வரும் அறிவுரையை நீங்கள் மறந்துவிட்டீர்கள்:

“பிள்ளாய், ஆண்டவர் உன்னைக்

கண்டித்துத் திருத்துவதை

வேண்டாம் எனத் தள்ளிவிடாதே.

அவர் கண்டிக்கும்போது

தளர்ந்து போகாதே.”

6“தந்தை தாம் ஏற்றுக்கொண்ட

மக்களைத் தண்டிக்கிறார்;

ஆண்டவர் தாம் யாரிடம்

அன்பு கொண்டிருக்கிறாரோ

அவர்களைக் கண்டிக்கிறார்.”

7திருத்தப்படுவதற்காகத் துன்பங்களைத் தாங்கிக் கொள்ளுங்கள். கடவுள் உங்களைத் தம் பிள்ளைகளாக நடத்துகிறார். தந்தை தண்டித்துத் திருத்தாத பிள்ளை உண்டோ?
8எல்லாப் பிள்ளைகளுக்கும் அளிக்கப்படும் தண்டனை உங்களுக்கு அளிக்கப்படாவிட்டால், நீங்கள் உண்மையான பிள்ளைகளாய் இருக்க மாட்டீர்கள்; முறை தவறிப் பிறந்த பிள்ளைகளாகவே இருப்பீர்கள்.
9இவ்வுலகத் தந்தையர் நம்மைத் தண்டித்துத் திருத்தினார்கள். நாமும் அவர்களுக்கு மதிப்புக் கொடுத்து வந்தோம். அவ்வாறாயின், விண்ணகத் தந்தைக்கு நாம் எவ்வளவோ பணிந்து வாழ வேண்டும் அன்றோ?
10மேலும், இவ்வுலகத் தந்தையர் தங்களுக்கு நலமெனத் தோன்றின வகையில் சிறிது காலம் நம்மைத் தண்டித்துத் திருத்தினார்கள். ஆனால் கடவுள், நமது நலனுக்காக, நாமும் அவருடைய தூய்மையில் பங்குகொள்ள வேண்டுமென்பதற்காகவே நம்மைத் தண்டித்துத் திருத்துகிறார்.
11இவ்வாறு திருத்தப்படுவது இப்போது மகிழ்ச்சிக்குரியதாய் இராமல், துயரத்துக்குரியதாகவே தோன்றும். ஆனால் பின்னர், இவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் அமைதியையும் நேர்மையான வாழ்வையும் பயனாகப் பெறுவர்.
12எனவே,

“தளர்ந்துபோன கைகளைத்

திடப்படுத்துங்கள்,

தள்ளாடும் முழங்கால்களை

உறுதிப்படுத்துங்கள்.”

13“நீங்கள் நேர்மையான பாதையில்

நடந்து செல்லுங்கள்.”

அப்போதுதான் ஊனமாய்ப் போன கால்மூட்டு பிசகாமல் குணமடையும்.

கடவுளின் அருளைப் புறக்கணித்து விடாதபடி எச்சரிக்கை

14அனைவருடனும் அமைதியாய் இருக்க முயலுங்கள்; தூய்மையை நாடுங்கள். தூய்மையின்றி எவரும் ஆண்டவரைக் காணமாட்டார்.
15உங்களுள் எவரும் கடவுளின் அருளை இழந்துவிடாமலிருக்கப் பார்த்துக்கொள்ளுங்கள். கசப்பான நச்சுவேர் எதுவும் உங்களுக்குள் முளைத்து, தொல்லை கொடுக்காதபடியும் அதனால் பலர் கெட்டுப்போகாதபடியும் பார்த்துக் கொள்ளுங்கள்.
16உங்களுள் யாரும் காமுகராயும் ஏசாவைப்போல் உலகப் போக்கைப் பின்பற்றுபவராயும் இராதபடி கவனமாயிருங்கள். இந்த ஏசா, ஒரே ஒரு வேளை உணவுக்காகத் தம் தலைப்பேற்று உரிமையை விற்றுப் போட்டார்.
17பின்னர், அவர் தமக்குரிய ஆசியை உரிமைப் பேறாக்கிக் கொள்ள விரும்பியும் அது அவருக்குக் கிடைக்கவில்லை; கண்ணீர் சிந்தி அதை நாடியும் அந்நிலையை மாற்ற வாய்ப்பு ஏதும் கிட்டவில்லை. இது உங்களுக்குத் தெரியும் அல்லவா!
18நீங்கள் வந்து சேர்ந்திருப்பது தொட்டுணரக்கூடிய, தீப்பற்றியெரிகின்ற, இருள்சூழ்ந்த, மந்தாரமான, சுழல்காற்று வீசுகின்ற சீனாய் மலை அல்ல.
19அங்கு எக்காளம் முழங்கிற்று; பேசும் குரலொன்று கேட்டது. அக்குரலைக் கேட்டவர்கள் அதற்குமேல் தங்களோடு அது ஒரு வார்த்தைகூடப் பேசவேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள்.
20ஏனெனில்,

