3. கிறிஸ்துவின் வருகை குறித்து அறிவுரை

ஆண்டவரின் வருகைக்கான அடையாளங்கள்

1சகோதர சகோதரிகளே! நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் வருகையைப் பற்றியும் அவரோடு நாம் ஒன்று கூடுவதைப்பற்றியும் உங்களுக்கு நாங்கள் கூற விழைவது:
2ஆண்டவருடைய நாள் வந்துவிட்டது என, இறைவாக்காகவோ அருளுரையாகவோ நாங்கள் எழுதிய திருமுகத்தின் செய்தியாகவோ யாராவது சொன்னால், நீங்கள் உடனே மனங்கலங்கி நிலைகுலைய வேண்டாம்; திகிலுறவும் வேண்டாம்.
3எவரும் உங்களை எவ்வகையிலும் ஏமாற்ற இடம் கொடாதீர். ஏனெனில், இறைவனுக்கு எதிரான கிளர்ச்சி முதலில் வந்தே தீரும். பின்னர், நெறிக்கெட்ட மனிதன் வெளிப்பட வேண்டும். அவன் அழிவுக்குரியவன்.
4தெய்வம் என வழங்கப்படுவதையும் வழிபாட்டுக்குரிய அனைத்தையும் எதிர்த்து, அவற்றுக்கு மேலாகத் தன்னை அவன் உயர்த்திக் கொள்வான். அதோடு கடவுளின் கோவிலில் அமர்ந்து கொண்டு, தன்னைக் கடவுளாகவும் காட்டிக் கொள்வான்.
5நான் உங்களோடு இருந்தபொழுதே இவற்றைச் சொல்லிவந்தேன் என்பது உங்களுக்கு நினைவில்லையா?
6அவனுக்குக் குறித்த காலம் வருமுன் அவன் வெளிப்படாதபடி, இப்பொழுது அவனைத் தடுத்து வைத்திருப்பது எதுவென்பது உங்களுக்குத் தெரியுமே!
7நெறிகேட்டை விளைவிக்கும் ஆற்றல் ஏற்கெனவே மறைவாகச் செயல்பட்டு வருகிறது. ஆனால், அதை இதுவரை தடுத்து வைத்திருப்பது அகற்றப்படும் வரை, அது இப்படியே செயலாற்றிக் கொண்டிருக்கும்.
8பின்னரே நெறிகெட்டவன் தோன்றுவான். ஆண்டவர் தம் வாயினால் ஊதி அவனை ஒழித்து விடுவார்; அவர் வரும்போது அவரது தோற்றமே அவனை அழித்துவிடும்.
9அவன் சாத்தானின் ஆற்றலால் வருவான். அவன் எல்லா வகைப் போலியான வல்ல செயல்களையும் அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் செய்வான்.
10அழிந்து போகிறவர்களை முற்றிலும் ஏமாற்றித் தீங்கிழைப்பான். ஏனெனில், அவர்கள் தங்களை மீட்க வல்ல உண்மையின்பால் ஆர்வம் காட்ட மறுத்தனர்.
11ஆகவே, பொய்யானதை அவர்கள் நம்பும்வண்ணம் கடவுள் அவர்களை வஞ்சக ஆற்றலுக்கு உட்படுத்தினார்.
12இவ்வாறு, உண்மையைப் பற்றிக்கொண்டு வாழாது தீமையில் இன்பம் காணும் அனைவரும் தீர்ப்புக்கு உள்ளாவர்.

மீட்புப்பெறத் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள்

13ஆண்டவரால் அன்புகூரப்பட்ட சகோதர சகோதரிகளே! நாங்கள் கடவுளுக்கு உங்கள்பொருட்டு என்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். ஏனெனில், தூய ஆவியால் தூய்மையாக்கப்பட்டு, நீங்கள் உண்மையை நம்பி மீட்பு அடையும்படி, கடவுள் உங்களை முதன்முதலாகத் தேர்ந்துகொண்டார்.
14நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும்பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார்.
15ஆகவே அன்பர்களே! எங்கள் வாய்மொழி வழியாகவோ திருமுகம் வழியாகவோ அறிவிக்கப்பட்ட முறைமைகளைப் பற்றிக் கொண்டு அவற்றில் நிலையாயிருங்கள்.
16நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவும், நம்மீது அன்புகூர்ந்து தம் அருளால் நிலையான ஆறுதலையும் எதிர்நோக்கையும் அளித்த நம் தந்தையாம் கடவுளும்
17உங்கள் உள்ளங்களுக்கு ஊக்கமளித்து, நல்லதையே சொல்லவும் செய்யவும் உங்களை உறுதிப்படுத்துவார்களாக!

2:1 1 தெச 4:15-17. 2:4 தானி 11:36; எசே 28:2. 2:8 எசா 11:4. 2:14 திப 17:5.