2 தெசலோனிக்கர் முன்னுரை


ஆசிரியர்

இத்திருமுகத்தைப் பவுல் எழுதினாரா, வேறொருவர் எழுதினாரா என்பது பற்றிக் கருத்து வேறுபாடு உள்ளது. பவுல் இதனை எழுதவில்லை என்பதற்குச் சான்றுகள் உள்ளது போலவே, அவரே எழுதினார் என்பதற்கும் சான்றுகள் உள்ளன. எனினும் அகச் சான்றுகளை வைத்துப் பார்க்கும்போது, பவுல் இதனை நேரடியாக எழுதியிருக்க முடியாது என்று சொல்லத் தோன்றுகிறது. பவுலின் உள்ளக் கிடக்கையை அறிந்து கொண்டு, அவருடைய உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அவர் கருத்துக்களில் ஊன்றி நின்று, திருமுகம் எழுதப்பட்ட காலக்கட்டத்தில் இரண்டாம் வருகைபற்றிப் பவுல் என்ன கூறியிருப்பார் என்பதை அவருடைய சீடர் ஒருவர் பவுல் பெயரால் திருமுகமாக எழுதியுள்ளார் எனக் கருத இடமிருக்கிறது. இவ்வாறு எழுதுவது அந்தக் காலத்தில் முறையாகக் கருதப்பட்டது.

சூழலும் நோக்கமும்

தெசலோனிக்கருக்கு எழுதிய முதலாம் திருமுகம் பல ஐயப்பாடுகளை உருவாக்கிற்று. அவை குறிப்பாக இயேசு கிறிஸ்து மீண்டும் வருதலைப் பற்றியனவாக இருந்தன. முதல் திருமுகத்தில் ஆறுமுறை கிறிஸ்துவின் வருகை பற்றிப் பேசப்பட்டிருந்தது. அது விரைவில் நிகழும் என அத்திருமுகத்தில் சொல்லப்பட்டிருந்தது. இந்தப் பின்னணியில் இறுதி வருகை ஏற்கெனவே நிகழ்ந்துவிட்டதென்று சிலர் நினைத்தனர்; வேறு சிலர் அது நெருங்கி வந்து விட்டது எனக் கருதிச் சோம்பித் திரிந்தனர். இக்கருத்துக்களை மாற்றிட இரண்டாம் திருமுகம் தெசலோனிக்கருக்கு எழுதப்பட்டது.

இது எழுதப்பட்ட காலத்தைக் குறிப்பிட்டுச் சொல்வது கடினம். கி.பி. 52ஆம் ஆண்டுக்கும் 100ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இது எழுதப்பட்டிருக்க வேண்டும்.

உள்ளடக்கம்

இறுதி வருகை ஏற்கெனவே நிகழ்ந்துவிட்டதென்ற அவர்கள் எண்ணத்தை மாற்ற, ஆண்டவரின் இறுதி வருகை நிகழுமுன் கிளர்ச்சி ஏற்படும் என்றும், நெறிகெட்ட மனிதன் தோன்றுவான் என்றும், அவன் கிறிஸ்துவுக்கு எதிராய் இருப்பான் என்றும் திருமுக ஆசிரியர் கூறுகிறார்.

இவ்வருகையை முன்னிட்டுத் தெசலோனிக்காவில் பலர் வேலை செய்யாமல் சோம்பித் திரிந்தனர். அவர்கள் நிலையாய் இருந்து, தாங்கள் கற்றுக்கொண்ட உண்மைகளின்படி வாழப் பணிக்கிறார் ஆசிரியர்; வேலை செய்யாது சோம்பித் திரிவோர் உழைத்து உண்ணுமாறு கட்டளை இடுகின்றார்.

அமைப்பு

  1. முன்னுரை (வாழ்த்து) 1:1 - 2
  2. புகழாரம் 1:3 - 12
  3. கிறிஸ்துவின் வருகை குறித்து அறிவுரை 2:1 - 17
  4. கிறிஸ்தவ வாழ்வுக்குப் பரிந்துரை 3:1 - 15
  5. முடிவுரை (இறுதி வாழ்த்து) 3:16 - 18