“இம்மலையைக் கால்நடை

தொட்டால்கூட அதைக் கல்லால்

எறிந்து கொல்ல வேண்டும்”

என்று அக்குரல் கொடுத்த கட்டளையை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
21“நான் அஞ்சி நடுங்குகிறேன்” என்று மோசேயே சொல்லுமளவுக்கு அக்காட்சி அச்சம் விளைவித்தது.
22ஆனால், நீங்கள் வந்து சேர்ந்திருக்கும் சீயோன் மலை வாழும் கடவுளின் நகர்; விண்ணக எருசலேம். அதனைப் பல்லாயிரக் கணக்கான வானதூதர் சூழ்ந்துள்ளனர்.
23விண்ணகத்தில் பெயர் எழுதப்பட்டுள்ள தலைப்பேறானவர்களின் திருச்சபை விழாக் கூட்டமென அங்கே கூடியுள்ளது. நிறைவுபெற்ற நேர்மையாளர்களோடு சேர்ந்து, அனைவருக்கும் நடுவரான கடவுள் முன்னிலையிலும்,
24புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசுவின் முன்னிலையிலும் நிற்கிறீர்கள். ஆபேலின் இரத்தத்தைப் போலன்றிச் சிறந்த முறையில் குரலெழுப்பும் இயேசுவின் இரத்தத்தினால் தெளிக்கப்பட்டிருக்கிறீர்கள்.
25எனவே, கடவுளின் வார்த்தைக்குச் செவி சாய்க்க மறுத்து விடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். இவ்வுலகில் அவரது எச்சரிக்கைக்குச் செவிசாய்க்க மறுத்தவர்கள் தண்டனைக்குத் தப்பவில்லை. அவ்வாறெனில் விண்ணுலகிலிருந்து பேசுபவரைப் புறக்கணித்தால், நாம் எவ்வாறு தப்பித்துக் கொள்ள முடியும்?
26அவருடைய குரல் அன்று மண்ணுலகை அதிரச் செய்தது. இப்பொழுது அவர்,

“இன்னும் ஒரு முறை மண்ணுலகை

மட்டும் அல்ல, விண்ணுலகையும்

நடுக்கமுறச் செய்வேன்”

என்று உறுதியாக வாக்களித்துள்ளார்.
27“இன்னும் ஒரு முறை” என்பது, அதிர்பவை யாவும் படைக்கப்பட்டவை என்னும் முறையில் அகற்றப்படும் என்பதை எடுத்துக் காட்டுகிறது. அப்போது அசையாதவையே நிலைத்து நிற்கும்.
28ஆதலின், அசைக்கமுடியாத அரசைப் பெற்றுக்கொண்ட நாம், நன்றியுள்ளவர்களாய் இருப்போம். நன்றியுணர்வோடும், இறைப்பற்றோடும், அச்சத்தோடும் கடவுளுக்கு உகந்தமுறையில் அவருக்கு வழிபாடு செய்வோம்.
29ஏனெனில்,

“நம் ஆண்டவர்

அழிக்கும் நெருப்பு போன்றவர்.”


12:5-6 யோபு 5:17; நீமொ 3:11,12. 12:12 எசா 35:3. 12:16 தொநூ 25:29-34. 12:17 தொநூ 27:30,40. 12:18-19 விப 19:16-22; 20:18-21; இச 4:11,12; 5:22-27. 12:20 விப 19:12,13. 12:21 இச 9:19. 12:24 தொநூ 4:10. 12:25 விப 20:22. 12:26 ஆகா 2:6. 12:29 இச 4:24.