தீத்து முன்னுரை


ஆயர்பணித் திருமுகங்களில் மூன்றாவதாக வருவது தீத்துக்கு எழுதிய இந்தத் திருமுகம். விவிலிய வரிசையில் மூன்றாவதாக வந்தாலும் இதுவே முதலில் எழுதப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிகிறது. இந்நூல்களைத் தொகுத்தவர்கள் அவை எழுதப்பட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டு அல்ல, அவற்றின் அளவை அடிப்படையாகக் கொண்டே வரிசைப்படுத்தினார்கள். தீத்து என்பவர் பிற இனத்துக் கிறிஸ்தவர். அவர் பவுலுடன் அந்தியோக்கியாவிலிருந்து எருசலேம் சென்றார் (கலா 2:1; திப 15:2); பவுலின் மூன்றாம் பயணத்தின்போது உடன் சென்றார் (2 கொரி 1:13; 7:6; 13:4).

அவர் கிரேத்துத் தீவின் ஆயராக விளங்கும்போது இத்திருமுகம் எழுதப்பட்டதாகச் சொல்லப்பட்டுள்ளது. அங்கே மூப்பர்கள், ஆயர்களை நியமிக்கும் பொறுப்பு இவரிடம் இருந்தது.

உள்ளடக்கம்

கிரேத்துத் தீவில் திருச்சபை வளர்ச்சி குன்றிய சூழ்நிலையில் தீத்து சரியான உதவியாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனப் பணிக்கிறார் இத்திருமுக ஆசிரியர் (1:5-16); கிரேத்துச் சபையிலுள்ள முதியவர், இளைஞர், அடிமைகள் ஆகியோருக்கு எப்படிப் போதிப்பது என எடுத்துக் காட்டுகிறார்; இறுதியாகக் கிறிஸ்தவ நல்லொழுக்கத்துடன் அமைதியுடனும் அன்புடனும் இருத்தல், பகைமை, வாக்குவாதம், பிளவுகள் ஆகியவற்றைத் தவிர்த்தல் ஆகியவை குறித்துப் பேசுகிறார்; கிரேத்து மக்கள் தங்கள் வாழ்வை மாற்றிக்கொள்ளக் கிறிஸ்துவின் மீட்பளிக்கும் பலியே முன் மாதிரி என்கிறார்.

அமைப்பு

  1. முன்னுரை (வாழ்த்து) 1:1 - 4
  2. கிரேத்துவில் தீத்துவின் பணி 1:5 - 16
  3. திருச்சபையில் பல்வேறு குழுக்களின் கடமைகள் 2:1 - 15
  4. அறிவுரைகளும் எச்சரிக்கைகளும் 3:1 - 11
  5. முடிவுரை 3:12 - 15